சோனு பஞ்சாபன்: "பெண் என சொல்வதற்கான தகுதிகளை இழந்துவிட்டார்" - 24 வருட சிறை தண்டனை பெற்ற பெண்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சின்கி சின்ஹா
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குளிரான நாளில், 17 வயதான ஒரு சிறுமி ஹிரியானா மாநிலத்தில் உள்ள பகதூர்கார்க்கில் பேருந்தில் இருந்து இறங்கி அருகில் காவல் நிலையம் எங்கே இருக்கிறது என அந்த வழியாகச் சென்றவர்களிடம் விசாரித்தார். 2014 பிப்ரவரி 9ஆம் தேதி தெற்கு டெல்லியின் நஜாப்கர் காவல் நிலையத்திற்குள் அவள் நுழைந்தாள்.
ரோஹ்டக்கை சேர்ந்த ராஜ்பால் என்பவரிடம் இருந்து தன்னுடைய ஆவணங்களைப் பெற்றுத் தர உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தன்னை பிடித்து வைத்திருந்தது, அத்துமீறல் செய்தது மற்றும் கொடுமை செய்தது குறித்த விவரங்களை அந்த சிறுமி விவரித்தார் பின் காவல் துறையினர் அதை குறிப்பு எடுத்துக் கொண்டனர்.
இதில் முக்கியமான இடைத்தரகர் என்று சோனு பஞ்சாபன் என்ற பெண்ணின் பெயரை அவள் குறிப்பிட்டாள். காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பாலியல் தொழிலில் முக்கிய இடைத்தரகராக இருந்த சோனு பஞ்சாபன் அப்போது காவலில் இருந்தார். சில மாதங்கள் கழித்து, பாதிக்கப்பட்ட சிறுமி மாயமாகிவிட்டார். பிறகு 2017ல் திடீரென திரும்பி வந்தார். சோனு பஞ்சாபன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மூன்று ஆண்டுகள் கழித்து, சோனு பஞ்சாபன், குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் அறிவித்து 24 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
காவல் துறையின் கையில் சிக்காமல் தப்பி வந்த காலத்தில், ``கொடும் குற்றங்கள்'' இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுடன், நன்னடத்தை இல்லாத பெண் என்ற பெயருடன் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வந்தார். ஒழுக்கமான பெண்கள் என்ற அடிப்படை எண்ணத்துக்கு மாறானவற்றை மட்டுமே அவர் செய்து வந்தார். நாகரிக சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்று சோனு பற்றி நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
``ஒரு பெண்ணின் நல்லொழுக்கம் என்பது அவளுடைய ஆன்மாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் விஷயம்'' என்று நீதிபதி ப்ரீதம் சிங் குறிப்பிட்டுள்ளார்.
``குற்றவாளியான சோனு பஞ்சாபன் எனப்படும் கீதா அரோரா என்பவர், ஒரு பெண் என சொல்வதற்கான அனைத்துத் தகுதிகளையும் இழந்துவிட்டார். சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை பெறக் கூடியவராக இருக்கிறார்'' என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

முதல் தகவல் அறிக்கை 2015-ல் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. 2017ல் குற்றப்பிரிவு துணை ஆணையர் பீஷம் சிங் இந்த வழக்கை எடுத்துக் கொண்டார். 2014ல் காந்தி நகரில் தன் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாதிக்கப்பட்ட சிறுமிக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து அந்தச் சிறுமி காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தாள். அதற்குள் தன் மகளைக் காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
நவம்பர் மாதத்தில் யமுனா விஹாரில் அந்த சிறுமியை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தன்னுடைய சில தோழியருடன் அவர் வாழ்ந்து வந்தார். 2014 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட சோனு பஞ்சாபன், 2017 டிசம்பர் 25 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளன்று, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன், சோனு பஞ்சாபன் நிறைய வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டிருந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில மணி நேரத்தில் அவர் இயல்பான ஆரோக்கியத்துக்குத் திரும்பினார்.
``தன் மீது நீதிபதி பரிதாபம் காட்ட வேண்டும் என்பதற்காக சோனு அப்படி செய்திருப்பார்,'' என்று சிங் கூறினார்.
ஆனால் நீதிபதி எந்தப் பரிதாபமும் காட்டவில்லை.
பாதிக்கப்பட்ட சிறுமியை பயமுறுத்தி, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக அவளுடைய மார்பகத்தின் மீது மிளகாய்த் தூளை தடவும் அளவுக்கு கொடூரமானவராக சோனு இருந்ததை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு போதை மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். ``பசுக்கள் மற்றும் எருமைகள் நிறைய பால் சுரப்பதற்கு தரப்படுவதைப் போன்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தினார்கள். உடலை பெரிதாக ஆக்குவதற்கான மருந்தாக அது இருந்திருக்கிறது'' என்று சிங் தெரிவித்துள்ளார்.
வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல கொடுமைகளை சோனு செய்திருக்கிறார். இவையெல்லாம் அவருடைய கொடூரத்தனத்திற்கு சில உதாரணங்கள் தான் என்று காவல் துறையினர் குறிப்பிட்டனர். இன்னும் நிறைய கொடுமைகள் செய்யக் கூடியவர் தான் சோனு. இடைத்தரகு மூலம் பெற்ற பெண்களில் ஒருவர் தான், பாதிக்கப்பட்ட இந்தச் சிறுமி.
இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட வேறு பலர், அவரிடம் வேலை பார்த்தனர். இடம் உள்ளிட்ட வசதிகளை சோனு செய்து கொடுத்துவிட்டு, தனக்கான கமிஷனை எடுத்துக் கொள்வார். அவை மனம் ஒப்புதலுடன் நடக்கும் விஷயங்களாக தோன்றும். ஆனால், மற்ற இடைத்தரகர்களிடம் இருந்து பெற்ற இளம் பெண்களையும் இவர் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தார். மற்றவர்களுக்கு ’விற்கும்’ வரையில், அந்தப் பெண்களை தன்னுடைய காவலில் வைத்திருப்பார். சுழற்சி முறையில் பெண்களை வேறு பகுதி இடைத்தரகர்களுக்கு ’விற்பதன்’ மூலம், அந்தந்தப் பகுதிகளில் புதியவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதாக இருக்கும் என்று இதில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறுகின்றனர்.
ஒரு பெண் என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து தகுதிகளையும் சோனு பஞ்சாபன் மீறிவிட்டார் என்று நீதிபதி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், THINKSTOCK
இடைத்தரகர் பெண்மணி ஒரு போதும் பயத்தை காட்டவில்லை அல்லது தவறுக்காக வருந்தவில்லை என்று துணை ஆணையர் சிங் தெரிவித்தார். ``சிறுவயதுப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குற்றம் என்று தெரியுமா என்று நான் கேட்டபோது, தெரியாது என அந்தப் பெண் பதில் அளித்தார். தனக்கு தெரியாது என்பது போல அவர் நடித்தார். ஆனால் தாம் செய்வது தவறு என்பது அவருக்குத் தெரியும்'' என்று அவர் கூறினார். ``நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றச் செயல்களில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபடுவது கிடையாது'' என்றார் அவர்.
சோனுவுக்கு 24 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஐ.பி.சி.யின் 328, 342, 366A, 372, 373, 120B பிரிவுகளின் கீழும், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் 4, 5 மற்றும் 6வது பிரிவுகளின் கீழும் அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் குற்றச் செயல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டத்தின் கீழ் சோனு தண்டிக்கப்பட்டார். தீர்ப்பை வாசித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ப்ரீதம் சிங், குற்றவாளி சோனு பஞ்சாபனுக்கு ரூ.64 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொருவரான சந்தீப் பெட்வால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.
2014 ஆம் ஆண்டில் தாமாக விரும்பி தான் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறியதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போதை மருந்து செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக அப்படி அவர் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய சகோதரிக்கு திருமணம் நடக்கவிருந்தது. அதற்கு இடையூறாக, தன்னுடைய கடந்த கால வாழ்க்கை வந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அந்த சிறுமிக்கு போட்ட போதை மருந்துகளில் அல்பிராக்ஸ் (Alprax) மருந்தும் ஒன்று. இது சோர்வு ஏற்படாமல் இருக்கச் செய்யும் மருந்து என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை மிரட்டியவர்கள் என சில பெயர்களை அவர் குறிப்பிட, அவை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டன. மீண்டும் அவர் திரும்பி வந்த பிறகு, மன நல ஆலோசனை தந்து, மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தை இருக்கிறது.அவளுடைய கடந்த காலத்தை மாமனார் வீட்டினர் ஏற்றுக் கொள்ள மறுத்த காரணத்தால், கணவர் கைவிட்டுவிட்டார். அதனால் இப்போது அந்தப் பெண் தன் பெற்றோருடன் வாழ்கிறார். தொலைபேசி மூலம் அந்தப் பெண் பேச மறுத்துவிட்டார் என்றாலும், தனக்கு நியாயம் கிடைத்திருப்பதாக, அந்தப் பெண் நிம்மதி கொண்டிருக்கிறார் என விசாரணை அதிகாரி பங்கஜ் நெகி தெரிவித்தார்.
``ஒரு பெண்ணின் நல்லொழுக்கம் என்பது அவருடைய ஆன்மாவுக்கு அடுத்த நிலையில் உள்ள விஷயம். பெண்ணாக இருக்கும் ஒருவர், இன்னொரு பெண்ணை, அதுவும் சிறுமியை, இவ்வளவு கொடூரமான முறையில் கொடுமைப்படுத்த முடியுமா? குற்றவாளியான சோனு பஞ்சாபனின் அவமானகரமான இந்தச் செயல்பாடுகள் காரணமாக, அவர் மீது நீதிமன்றங்கள் எந்தப் பரிவும் காட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. எந்த பாலினத்தவராக இருந்தாலும், ஒரு நபர், இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுபவராக இருந்தால், நாகரிக சமூகத்தில் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார். அவர் சிறையின் நான்கு சுவர்களுக்கு நடுவில் மட்டுமே வாழ்வதற்குத் தகுதியானவர்'' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நான் சோனு பஞ்சாபனை 2011 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பார்த்தேன். டெல்லி நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி எதிரே கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தார். அப்போது அவருடைய தலைமுடி சிறிதளவு நரைத்திருந்தது. களைப்பாக இருந்தார். போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான சிகிச்சையில் அவர் இருப்பதாகவும், பெரும்பாலான நேரம் திகார் சிறையில் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பிறகு அன்று பிற்பகலில், கம்பி வலை போட்ட ஜன்னல்களுடன் இருந்த ஒரு பேருந்துக்கு அவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். நீதிமன்ற விசாரணைகள் முடிந்த பிறகு, அவர்களை மீண்டும் திகார் சிறைக்கு பேருந்தில் அழைத்துச் செல்வார்கள். சோனு பஞ்சாபன் பேருந்தில் ஏறி, அதன் பின்புறம் இருந்த ஓர் இருக்கைக்கு நடந்து சென்றார். நான் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்றிருந்தேன். அவர் என்னைப் பார்த்தபோது, சிறையில் தன்னை சந்திக்க அனுமதிக்கப்படும் நபர்களின் பட்டியலில் என் பெயரையும் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டேன். அது வெயிலான ஜூலை மாதத்தின் ஒரு நாளில் மதிய நேரமாக இருந்தது. என்னுடைய பெயரை அவர் கேட்டார். அந்தப் பட்டியலில் என் பெயர் சேர்க்கப் பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள பல நாட்கள் நான் சிறைத் துறையினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.
``தன்னை சந்திக்கக் கூடிய நபர்களின் பட்டியலில் அவர் ஆறு பேரின் பெயர்களை சோனு கொடுத்திருக்கிறார். அதில் உங்கள் பெயர் இல்லை'' என்று சிறை அதிகாரிகள் கூறுவார்கள்.
மெஹராவ்லி காவல் நிலையத்தில் 2011ல் உதவி ஆய்வாளராக இருந்து, பின்னாளில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பொறுப்பெடுத்துக் கொண்டவர் கைலாஷ் சந்த். சோனுவை கைது செய்ய, மாறுவேடத்தில் சென்றதைப் பற்றி அவர் குறிப்பிட்டார். காவல் துறையினர் காவலில் சோனு பஞ்சாபன் இருந்தபோது, இரவு நேரத்தில் அவருடன் பேச வேண்டியிருந்தது. சோனு ஐந்து நாட்கள் காவல் நிலையத்தில் இருந்தார். சோனுவுக்கு அவர் சிகரெட்கள், டீ, உணவு ஆகியவை வாங்கித் தருவார். சோனு தன்னைப் பற்றிய கதைகளை அவரிடம் கூறியுள்ளார். மெஹராவ்லி பகுதியில் சோனுவை கைலாஷ் சந்த் கைது செய்தபோது, அவருடைய அழகைப் பார்த்து அசந்து போயிருக்கிறார். அந்தப் பெண்ணின் புகைப்படங்களை தனது செல்போனில் அவர் எடுத்துக் கொண்டார். 2011ல் கைது செய்யப்பட்ட போது சோனு சுமார் 30 வயதுப் பெண்ணாக இருந்தார். அதற்குள் தனக்கென ஒரு நெட்வொர்க் அமைத்து செயல்படும் அளவுக்கு செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டுவிட்டார்.
சோனுவின் டைரி ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் அதில் இருந்தன. அவருடைய செல்போனில் தொலைபேசி எண்கள் பட்டியலையும் காவல் துறையினர் எடுத்தனர். நகரில் பிரபலமான கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களும் கூட, ஒப்பந்த அடிப்படையில் சோனுவிடம் வேலை செய்திருக்கிறார்கள் என்பது அதில் தெரிய வந்தது.
``பாலியல் தொழில் செய்வது பொது சேவை'' என்று கைலாஷ் சந்திடம் சோனு கூறியிருக்கிறார். ``ஆண்களின் மன அழுத்தங்களை விடுதலை செய்வதற்கான வடிகாலாக நாங்கள் இருக்கிறோம். தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள பெண்களுக்கு நாங்கள் உதவுகிறோம். விற்பதற்கு உடலைத் தவிர வேறு எதுவும் உங்களிடம் இல்லை என்றால், அதைத்தான் விற்றாக வேண்டும். எல்லா சமயங்களிலும், மக்கள் எதையாவது விற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்'' என்றும் சோனு கூறியிருக்கிறார்.
அந்தப் பெண்ணின் உரையாடல்கள் அனைத்தும், வரி வடிவ வாக்குமூலமாக தயாரிக்கப்பட்டு அப்போது குற்றப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது.
காவல் துறையினருடன் நடந்த உரையாடல் முழுக்க, அத்தியாவசியமான ஒரு சேவையை தாம் அளித்து வந்ததாக சோனு கூறியிருக்கிறார். தாம் செய்யாவிட்டால், வேறு யாராவது இதைச் செய்திருப்பார்கள் என்றும், இதைச் செய்யாமல் போனால் நிறைய பாலியல் வல்லுறவுகள் நடந்திருக்கும் என்றும் சோனு கூறியுள்ளார்.
ஆசை என்பது ஒருவிதமான சந்தையாக உள்ளது. இல்லாவிட்டால், இந்த சமூகம் முடங்கிப் போய்விடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நல்லொழுக்கம் என்பது பற்றிய கேள்விகளை எல்லாம் அவர் ரொம்ப காலத்துக்கு முன்பே கடந்து வந்துவிட்டார். அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காவல் துறையினரிடம் சோனு பஞ்சாபன் விவரித்தவற்றில், திருமணமான ஒரு பெண்ணைப் பற்றிய கதையை நான் படித்தேன். அவருடைய கணவர் அவரை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். கட்டாயப்படுத்தி பாலுறவு கொண்டிருக்கிறார். குடும்பத்திற்குப் பணம் எதுவும் தருவதில்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு நல்ல கல்வி அளிக்க அந்தப் பெண் விரும்பி இருக்கிறார்.
``கொடுமை செய்யும் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்துக்காக தன்னுடைய விருப்பங்களுக்கும், நோக்கங்களுக்கும் அந்தப் பெண் ஏன் தடை போட்டுக் கொள்ள வேண்டும். அந்தப் பெண்ணுக்கு இருக்கும் ஒரே வழியை, சமுதாயம் தாழ்வாகப் பார்க்கிறது'' என்று சந்த்திடம் சோனு கூறியிருக்கிறார்.
சோனு மேக்கப் செய்து கொள்வதில் பிரியம் கொண்டவராக இருந்திருக்கிறார். நன்கு உடைகள் அணிந்து கொள்வார். மிகுந்த ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார். இப்படிதான் சோனுவை பற்றி காவல் துறையினர் விவரிக்கிறார்கள். 2017ல் காவல் துறையினரின் காவலில் இருந்தபோது, அவருடைய ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு, தொடர்ந்து வற்புறுத்த வேண்டியிருக்கும் என்பதை காவல் துறையினர் அறிந்திருந்தனர்.
சோனுவுக்கு அவர்கள் ரெட் புல் பானம், சான்ட்விச்கள், பர்கர்கள், பிஸாக்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். கைலாஷ் சந்த் செய்ததைப் போல அவர்கள் சிகரெட்களும் வாங்கித் தந்துள்ளனர். தன்னைப் பற்றிய கதையை சோனு மறுபடியும் கூறியிருக்கிறார். ஆனால் அதே வாதங்களை முன்வைத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் மைனர் என தமக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த முறை அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. முதன்முறையாக 2007 ஆம் ஆண்டில் சோனு பஞ்சாபன் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அதே குற்றத்தைச் செய்ததற்காக 2008ல் மீண்டும் கைதானார். தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் 2011ல் அவர் MCOCA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சட்டம் கூலிப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் டெல்லி அரசு இதை உருவாக்கியது.
பரோலில் வெளியே வந்த போது 2019ல் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்த சோனு பஞ்சாபன், காவல் துறையினர் தான் தன்னை பலியாக்கிவிட்டார்கள் என்றும், தன்னை இடைத்தரகர் என்று எந்தப் பெண்ணுமே முன்வந்து கூறவில்லை என்றும் கூறினார்.
கொடுமையான திருமண உறவுகள் அல்லது சிரமமான வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்பும் பெண்களுக்கு அல்லது தாங்களாகவே இத்தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கும் நபராக தான் தாம் செயல்பட்டதாக சோனு கூறியுள்ளார். தன்னைப் பற்றிய தகவல்கள் தலைப்புச் செய்திகள் இடம் பெறும் என்பதை அவர் அறிந்திருந்தார். பாதிக்கப்பட்டவர் மற்றும் உடந்தையாக இருப்பவர்களின் பங்கு பற்றி அவர் அறிந்திருந்தார். அவர் இரண்டு நிலைகளிலுமே இருந்திருக்கிறார். அவருடைய கதையை அடிப்படையாக வைத்து 'Fukrey' படத்தில் (2013) போலி பஞ்சாபன் என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. Fukrey Returns என்ற படமும் (2017) உருவாக்கப்பட்டது. நடிகை ரிச்சா சத்தா இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
24 ஆண்டுகள் என்பது நீண்ட காலம் என்று, வழக்கறிஞர் ஆர்.எம். டுபெயில் கூறினார். சோனு மீது MCOCA சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தபோது, அவருக்காக வாதாடி விடுதலை பெற்றுத் தந்தவர் இவர். இந்த வழக்கில் சோனு சார்பில் அவர் ஆஜரானார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக அவர் கூறினார்.
`` பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலும்தான் உலகின் மிகப் பழமையான தொழில் என்பது யாருக்கும் தெரியவில்லை. நல்லொழுக்கம் பற்றிப் பேசுவது சலிப்பைத் தருகிறது. இது மிகப் பெரிய தண்டனை'' என்று அவர் கூறினார்.
கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் பல கோடி ரூபாய் அளவுக்குப் பணம் புரளும் வகையில் பாலியல் தொழில் நடத்தி வந்த சோனு பஞ்சாபன், 2011ல் MCOCA-வின் கீழ் கைது செய்யப்பட்டதில் இருந்தே செய்திகளில் இடம் பிடித்து வந்துள்ளார். சோனு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தவர், நிறைய காதலர்கள் இருந்தார்கள், குறைந்தது 4 கணவர்கள் உண்டு, அவர்கள் ரவுடி கும்பல்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், காவல் துறையினரின் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டார்கள் என நிறைய செய்திகள் வெளியாயின. இந்தத் தொடர்புகளை ``திருமணங்கள்'' என்று சொல்ல முடியாது என்று சோனு பஞ்சாபன் மறுத்தார்.
குழந்தைப் பருவத்தில் தனக்கு ``சோனு'' என்ற செல்லப் பெயர் இருந்ததை வைத்து, காவல் துறையினர் தான் தனக்கு ``சோனு பஞ்சாபன்'' என பெயர் வைத்துவிட்டனர் என்று சோனு தெரிவித்தார். ஆனால் அவருடைய கணவர்களில் ஒருவருடைய பெயர் சோனு என்கிற ஹேமந்த் என்றும், அவருடைய பெயரைத்தான் இவர் வைத்துக் கொண்டார் என்றும் காவல் துறையினர் கூறுகின்றனர். சோனுவின் கணவர் விஜய் 2003ல் உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினரின் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிறகு, தனது நண்பர் தீபக்குடன் வாழ்ந்தார்.
தீபக் வாகனங்களை திருடுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் குவஹாட்டியில் காவல் துறையினரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். பிறகு தீபக்கின் சகோதரர் சோனு என்கிற ஹேமந்த் உடன் வாழ்ந்திருக்கிறார். அவர் பகதூர்கார்க்கில் ஒரு கொலையில் தொடர்புடைய கிரிமினலாக இருந்தார். தன் சகோதரன் கொல்லப்பட்டதில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவரை அவர் கொலை செய்திருந்தார். அவரும் காவல் துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என சோனு தெரிவித்துள்ளார்.
ஹேமந்தின் மரணத்திற்குப் பிறகு பெரிய ஆதரவு எதுவும் இல்லாமல் சோனு வாழ்ந்தார் என்று தெரிகிறது. சோனுவின் இரண்டு சகோதரர்களும் வேலையில்லாதவர்களாக இருந்தனர். அவருடைய தந்தை இறந்துவிட்டார். சிறுவயது மகனையும், தன் தாயாரையும் காப்பாற்றும் பொறுப்பு சோனுவுக்கு இருந்தது. அப்போது தான் அழைப்பின் பேரில் சென்று வரக் கூடிய `கால்கேள்` ஆக சோனு பாலியலில் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். வேறு யாரையும் தாம் திருமணம் செய்து கொள்ளவில்லை என சோனு மறுக்கிறார்.
ஆனால் விஜய் மரணத்துக்குப் பிறகு சோனு நான்கு முறை திருமணம் செய்து கொண்டார் என காவல் துறையினரும், ஊடகங்களும் கூறி வருகின்றன. அவருடைய ஐந்தாவது கணவரைத் தவிர, மற்ற நான்கு பேரும் காவல் துறையினரின் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். ``அந்த நபர்களுடன் திருமண கோலத்தில், நெற்றியில் பொட்டு வைத்த நிலையில் புகைப்படங்கள் அவருடைய செல்போனில் இருந்தன'' என்று வழக்கின் விசாரணை அதிகாரியான பங்கஜ் நெகி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சோனு பஞ்சாபன் 1981ல் டெல்லியில் கீதா காலனியில் பிறந்தார். அவருடைய பெயர் கீதா மாகு. அவருடைய தாத்தா பாகிஸ்தானில் இருந்து வந்த அகதியாக, ரோஹ்டக்கில் குடியேறினார். அவருடைய தந்தை ஓம் பிரகாஷ் டெல்லிக்குக் குடிபெயர்ந்து, ஆட்டோ ரிக்சா ஓட்டி வந்தார். அப்போது கிழக்கு டெல்லியில் கீதா காலனியில் வாடகை வீட்டில் அவருடைய குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். சோனுவுடன் பிறந்தவர்கள் 3 பேர் - ஒரு அக்கா மற்றும் இரண்டு தம்பிகள். சோனுவின் அக்காவான பாலா, தங்கள் அத்தை மகன் பாபி என்கிற சதீஷை திருமணம் செய்து கொண்டார். தங்களுடைய சகோதரி நிஷாவுடன் தொடர்பு கொண்டிருந்த ஒருவரை, சதீஷும், விஜயும் சேர்ந்து கொலை செய்தனர். அந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
1996ல் விஜய் பரோலில் வெளியே வந்த போது, அவரை கீதா திருமணம் செய்து கொண்டார்.
2011ல் முதலில் அவருடைய வீட்டிற்கு நான் சென்றபோது, பழைய புகைப்பட ஆல்பங்களைப் பார்த்தபோது, மலைகளின் பின்னணியில் விஜய் நிற்பதைப் போன்ற ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். காதல் காரணமாக விஜயை கீதா திருமணம் செய்து கொண்ட போது அவருடைய வயது 15. கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அவருடைய வீட்டிற்கு நான் சென்றபோது, அவருடைய மகன் பரஸ் 9 வயது சிறுவன்.
தனக்கு கார் பொம்மைகளை அம்மா வாங்கி வருவார் என சிறுவன் காத்துக் கொண்டிருந்தான். சில சமயங்களில் சிறையில் இருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசுவதாக அவர் தெரிவித்தார். இப்போது அந்தப் பையனுக்கு 17 வயதாகிறது. தன்னுடைய தாயைப் பற்றி அவனுக்குத் தெரியும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஒகு மகளை அவர் தத்தெடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் கழித்து விஜய் இறந்துவிட்ட பிறகு, அந்த சிறுமியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றுவிட்டனர்.
சோனு பஞ்சாபனின் தந்தை 2003ல் காலமாகிவிட்டார். அப்போது தான் பிரீத் விகார் பகுதியில் அழகுக்கலை நிபுணராக சோனு பஞ்சாபன் வேலை செய்யத் தொடங்கினார். உடன் பணியாற்றிய நீட்டு என்பவரை அங்கு சந்தித்தார். அவர் தான் பாலியல் தொழிலில் சோனுவை ஈடுபடுத்தியுள்ளார். ரோகிணி பகுதியில் கிரண் என்ற பெண்ணிடம் அவர்கள் இந்தத் தொழிலில் சேர்ந்துள்ளனர்.
ஆரம்பத்தில் பர்யவரன் வளாகத்தில் `பி` பிளாக்கில் தனது முதல் பாலியல் தொழிலுக்காக விடுதியை சோனு உருவாக்கியுள்ளார். பிறகு சுதந்திரப் போராட்ட வீரர் காலனி, மால்வியா நகர் மற்றும் ஷிவாலிக் பகுதிகளில் தன் தொழிலுக்காக அடுக்கு மாடி வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பாலியல் தொழில் செய்பவராக தொடங்கி, மேல்தட்டு வர்க்கத்தின் பாலியல் இடைத்தரகராக செயல்பட்டது வரையில், அவருடன் அஜய் என்கிற ராஜூ ஷர்மா என்பவர் இருந்திருக்கிறார். முதலில் அவர் சமையல்காரராக இருந்திருக்கிறார். பின்னர் டிரைவராக இருந்தார். அவரும் இடைத்தரகராக இருந்திருக்கிறார். சோனு பஞ்சாபனுடன் இரண்டு முறை அவர் கைதாகியுள்ளார்.
அது பணம் கொழிக்கும் நிறுவனம் போல இயங்கி இருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய சேவைகளை அளிப்பதற்காக சமையலர்கள், கிளீனர்களை அவர் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
தொழில் விரிவடைந்தபோது, அவருடன் இருந்த ராஜூ ஷர்மா, வெளியூர் வாடிக்கையாளர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்ற நகரங்களில் உள்ள ஏஜென்ட்கள் மூலமாக இவர்கள் இருவரும் செயல்பட்டு வந்திருக்கின்றனர்.
இந்தப் பகுதிகளில் தங்களின் ஏஜென்ட்களாக யாரெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை, காவல் துறையினருடன் நடந்த உரையாடல்களில் சோனு கூறியுள்ளார். அவர்கள் போட்டியாளராக இருந்தாலும், தம்முடன் சேர்ந்து பணியாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாடிக்கையாளர் தொடர்பு கொள்கிறார் - ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் யாரும் அப்போது சோனுவிடம் இல்லை என்றால், மற்ற ஏஜென்ட்களின் உதவியை அவர் நாடுவார். மற்றவர்களும் இதேபோல, தேவைக்கு ஏற்ப இவருடைய உதவியை நாடுவார்கள். தொழில் போட்டி அதிகமாக இருந்தது.
இந்தத் தொழிலை முதலில் தொடங்கியபோது, பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது, நெட்வொர்க் பராமரித்தலுக்காக, பெண்களின் வருமானத்தில் 60 சதவீதத்தை கமிஷனாக சோனு எடுத்துக் கொண்டார். `வாடிக்கையாளர் சேவைக்காக' பல்வேறு இடங்களுக்கு பெண்களை அழைத்துச் செல்வதற்காக சோனுவின் கார்கள், ஒரே இரவில் ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடும் என்று விசாரணை அதிகாரி நெகி தெரிவித்தார். தான் பிடித்து, தன் பாதுகாப்பில் வைத்திருந்த, விலைக்கு வாங்கியுள்ள பெண்களின் வருமானத்தில் அதிகமான கமிஷனை இவர் எடுத்துக் கொள்வார். புகார் அளித்த இந்த மைனர் பெண் போன்றவர்களின் பெயரில் வாங்கும் பணத்தில் பெரும் பகுதியை சோனு எடுத்துக் கொள்வார் என்று நெகி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த காலக்கட்டத்தில், டெல்லியில் மற்றொரு மேல்தட்டு இடைத்தரகராக செயல்பட்ட இச்சாதாரி பாபா என்பவரும் திகார் சிறையில் இருந்தார். ஆன்மிக குரு என்று கூறிக் கொண்டு, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அவரைப் பற்றி, சோனு தான் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
``இதுபோன்ற குற்றச் செயல்களில் எப்போதெல்லாம் வெற்றிடம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் யாராவது வந்து அதை நிரப்புகிறார்கள். இந்த விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இச்சாதாரி பாபா கைது செய்யப்பட்ட பிறகு, சோனு பஞ்சாபன் தன் தொழில் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்'' என்று பீஷம் சிங் கூறினார்.
கைது செய்யப்பட்ட பிறகு, சோனு பஞ்சாபன் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
தொலைக்காட்சி சேனல்களில், அவருடைய முகத்தைக் காட்டி, குற்றச் செயலை விவரித்து, பாலியல் தொழிலில் ``ராணி இடைத்தரகர்'' என்று கூறினர்.
சோனு பஞ்சாபனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருவது கடினமான வேலை என்று காவல் துறையினர் ஒப்புக்கொள்கின்றனர். மைனர் பெண் ஒருவர் வெளியில் வந்து புகார் தராமல் போயிருந்தால், சோனு பஞ்சாபனை காவல் துறையினர் கைது செய்ய முடியாமலே போயிருக்கும் என்று சிங் கூறினார்.
நான் அவரை சந்தித்த போது, அவருடைய வயது 31. சோனு பஞ்சாபனுக்கு இப்போது 40 வயது ஆகியிருக்கும். அப்பீல் எதுவும் செய்யாமல் போனால், சிறையில் இருந்து விடுதலை ஆகும் போது அவருக்கு 64 வயது ஆகியிருக்கும். அதிக வயதானவராக இருப்பார், யாருக்கும் அவரை நினைவிருக்காது. உலகம் நகர்ந்து சென்றிருக்கும்.
இப்போதைக்கு, அவர் கொடூர குற்றங்களைச் செய்தவர் என்றும், நாகரிக சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை தம்மை சந்திக்கக் கூடிய நபர்களின் பட்டியலில் என்னுடைய பெயரை அவர் சேர்த்திருந்தால், பல விதமான கதைகள் எழுதப்பட்ட ஒரு பெண்ணின் எண்ணங்கள் வெளியே தெரிந்திருக்கும்.
அவராக சொல்லும் வரையில், அவரைப் பற்றி முழுமையான கதை தெரியப் போவதில்லை. அதுவரையில், காவல் துறையினரின் கோப்புகள், பேசிய வார்த்தைகள், கண்ணோட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் தான் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும். எப்படியும் அவருடைய முழுமையான கதைகளைப் பேசப் போவதில்லை. அதுவரையில், 2011-ன் பழைய நோட்டுப் புத்தகங்களில் இருந்து ஒரு வாசகத்தை நான் நினைவில் கொண்டிருப்பேன்.
``நான் செய்யும் காரியங்கள், நான் யார் என்பதை தீர்மானிப்பதில்லை. என்னுடைய தொழிலை வைத்து என்னை எடைபோட்டுவிட முடியாது'' என்று காவல் உதவி ஆய்வாளர் கைலாஷ் சந்த்திடம் சோனு பஞ்சாபன் கூறிய இந்த வார்த்தைகள் தான் அவை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












