கொரோனா வைரஸ் பரவலால் அதிகரித்த இந்தியாவின் வருவாய் பற்றாக்குறை

பணியாளர்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.

ஜூன் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் வருவாய் பற்றாக்குறை 88.52 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5% என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டனர். முன்னதாக, அரசாங்கத்தின் மதிப்பீடு 3.5% ஆக இருந்தது. இந்த நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை மேற்கொண்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 5.1% சரிவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மேலும் மோசமடைந்தால், இந்த சரிவு 9.1% வரை உயரக்கூடும் என்று இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இது 1979க்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரத்தின் மிக மோசமான நிலையாக இருக்கும். வெள்ளிக்கிழமை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜூன் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் மொத்த வரி வசூல் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 46% குறைந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இது சுமார் 18.05 பில்லியன் டாலர்கள் சரிவாகும். அரசாங்கம் தொடர்ந்து கச்சா எண்ணெய் மீதான வரியை அதிகரித்து வருகிறது. இந்தியாவில், ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 35,747 பேர் இறந்துள்ளனர். அதே போன்று, கடந்த மூன்று மாதங்களில், அரசாங்கத்தின் செலவீனம் 13% அதிகரித்து 8.16 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 7.22 டிரில்லியன் ரூபாயாக இருந்தது.

இலவச தானியங்கள் விநியோகம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புகளுக்கான அரசாங்கத்தின் செலவு அதிகரித்துள்ளது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் வரி வசூலில் செங்குத்தான சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் வருவாய் திரட்ட மத்திய அரசு முயற்சிக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஜூன் காலாண்டு வருவாயில் 47% சரிவைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, எண்ணெய்க்கான தேவை பெருமளவு குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 41% குறைந்துள்ளது.

அதாவது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக உலகம் முழுவதும் முடக்க நிலை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய்க்கான தேவை பெருமளவு குறைந்துள்ளது. ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை மோசமாக பாதிக்கப்பட்டதாகவும், இதனால் சுத்திகரிப்பு நிலையங்களின் முழு திறனையும் கூட பயன்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: