இந்தியா - சீனா எல்லை பதற்றம்: எல்லையில் பலசாலியாகப் போட்டியிடும் நாடுகள் 

இந்தியா - சீனா எல்லை மோதல்

பட மூலாதாரம், Getty Images

இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய தங்கள் எல்லைப் பகுதியில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்குவதில் இந்தியாவும் சீனாவும் போட்டியிட்டுக் கொண்டுள்ளன.

இந்தியாவின் அதிக உயரமான இடத்தில் உள்ள விமானத் தளத்திற்குச் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டதுதான், ஜூன் மாதம் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது. அந்த மோதலில் இந்திய வீரர்கள் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

டார்புக்-ஷியோக்-தௌலத் பெக் ஓல்டி (DSDBO) சாலை 255 கிலோ மீட்டர் (140 மைல்) நீளம் கொண்டது. மலைப் பகுதிகள் வழியாக அமைந்துள்ள இந்தச் சாலை, கடல்மட்டத்தில் இருந்து 5000 மீட்டர் உயரத்தில் லடாக் பகுதியில் உள்ளது. சுமார் இரண்டு தசாப்த கால பணிகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் இந்தப் பணி நிறைவு பெற்றது. இந்தச் சாலை மூலம், மோதல் ஏற்படும் காலத்தில் ராணுவத்தினரையும், அவர்களுக்குத் தேவையான சாதனங்கள், தளவாடங்களையும் அங்கு விரைவாகக் கொண்டு போய் சேர்க்க முடியும்.

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதல், அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிப்பதாக இருந்தது. தங்களுக்கு இடையிலான 3,500 கிலோமீட்டர் நீளமான எல்லை குறித்து இந்த நாடுகளுக்கு இடையில் ஒருபோதும் ஒருமித்த கருத்து இருந்தது கிடையாது. கரடுமுரடான, வாழத் தகுதியற்ற பகுதிகளில் பல இடங்களில், உலகின் மிகப் பெரிய இந்த இரு நாடுகளின் ராணுவத்தினரும் நேருக்கு நேர் எதிர்கொண்டு நிற்கிறார்கள்.

இரு நாடுகளையும் பிரிக்கும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை (எல்.ஏ.சி.) ஒட்டி சாலைகள், ரயில் பாதைகள், விமான தளங்களை உருவாக்குவதில் இந்தியாவும், சீனாவும் நிறைய செலவு செய்திருக்கின்றன. அந்தப் பகுதியில் நவீன ராணுவத் தளவாட வசதிகளையும் அவை ஏற்படுத்தியுள்ளன.

DSDBO சாலை உள்பட, இந்தியாவின் சமீபத்திய கட்டமைப்புப் பணிகள் சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பல ஆண்டுகளாக சீனா தனது எல்லையில் கட்டமைப்புப் பணிகளை செய்து வருகிறது. தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, திட்டமிடப்பட்டு இந்த கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுவதாக இரு தரப்புகளுமே கருதுகின்றன. ஒரு பக்கத்தில் பெரிய ஒரு உள்கட்டமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டால், மறு பக்கத்தில் கோபம் எழும் காரணத்தால் பதற்றம் உருவாகி வருகிறது.

2017 கோடைக்காலத்தில், டோக்லாம் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் சூழ்நிலை உருவானது. அது லடாக்கில் இருந்து கிழக்கில் வெகு தொலைவில் உள்ள பகுதி. அங்கும் கட்டமைப்புப் பணி தொடர்பாகத்தான் பிரச்சனை உருவானது. இந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தின் அருகாமை வரையில் தனது எல்லைப்புற சாலையை சீனா விரிவாக்கம் செய்ய முற்பட்டதால் அப்போது பிரச்சனை ஏற்பட்டது.

தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது இந்தியா

பிராந்திய தலைநகரான லே பகுதியில் 2008ல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட முக்கிமான தௌலத் பெக் ஓல்டி விமான தளத்தை இணைக்கும் வகையில், DSDBO சாலைப் பணி முடிக்கப்பட்டதால், இந்தியாவின் தளவாடங்களை சீக்கிரத்தில் கொண்டு செல்வது சாத்தியமாகியுள்ளது. அனைத்து பருவநிலைகளையும் தாக்குபிடிக்கக் கூடிய வகையிலான, கரகோரம் கணவாயில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சாலை, கிழக்கு லடாக்கில் எல்.ஏ.சி.க்கு இணையான கோட்டில் செல்லக் கூடியதாக உள்ளது.

தௌலத் பெக் ஓல்டியில் நீண்ட காலமாகவே இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. விமானத் தளம் மறு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, சாலைப் பணிகளை முடிப்பதற்கு முன்பு வரையில், அங்கிருக்கும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக, விண்ணில் இருந்து கீழே இறக்குவதன் மூலம் மட்டுமே அத்தியாவசிய தேவைகள் அளிக்கப்பட்டு வந்தன. அங்கிருந்து எதையும் அகற்ற முடியாது என்பதால், "தளவாடங்களின் கல்லறையாக'' அந்த விமானத் தளம் இருந்து வந்தது.

எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளை, எல்லைக்கு உள்புறத்தில் உள்ள ராணுவத்தினருக்கான விநியோக மையங்களுடன் இணைப்பதற்கான கூடுதல் சாலைகள் மற்றும் பாலங்கள் இப்போது உருவாக்கப் படுகின்றன. எனவே, ரோந்து பணியில் இருக்கும் இந்திய ராணுவத்தினர் இன்னும் முன்னேறிச் சென்று பணியில் ஈடுபட முடியும். சாதனங்களை முன்னே கொண்டு செல்ல முடியும்.

உலகின் மிக உயரமான தௌலத் பெக் ஓல்டி விமானதளத்தில், பெரிய விமானங்களை இந்தியா தரையிறக்கி வைத்துள்ளது.

சமீபத்தில் மோதல்கள் நடந்தபோதிலும், தன்னுடைய கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்போம் என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பகுதியில் சீன எல்லையை ஒட்டி பகுதிகளில் சாலைகளை உருவாக்க, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 12 ஆயிரம் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இந்தியா - சீனா எல்லை மோதல்: சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கட்டுமானங்களை உருவாக்க போட்டியிடுவது ஏன்?

பட மூலாதாரம், INDIAN AIR FORCE/TWITTER

தௌலத் பெக் ஓல்டியில் நீண்ட காலமாக

பல ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், சீனாவுக்குச் சாதகமாக உள்ள வசதிகளுக்கு இணையாக தன்னுடைய வசதிகளையும் பெருக்கிக் கொள்வதற்கு இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் பெருமளவில் சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பு பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 73 சாலைகள் மற்றும் 125 பாலங்கள் உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் வேகமாக நடைபெறவில்லை. இதுவரையில் 35 சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டிபகர் - லிபுலேக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் டாம்ப்பிங் - யாங்க்ட்ஜே சாலைகள் அவற்றில் முக்கியமானவையாக உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 11 சாலைகளின் பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

"பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த'' ரயில் வழித்தடங்களுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மிஸ்ஸமரி - டெங்கா - டவாங் மற்றும் பிலாஸ்பூர் - மண்டி - மணாலி - லே பிரிவு பாதைகள் இதில் அடங்கும். சீனா எல்லையை ஒட்டி அமையும் இந்தப் பாதைகள், கனரக ராணுவத் தளவாடங்களை அங்கு கொண்டு செல்ல இந்திய ராணுவத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

சீனா எல்லையை ஒட்டிய பகுதியில் சாலை கட்டமைப்பு உருவாக்குவதை இந்தியா விரைவுபடுத்தியுள்ளது.

விமானப் போக்குவரத்து வசதிகளைப் பொருத்த வரையில், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் இந்தியாவுக்கு 25 விமான தளங்கள் உள்ளன. ஆனால் இப்போது நவீன தரையிறங்கல் தளங்களை (ஏ.எல்.ஜி.) விரிவுபடுத்துவதில் அண்மைக்காலமாக இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

2018ல் பயன்பாட்டில் உள்ள 8 ஏ.எல்.ஜி.களை நவீனப்படுத்துவதாக இந்தியா அறிவித்தது. எல்லையை ஒட்டிய பகுதியில் புதிதாக 7 ஏ.எல்.ஜி. தளங்களை அமைப்பதாகவும் அப்போது அறிவிக்கப்பட்டது. சீனா எல்லையை ஒட்டிய இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அசாம் மாநிலத்தில் சாபுவா என்ற முக்கியமான இந்திய விமானப் படை தளத்தில் சுகோய்-30 நவீன ஜெட் போர் விமானங்களும் சேட்டக் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டன. அந்த விமானப்படை தளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக இருந்தாலும், கரடுமுரடான நிலப்பரப்பு, நிலம் கையகப்படுத்தல் பிரச்சனைகள், நிர்வாக ரீதியிலான தாமதங்கள், பட்ஜெட் பற்றாக்குறை போன்றவை காரணமாக இந்தியாவின் கட்டமைப்பு முயற்சிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, இந்தியா இன்னும் நிறைய பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

சீனாவின் வேகமான தொடக்கம்

தனது திறமையான கட்டமைப்பு தொழில்நுட்பங்களை சமீப காலமாக சீனா பயன்படுத்தி, எல்லையை ஒட்டி விமான தளங்கள், கன்டோன்மென்ட்கள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறது.

இமயமலையை ஒட்டிய பகுதியில் 1950களிலேயே சீனா சாலை அமைக்கத் தொடங்கிவிட்டது. இப்போது திபத் மற்றும் யுன்னான் மாகாணத்தில் சீனாவுக்கு விரிவான சாலை மற்றும் ரயில் வழித்தட வசதிகள் உள்ளன.

2016ஆம் ஆண்டில் இருந்து இந்தியா, பூட்டான் மற்றும் நேபாள எல்லைகளில் தனது போக்குவரத்து தொடர்பு வசதிகளை சீனா அதிகரித்துக் கொண்டு வருகிறது.

ஜின்ஜியாங் - திபத் பழைய சாலையை ஜி219 தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பதற்கான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்த சாலை ஏறத்தாழ சீனா - இந்தியா எல்லை ஒட்டியதாகவே இருக்கும். இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் அருகே மெடாக் மற்றும் ஜாயு இடையில் கான்கிரீட் சாலையை சீனா அமைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தப் பணி நிறைவடையும் என்று சீனா கூறியுள்ளது.

திபத்தில் இரண்டாவது பெரிய நகரமான ஷிகாட்சேவில் இருந்து நியிங்ச்சி வழியாக செங்க்டு வரையில், இந்திய எல்லைக்கு நெருக்கமாக புதிய ரயில் வழித்தடம் உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இமயமலைப் பகுதியில் உள்ள இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் அருகில் வர்த்தக மையமாக இருக்கும் யடோங் மற்றும் ஷிகாட்சே இடையில் மற்றொரு ரயில் வழித்தடத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள சிக்கிமில் இந்தப் பகுதியில் மே மாத தொடக்கத்தில் இந்தியா - சீனா ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner image reading 'more about coronavirus'
Banner

கடினமான மலைப்பாங்கான பகுதியாக இருந்தாலும், அதிக வேகத்தில் ரயில்கள் செல்வதற்கு ஏற்ற ரயில் வழித் தடங்களை சீனா உருவாக்கியுள்ளது.

இந்தியாவை நோக்கியவாறு சீனாவில் சுமார் ஒரு டஜன் விமான தளங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து தளங்கள் திபேத்தில், இரட்டைப் பயன்பாட்டு அம்சங்கள் கொண்டவையாக உள்ளன. அதாவது மக்கள் போக்குவரத்து மற்றும் ராணுவ தேவைகளுக்கான பயன்பாடு என இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அங்கு மூன்று புதிய விமான நிலையங்களை சீனா உருவாக்கி வருகிறது. ஷிகாட்சே, நிகாரி குன்சா மற்றும் லாசாவின் அனைத்து வானிலைகளுக்கும் தாக்குபிடிக்கும் கோங்கார் விமான நிலையம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன. பாதாள பதுங்கும் இடங்கள் மற்றும் புதிய ஓடுதளங்கள் அங்கு உருவாக்கப் படுகின்றன.

கடல் மட்டத்தில் இருந்து 4,274 மீட்டர் உயரத்தில், பாங்காங் ஏரியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிகாரி குன்சா விமான தளத்தில், தரையில் இருந்து புறப்பட்டு, விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை வசதி, நவீன ஜெட் போர் விமானங்கள் நிறுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமானப் படை பலத்தைப் பொருத்த வரையில், இந்தியாவுக்கு ஓரளவுக்கு சாதகமான நிலை இருப்பதாக ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் விமான தளங்கள் உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து தொலைவிலும், உயரமான பகுதிகளிலும் இருப்பதால், ஜெட் விமானங்கள் குறைவான எரிபொருள் மற்றும் பாரங்களை (பொருட்களை) மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்கின்றனர்.

எல்லைப்புற கட்டமைப்புகளால் எழும் சந்தேகங்கள்

இரண்டு பக்கங்களிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படுவதற்கு ஒரே பொதுவான காரணம்தான் இருக்கிறது. முழு அளவில் சண்டை ஏற்பட நேர்ந்தால், ராணுவத்தினரையும், ராணுவத் தளவாடங்களையும் வேகமாகக் கொண்டு செல்வதற்கான வசதிகளை உருவாக்க வேண்டும் என்பது தான் அந்தக் காரணமாக இருக்கிறது.

எல்லைப்புற கட்டமைப்புகளால் எழும் சந்தேகங்கள்

பட மூலாதாரம், Getty Images

``உறுதியான லட்சியங்களைக் கொண்ட இந்தக் கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றி முடிக்கும்போது, பெருமளவிலான இந்தியப் படையினர், தடைகள் குறித்த எந்தவித அச்சமும் இல்லாமல் தாராளமாக சென்று வருவது சாத்தியமாகிவிடும்'' என்று புதிய அமெரிக்கப் பாதுகாப்புக்கான மையம் 2019ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விரிவான வளர்ச்சிப் பணிகளை இந்தியா நீண்ட காலமாக தாமதித்து வந்தது. தனது எல்லைக்குள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், சண்டை ஏற்பட நேரும் நிலையில் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் எளிதாக வந்துவிடுவார்கள் என்று இந்தியா கருதியது. ஆனால் அந்த தர்க்கரீதியிலான காரணத்தில் இருந்து இந்தியா மாறியுள்ளது.

இந்த இரு நாடுகளும் ஒரு முறை மட்டுமே போரிட்டுள்ளன. 1962ல் நடந்த அந்தப் போரில் இந்தியா தோல்வி அடைந்தது.

சமீபத்திய ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், தனது ஆயுதபலத்தை சீனா வெளிக்காட்டிக் கொண்டது.

``சீனாவின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதால், தாக்குதல் செயல்பாடுகளில் சீனாவுக்கு சாதகமான நிலை ஏற்பட்டு, சண்டை நடக்கும் எந்த இடத்திலும் படைகளை வேகமாகக் குவிக்க உதவக் கூடியதாக இருக்கும். எனவே இந்தியாவின் கட்டமைப்பு வசதிகள் என்பது தற்காப்பு எண்ணத்துடன் கூடியவையாக உள்ளன'' என்று அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர் ராஜேஸ்வரி பிள்ளை தெரிவிக்கிறார்.

``இந்தியாவின் கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருந்த காரணத்தால், சீன ஆக்கிரமிப்புகளின் போது, அதைத் தடுப்பது இந்தியாவுக்கு சிரமமாக இருந்து வந்தது'' என்று அவர் கூறினார்.

ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று சீனா மறுத்து வருகிறது. கடந்த 3 தசாப்த காலத்தில் எல்லை பிரச்சனை குறித்து பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அவை தோல்வி அடைந்துவிட்டன.

இதற்கிடையில், தங்களுடைய சிறந்த போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே எவ்வளவு சீக்கிரமாக தங்கள் ராணுவத்தினரை குவிக்க முடிந்தது என்பதை சீன அரசு ஊடகம் மேன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

``குறுகிய அவகாசத்தில், பெருமளவு படைகளை சீனாவால் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் குவிக்க முடிந்தது என்பது, சீனாவின் பலத்தை நிரூபிப்பதாக உள்ளது. மிகவும் உயரமான பகுதிகள் உள்பட, தொலைதூரத்தில் உள்ள பகுதிகளுக்கும் ராணுவத் தளவாடங்களை விரைவாக அனுப்பும் திறன் தங்களிடம் உள்ளது என்பதை வெளிக்காட்டிக் கொள்வதாக உள்ளது'' என்று சீன ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர் சீன அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் -க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லை.

எல்லையின் இருபுறங்களிலும் பெருமளவில் புதிய சாலைகள், ரயில் வழித் தடங்கள், பாலங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையில் நிறைய மோதல்கள் உருவாகும் ஆபத்து இருக்கிறது.

இந்தியா - சீனா: எல்லையில் பலசாலியாகப் போட்டியிடுவது ஏன்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: