சிறுமியாக இருந்தபோது வன்புணர்வு செய்தவரை, போலீசாகி சிறையில் அடைத்த பெண்
டபாடாவும் ஃபேப்ரிஸியோவும் 12 ஆண்டுகளுக்கு பின் 2016ம் ஆண்டு சந்தித்தனர். அது ஒரு டிசம்பர் மாதம். டபாடாவுக்கு 9 வயதாக இருக்கும் போது அவள் வாழ்வில் நுழைந்தான் ஃபேப்ரிஸியோ. அப்போது ஃபேப்ரிஸியோ 39 வயதான திருமணமான மனிதர்.

பட மூலாதாரம், ANDRÉ VALENTE
நண்பரின் மகளை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி வந்துள்ளார் ஃபேப்ரிஸியோ.
ஆனால் இந்த முறை டபாடாவை சந்திக்கும்போது ஃபேப்ரிஸியோ வின் கைகள் விலங்கிடப்பட்டிருந்தன. அவரது கையை இறுக்கிப் பிடித்திருந்தார் டபாடா. அவரது மற்றொரு கையில் துப்பாக்கி இருந்தது.
ஃபேப்ரிஸியோவை அவருக்கான அறையில் அடைத்துவிட்டு நிம்மதியான ஒரு மன நிலைக்கு வந்தார் டபாடா. அப்போது ஒரு வட்டம் முடிவுக்கு வந்தது போல் உணர்ந்தார் டபாடா.
ஃபேப்ரிஸியோ ரசனை மிக்க ஒரு புகைப்பட நிபுணர். நன்கு பேசுபவரும் கூட...
தனது பயணங்களின்போது தென்படும் கடற்கரைகள், ஆறுகள், தொலைதூர பகுதிகள் பற்றி சுற்றியிருப்பவர்களிடம் சுவாரசியமாக பேசுவார்.
இந்நிலையில்தான் டபாடாவின் தந்தையுடன் நட்பானார் ஃபேப்ரிஸியோ. இருவரும் சேர்ந்து கால்பந்து ஆடுமளவுக்கு நட்பு நெருக்கமானது. டபாடாவும் அவரது குடும்பத்தினரும் டிரெக்கிங் செல்லும்போது ஃபேப்ரிஸியோ வும் அவரது மனைவியும் சேர்ந்து செல்ல ஆரம்பித்தனர். தெற்கு பிரேசிலின் உருகுவே ஆற்றங்கரை பகுதியில் வசித்துவந்தது டபாடாவின் குடும்பம்.
இது போன்ற ஒரு சூழலில் ஃபேப்ரிஸியோ தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்க நீண்ட காலம் தேவைப்படவில்லை என வேதனை பொங்க கூறுகிறார் டபாடா.

பட மூலாதாரம், ANDRÉ VALENTE
"எனக்கு மிகவும் நெருக்கமானவர் மாதிரி பழக ஆரம்பித்தார். என்னை பல இடங்களில் தொட்டார். முதலில் என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு கவலை மட்டும் மனதில் இருந்தது. அது ஒரு குற்றச்செயல் என சிறுமியான எனக்கு புரிந்திருக்கவில்லை" என்கிறார் டபாடா.
மரங்கள் அடர்ந்த பகுதியில் தனியாக இருவரும் செல்லும்போதோ மற்றவர்களின் பார்வை படாத இடத்தில் குளிக்க நேரும்போதோ தன்னை அவர் வன்புணர்வு செய்ததாகக் கூறுகிறார் டபாடா.
ஒரு நாள் கூடாரத்தில் இருக்கும்போது தண்ணீர் கொண்டுவர தன்னையும் ஃபேப்ரிஸியோ வையும் தனியாக அனுப்பியதாக நினைவு கூர்கிறார் டபாடா.
அப்போது ஃபேப்ரிஸியோ தன்னை இச்சைக்கு உட்படுத்திக்கொள்ள முயன்றதாகவும் அப்போது சமயோசிதமாக தான் தப்பி வந்துவிட்டதாகவும் நினைவு கூர்கிறார் டபாடா.
ஃபேப்ரிஸியோவிற்கு முன்னால் தன் மகள் வந்தது எப்படி, எனக்கு அவரால் ஆபத்து ஏதும் நேரிட்டிருக்குமோ என பெற்றோர் துளியும் நினைக்கவில்லை என்கிறார் டபாடா. ஏனெனில் ஃபேப்ரிஸியோ மேல் அவர்கள் அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தனர் என்கிறார் டபாடா.
தனக்கு நேரும் கொடுமையை சொல்லிவிடலாமா என பல முறை யோசித்தும் கடைசி நேரத்தில் அம்முடிவை மாற்றிக்கொண்டதாக கூறுகிறார் டபாடா.
"என் தந்தை எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். கோபக்காரர். நான் உண்மையை சொல்லிவிட்டால் ஃபேப்ரிஸியோ வை கொன்றுவிட்டு சிறை செல்லவும் தயங்கியிருக்க மாட்டார் என் தந்தை" என்கிறார் டபாடா.
இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்த கொடுமை
டபாடாவின் இக்கட்டான நிலைமையை நன்கு புரிந்துகொண்டார் ஃபேப்ரிஸியோ. எனவே மீண்டும் மீண்டும் தவறு செய்ய ஆரம்பித்தார்.
டபாடாவுக்கு ஒரு அக்கா இருப்பதும் அவர் ஆசிரியை பயிற்சி மேற்கொண்டிருப்பதும் ஃபேப்ரிஸியோ வுக்கு தெரியும். அவர்களின் தாய் மாலை வேளைகளில் வேலைக்கு சென்றுவிடுவார். தந்தை கால்பந்து ஆடச் சென்று விடுவார். இந்தச்சமயத்தில்தான் டபாடாவின் வீட்டுக்கு செல்வார் ஃபேப்ரிஸியோ.
"கொஞ்சம் பொறுத்துக்கோ...கொஞ்சம் பொறுத்துக்கோ.."எனக்கூறியே தனது ஆசையை தணித்துக்கொண்டார் ஃபேப்ரிஸியோ என்கிறார் டபாடா.
ஆனால் 11 வயது ஆனதும் சில விஷயங்கள் டபாடாவுக்கு புரியத் தொடங்கியது. ஃபேப்ரிஸியோவின் செயல்களை எதிர்த்து கூச்சலிட்டார் டபாடா. தடுக்கவும் முயன்றார். நடந்ததை அம்மாவிடம் சொல்லிவிடலாம் என டபாடாவின் மனதில் ஒரு வேகம் எழுந்தாலும் அவரது உடல் நிலை கருதி அம்முடிவை கைவிட்டார் டபாடா.

பட மூலாதாரம், ANDRÉ VALENTE
இந்த சமயத்தில்தான் இப்பிரச்னையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. ஃபேப்ரிஸியோ வின் மனைவியிடம் டபாடாவின் தந்தைக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. இதனால் இரு குடும்பங்களும் பின்னர் விரோதிகளாகி விலகிவிட்டன. தனக்கு தீரா தொல்லையாக இருந்துவந்த ஃபேப்ரிஸியோ திடீரென தொலைந்து போனது டபாடாவுக்கு பெரும் நிம்மதியை தந்தது.
ஆனால் ஆண்டுகள் கடந்து போனாலும் டபாடாவின் மனதிலிருந்த ரணம் மட்டும் ஆறவே இல்லை. கொடிய நினைவுகள் டபாடாவை துரத்திக்கொண்டே இருந்தன.
ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கை சோகங்களை பள்ளித்தோழிகளிடம் பகிர்ந்துகொண்டார் டபாடா. இந்த உண்மையை பின்னர் டபாடாவின் தாயிடமும் கூறி விட்டாள் பள்ளித்தோழி ஒருத்தி.
இந்த நேரத்தில் டபாடாவுக்கு இன்னொரு உண்மையும் தெரியவந்தது. தன்னைப் போல மேலும் பல பெண்களின் வாழ்க்கையை ஃபேப்ரிஸியோ சீரழித்துள்ளார் என்பதுதான் அது.
இந்நிலையில் முதல் முதலாக தாம் வன்புணர்வு செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் குற்றம் குறித்து போலீசில் புகார் செய்தார் டபாடா. ஆனால் புலனாய்வு தொடங்கப்படவில்லை.
இந்த சூழலில் சட்டப்படிப்பை முடித்த டபாடா அடுத்து போலீஸ் ஆவதற்கான பயிற்சியை தொடங்கினார். இதற்கிடையில் ஃபேப்ரிஸியோவிற்கு எதிராக போலீஸில் கொடுத்த புகார் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது டபாடாவுக்கு நினைவில் வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டார் டபாடா.
ஆனால் அதெல்லாம் முடிந்து போன விஷயம். புகாருக்கு ஆதாரங்களும் இல்லை என கடுப்புடன் பதில் தந்தார் அந்த அதிகாரி.
இதைக்கேட்டதும் ஃபேப்ரிஸியோ வை சிறையில் தள்ளமுடியும் என்ற டபாடாவின் நம்பிக்கை பறிபோனது. ஆனால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் புகார் தந்தால் ஃபேப்ரிஸியோவுக்கு எதிரான வழக்கை தூசி தட்டி எடுக்கலாம் என நம்பிக்கை வழங்கினார் டபாடாவின் தந்தை.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரை சந்தித்தார் டபாடா. இதையடுத்து வழக்கை புதுப்பிக்கப்பட்டது. ஃபேப்ரிஸியோ வுக்கு ஏழரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனாலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துவிட்டு வெளியில் சுதந்தரமாக சுற்றிவந்தான் ஃபேப்ரிஸியோ.
டபாடாவுக்கு தற்போது 24 வயதாகிவிட்டது. போலீஸ் பயிற்சியும் முடிந்துவிட்டது.
சிறுவயதில் தான் அனுபவித்த கொடுமைகளே தனது எதிர்காலத்தை வடிவமைத்ததாக கூறுகிறார் டபாடா. பாலியல் வன்கொடுமையாளர்கள் அனைவரையும் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது டபாடாவின் ஆசை. ஆனால் வேலையில் சேர்ந்த பிறகு அதிலிருந்து விலகியே இருந்தார் டபாடா.
அந்த சமயங்களில் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை என இதற்கு விளக்கம் தந்தார் டபாடா. வன்புணர்வால் குழந்தைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மட்டும் தலையிடுவேன் என்றார் டபாடா. ஆனால் டிசம்பர் 2016ல் டபாடாவுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஃபேப்ரிஸியோ தனது மேல் முறையீட்டில் தோற்ற நேரம் அது.

பட மூலாதாரம், ANDRÉ VALENTE
ஆற்றங்கரையோரத்தில் தொலைதூரப் பகுதியில் அப்போது பதுங்கியிருந்தார் ஃபேப்ரிஸியோ.
அப்போது தனது சக அதிகாரி ஃபேப்ரிஸியோ வை கைது செய்ததாகவும் தான் அவரே சிறையில் அடைத்ததாகவும் கூறினார் டபாடா.
ஃபேப்ரிஸியோவை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் பார்த்தது மனதுக்கு ஆறுதலாக இருந்ததாக கூறினார் அவர்.
சிறு வயதில் கிடைத்த மோசமான அனுபவங்களுக்குப் பிறகு தனது உடலையே அவமானகரமான ஒன்றாக கருதியதாகவும் பாலுறவு என்பதை மோசமான ஒன்றாகப் பார்த்ததாகவும் கூறுகிறார் டபாடா.
மக்களின் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைப்பதாகவும் அவர்களுடன் உறவை வளர்த்துக்கொள்ள முனைவதாகவும் கூறுகிறார் டபாடா.
தனது அனுபவம் பல குடும்பங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றும் கூறுகிறார் அவர்.
குழந்தைகளுடன் பெற்றோர் நிறைய பேச வேண்டும். தவறான வழியில் சென்றால் சரி செய்ய வேண்டும் என்றும் டபாடா வலியுறுத்துகிறார்.
பாதிக்கப்பட்டவர்களை ஒருபோதும் குறை கூறக்கூடாது என்று கூறும் அவர், அவர்களது நடத்தையாலோ உடையாலோ தவறு நேர்வதில்லை. அருகில் இருப்பவரின் மோசமான மனம்தான் காரணம் என்பது அவரது கருத்து.
முடிவில் டபாடாவுக்கு முன்னதாகவே பரோல் கிடைத்துவிட்டது. ஏழரை ஆண்டு தண்டனையில் ஓராண்டுக்கும் குறைவாகவே அவர் சிறையில் கழித்திருந்தார்.
இந்த செய்தியில் டபாடா கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஃபேப்ரிஸியோ வின் பெயரையும் பிபிஸி மாற்றியுள்ளது. இது தவிர இந்நிகழ்வு நடந்த இடமும் குறிப்பிடப்படவில்லை.
(3 ஜூலை 2018 பிபிசி தமிழில் பிரசுரமான கட்டுரை இது)
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் தொற்று குறைவாக இருக்கும் இந்த 5 நாடுகளை அறிவீர்களா?
- பாடகி சுசித்ரா சாத்தான்குளம் வழக்கு தொடர்பான காணொளியை நீக்கியது ஏன்? - பிபிசிக்கு பேட்டி
- கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் நாளை முதல் தொடங்குகிறது பரிசோதனை
- இரானில் உண்மையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்தது? - அதிபர் வெளியிட்ட கணக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












