இந்தியா - சீனா எல்லை பதற்றம்: லடாக் எல்லையில் சில இடங்களிலிருந்து விலகாத சீன படைகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜூகல் புரோஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லையில் நிலவிவந்த பதற்றத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு அங்கிருந்து இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று, வியாழக்கிழமை, மாலை நிலவரப்படி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் பேட்ரோலிங் பாய்ண்ட் - 17 எனுமிடத்தில் இருந்து இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேட்ரோலிங் பாய்ண்ட் - 14 மற்றும் பேட்ரோலிங் பாய்ண்ட் - 15 ஆகிய இடங்களில் இருந்து இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் பின்வாங்குவதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரையில் படைகள் விலக்கப்படுவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவத்தினரும் சீன ராணுவத்தினரும் நேரெதிராக நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் பதற்றமான சூழல் இதுவரை இந்த பகுதிகளில் நிலவி வந்தது. படைகள் விலக்கப்பட்டுள்ள இடங்களில் இனிமேல் அது தொடராது.
பதற்றத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அரசின் உயர்மட்ட அளவில் நடக்கும்.
ஆனால் படைகளை விலக்குவது என்பது அந்தந்த பகுதிகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலேயே நிகழ்த்தப்படும்.
பாங்கோங் த்சோ ஏரி, ஃபிங்கர் பகுதிகளில் சீன படைகள்
பாங்கோங் த்சோ ஏரியை அண்மித்துள்ள ஃபிங்கர் - 4 எனப்படும் பகுதியில் தற்போதும் சீனப் படைகள் இருக்கின்றன என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எல்லைப்பகுதியில் கண்காணிப்பின் போது ஃபிங்கர் - 4 எனும் இடத்தைத் தாண்டி ஃபிங்கர் - 8 எனும் இடம் வரை சென்று இந்தியப் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP via Getty Images
"பிற இடங்களில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை இந்த இடத்திலும் விலக்கிக் கொள்ளப்படுவதுடன் ஒப்பிட முடியாது. இந்த பகுதிகளில் சீன ராணுவம் இன்னுமும் பின்வாங்கவில்லை," என்று பிபிசியிடம் பேசிய இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசினார்.
"இந்தப் பகுதியில் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ராணுவ முகாம் உள்ளது. சீனப் படைகள் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதைப் பொருத்தவரை ஃபிங்கர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவக் கட்டுமானங்களை அவர்கள் அகற்றிவிட்டு பின் வாங்கினால்தான் பதற்றம் குறையும். தொடக்கத்தில் அதிக எண்ணிக்கையிலான படையினரை அந்தப் பகுதியில் நிலை நிறுத்திவிட்டு, பின்பு குறைந்த எண்ணிக்கையிலான படையினரை மட்டும் விலக்கிக் கொண்டால் முன்பு இருந்ததைவிட இப்போது அதிகமான சீன ராணுவத்தினர் அந்த இடத்தில் இருப்பதாகவே பொருள்," என்று அவர் தெரிவிக்கிறார்.
இந்திய - சீன பேச்சுவார்த்தை எப்படி நடக்கிறது?
எல்லையில் பதற்றத்தை குறைப்பது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா அரசுகளின் சிறப்பு பிரதிநிதிகளாக இருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வாங்கி யி உடனான பேச்சுவார்த்தையின்போது கல்வான் பள்ளத்தாக்கு உட்பட இரு நாடுகளின் எல்லையாக இருக்கும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியாவின் நிலை என்ன என்பதை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உறுதிபடத் தெரிவித்துள்ளார் என வியாழக்கிழமை அன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியப் படைகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் உறுதியாக உள்ளனர் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பகுதிகளில் சீனா உள்ளதா?
இந்தியாவின் பகுதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் பகுதிகளிலிருந்து இந்திய ராணுவம் பின்வாங்கி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
"படைகள் விலக்கிக் கொள்வது குறித்து சில தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய - சீன எல்லையின் மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் சூழலின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்திய அரசின் நிலை இதற்கு முன் பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது."
"கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று சீன அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு மதிக்கப்படுவது எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவும். அதை மாற்றுவதற்கு எந்த ஒரு தரப்பும் தன்னிச்சையாக முயற்சி செய்யக்கூடாது," என்று இந்த வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா என்ன சொல்கிறது?
இருநாட்டு எல்லையில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு அதை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்புகளும் இணைந்து உறுதி செய்வார்களா என்று சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இடம் பெய்ஜிங்கில் உள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை.
இந்திய மற்றும் சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட மேற்கு பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவதற்கு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும் அவர் தெரிவித்தார்.
எல்லைப் பகுதியில் தற்போதைய சூழல் நிலைத் தன்மையுடனும் முன்பு இருந்ததை விட மேம்பட்டும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












