ஹரியானா சாமியார் ராம் ரஹீம் பற்றி வெளியாகும் அதிர்ச்சிகரமான தகவல்கள்
கடந்த வெள்ளியன்று தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யபட்டுக் கைது செய்யப்படும் வரை குர்மித் ராம் ரஹீம் சிங் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டபின் அவரைப்பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின்றன.

பட மூலாதாரம், EPA
அவரின் ஆசிரமத்தில் இருந்த சிஷ்யை ஒருவர் கடந்த 2002-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு அநாமதேயமாக எழுதிய கடிதத்தில் தனக்கு நேர்ந்த இன்னல்களை விவரித்தார்.
அக்கடிதத்தில், "மஹராஜ் (குர்மித் ராம் ரஹீம் சிங்) என்னை அணைத்துக்கொண்டு, தன் ஆழ் மனதில் இருந்து என்னை நேசிப்பதாகக் கூறினார். என்னுடன் உறவுகொள்ள விரும்புவாதாகவும் சொன்னார்," என்று எழுதியிருந்தார்.
அவருக்கு சிஷ்யை ஆகிவிட்டதால், அப்பெண் தனக்கு அவரது உடலையும் உள்ளத்தையும் சமர்ப்பணம் செய்து விட்டதாகவும், அதைத் தான் ஏற்றுக்கொண்டதாகவும் தன்னிடம் குர்மித் கூறியதாகவும், அதற்கு அப்பெண் ஆட்சேபித்தபோது, "நான் கடவுள் என்பதில் சந்தேகம் இல்லை," என்றும் கூறியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் குடும்பத்தினர், குர்மித்தின் கண்மூடித்தனமான பக்தர்கள் என்பதால் அவரைக் கொலை செய்தாலும், தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்றும், அப்படி எதிர்த்தாலும் தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு மூலம் சுலபமாக அதைச் சரிகட்டிவிட முடியும் என்று குர்மித் தன்னிடம் கூறியதாக அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கடிதம்தான் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் இந்தப் பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணை செய்யுமாறு சி.பி.ஐ-க்கு உத்தரவிடக் காரணமாக அமைந்தது.
"அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார். அவருக்கு தண்டணை வழங்க சி.பி.ஐ மற்றும் நீதிமன்றத்துக்கு 15 ஆண்டுகள் ஆனது," என்று பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் உத்சவ் சிங் பைன்ஸ் பிபிசியிடம் கூறினார்.
அந்தப் பெண்கள் தொடர் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாகவும், தண்டணை அறிவிக்கப்பட்ட பின்னர் அவை குறைந்திருப்பதாகவும் கூறும் உத்சவ் சிங், அவர் மீதான பிற பாலியல் வல்லுறவு வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகக் கூறினார்.
அந்தச் சாமியாருக்கு எதிரான அப்பெண்ணின் அநாமதேயக் கடிதத்தை வெளியிட்ட 'பூரா சச்' (முழு உண்மை) என்னும் உள்ளூர் பத்திரிகையின் ஆசிரியர் ராம் சந்தர் சத்ரபதி, அது வெளியான சில வாரங்களிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பு சில வாரங்களில் வெளியாகும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால், தன் மீதான கொலைக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அந்த சாமியார்.

பட மூலாதாரம், Getty Images
தனக்கு எதிராக கொடிய குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், சிறைக்கு அனுப்பப்படும்வரை மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த அந்தச் சாமியார், கோடிக்கணக்கில் சொத்துகளையும், லட்சக்கணக்கில் பக்தர்களையும் சேர்த்துக்கொண்டே இருந்தார்.
விலை உயர்ந்த ஆடை, அணிகலன்களை அணிவதால் 'பகட்டுச் சாமியார்' என்று அழைக்கப்பட்ட அவர் திரைப்படங்களில் நடித்ததோடு, இசை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றினார்.
தீர்ப்பு நாளன்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் அணிவகுப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார் அந்தச் சாமியார். ஆனால், அருகில் இருந்த நகரங்களில் குழுமிய அவரது ஆயிரக்கணக்கான பக்தர்கள், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால் 'இந்தியா உலக வரைபடத்தில் இருந்தே அழிக்கப்படும்' என்று மிரட்டல் விடுத்தனர்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஹெலிகாப்டர் மூலம் அவரைச் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, குர்மித் உடன் இருந்த ஒரு பெண் இருந்தது பலரின் புருவங்களையும் உயர்த்தியது.
அவர் தனது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் என்று அவர் கூறினாலும், அவர்களுக்குள் இருக்கும் உறவு பலராலும் கேள்விக்கு ஆளாக்கப்படுகிறது. தன் பேஸ்புக் பதிவுகளில், குர்மித் தனக்கு தந்தை, நண்பர் மற்றும் சகோதரர் என்று அப்பெண் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பின்னர் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்ட பிறகு, குர்மீத் ராம் ரஹீமின் அரசியல் தொடர்புகளும் தற்போது ஆராயப்படுகின்றன.
அவருக்கு இருக்கும் லட்சக் கணக்கான ஆதரவாளர்களால், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் அவரால் செல்வாக்கு செலுத்த முடிந்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், 2014-இல் நடந்த ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களை பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சாமியார் குர்மீத். அவரது தலைமையகம் அமைந்துள்ள சிர்சா நகரில், அக்டோபர் 2014-இல் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதியும் அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

பட மூலாதாரம், Courtesy: Honeypreet Insan
சில நாட்கள் கழித்து, தூய்மை இந்தியா திட்டத்தில் அவர் கலந்து கொண்டதைப் பாராட்டி ட்விட்டரிலும் பதிவிட்டார் மோதி. பெரும்பாலும் மிகவும் முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'இசட் ப்ளஸ்' பிரிவு பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்படும் அளவுக்கு அரசியல் செல்வாக்குடன் வலம் வந்தார் குர்மீத் ராம் ரஹீம்.
ஆனால், திங்களன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டபோது மனமுடைந்த நிலையில் இருந்த குர்மீத் மன்னிப்பு வழங்குமாறு கண்ணீர்விட்டு மன்றாடியதாகக் கூறப்படுகிறது. அதைக்கண்டு, கொஞ்சமும் மனம் தளராத நீதிபதி, இரண்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கினார்.
அவை ஏக கால தண்டனைகள் இல்லை என்பதால், மொத்தமாக 20 ஆண்டுகளை அந்தச் சாமியார் சிறையில் கழித்தாக வேண்டும்.
தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று சாமியாரின் வழக்கறிஞர்கள் கூறினாலும், தண்டணைக் காலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோருவோம் என்கின்றனர் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள்.
ஆக, இந்தச் சண்டை மேல் நீதிமன்றங்களிலும் தொடரவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













