திருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்

சும்பா தீவில் கிறிஸ்தவம், இஸ்லாம் உடன் மராபு என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய மதத்தைப் பின்பற்றுபவர்களும் வாழ்கிறார்கள்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சும்பா தீவில் கிறிஸ்தவம், இஸ்லாம் உடன் மராபு என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய மதத்தைப் பின்பற்றுபவர்களும் வாழ்கிறார்கள்.
    • எழுதியவர், லிசா தம்புனன்
    • பதவி, பிபிசி இந்தோனேசிய சேவை

இந்தோனேசியாவின் சும்பா தீவில், திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் சர்ச்சைக்குரிய வழக்கம் முடிவு கட்டப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

இந்த தீவில் ஒரு பெண் கடத்திச் செல்லப்படும் காணொளி வெளியான பிறகு தேசிய அளவில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

சும்பா தீவில், சிட்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் 28 வயதான பெண், வேலை விஷயமாக இரண்டு ஆண்களைச் சந்தித்துள்ளார்.

தனியாகச் செல்வது குறித்து முதலில் இந்த பெண் யோசித்துள்ளார். ஆனால், வேலை என்பதால் தனது அச்சங்களை ஒதுக்கிவிட்டு அந்த நபர்களைச் சந்தித்துள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து, வேறொரு இடத்தில் சந்திப்பைத் தொடர உள்ளதாகவும், தங்களது காரில் வருமாறும் சிட்ராவை அந்த நபர்கள் அழைத்துள்ளனர்.

ஆனால், தனது இரு சக்கர வாகனத்தில் வருவதாகக் கூறிய சிட்ரா வண்டியை எடுக்கச் சென்றார். அப்போது திடீரென சில ஆண்கள் அவரை பிடித்தனர்.

‘’நான் அவர்களை எட்டி உதைத்துக் கத்தினேன். அவர்கள் என்னை காருக்குள் தள்ளினர். உதவிக்கு யாரும் இல்லை. காருக்குள் இருந்த இரண்டு பேர் என்னைப் பிடித்து இழுத்தனர். எதற்காக என்னைப் பிடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்’’ என்கிறார் சிட்ரா. திருமணத்திற்காக சிட்ரா கடத்தப்பட்டார்.

சிட்ராவை கடத்தியவர்கள், அவரது தந்தை வழியைச் சேர்ந்த தூரத்து உறவினர்கள்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சிட்ராவை கடத்தியவர்கள், அவரது தந்தை வழியைச் சேர்ந்த தூரத்து உறவினர்கள்.

மணமகள் கடத்தல் என்ற சர்ச்சைக்குரிய வழக்கம் சும்பா தீவில் இருந்து வருகிறது. ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆணின் நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ அப்பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்தி வருவார்கள்.

இதற்குத் தடை விதிக்க கோரி, பெண்கள் உரிமைக் குழுக்கள் நீண்ட காலம் போராடி வந்தாலும், சும்பா தீவின் சில பகுதிகளில் இந்த நடைமுறை இன்னும் தொடர்ந்து வருகிறது.

ஆனால், தற்போது பெண்கள் கடத்தப்படும் காணொளி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவிய பிறகு, இந்த வழக்கத்திற்குத் தடைவிதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

’’இறப்பது போன்ற வலியை உணர்ந்தேன்’’

காரில் கடத்தப்பட்ட சிட்ரா, திருமணம் நடக்கவிருந்த பாரம்பரிய வீட்டை அடைவதற்கு முன்பு தனது தோழனுக்கும், பெற்றோர்களுக்கும் செல்போன் மூலம் மேசேஜ் அனுப்பியுள்ளார்.

சடங்குகள் இந்தோனீசியா

பட மூலாதாரம், Getty Images

சிட்ராவை கடத்தியவர்கள், அவரது தந்தை வழியைச் சேர்ந்த தூரத்து உறவினர்கள்.

‘’அங்கு நிறைய பேர் காத்திருந்தனர். நான் வந்தவுடன் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர்’’ என்கிறார் சிட்ரா.

சும்பா தீவில் கிறிஸ்தவம், இஸ்லாம் உடன் மராபு என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய மதத்தைப் பின்பற்றுபவர்களும் வாழ்கிறார்கள்.

‘’சும்பா தீவில், உங்கள் நெற்றியில் தண்ணீர் வைத்துவிட்டால், நீங்கள் வீட்டை விட்டுச் செல்லக்கூடாது என்ற நம்பிக்கையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால், என் நெற்றியில் தண்ணீர் வைக்க வரும்போது, கடைசி நொடியில் நான் நகர்ந்துவிட்டேன். அவர்களால் எனது நெற்றியில் தண்ணீரை வைக்க முடியவில்லை’’ என்கிறார் சிட்ரா.

விரும்புவதாலே கடத்தி வந்ததாகவும், திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறும் சிட்ராவிடம் கடத்தல்காரர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டனர்.

’’என் தொண்டை வறண்டு போகும் வரை அழுதேன். மரத் தூண்களில் என் தலையை மோதிக்கொண்டேன். அவர்கள் என்னை புரிந்துக்கொள்வார்கள் என நினைத்தேன்’’ என்கிறார் அவர்.

அடுத்த ஆறு நாட்களுக்கு ஒரு கைதியைப் போல அந்த வீட்டில் சிட்ரா அடைக்கப்பட்டிருந்தார்.

‘’இரவு முழுக்க அழுதேன். தூங்கவேயில்லை. உயிரிழப்பதைப் போல உணர்ந்தேன்’’ என்கிறார் சிட்ரா.

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த வழக்கம் தொடர்கிறது

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்காததால் இந்த வழக்கம் தொடர்கிறது

அந்த குடும்பத்தினர் வழங்கிய உணவைச் சாப்பிடாமல் சிட்ரா தவித்து வந்துள்ளார். ‘’ நான் உணவைச் சாப்பிட்டால், திருமணத்திற்குத் தயாராகிவிடுவார்கள்’’ என்கிறார்.

சிட்ராவை விடுவிக்கக் கோரி அவரது குடும்பத்தினரும், பெண்கள் உரிமைக் குழுவும், கிராமப்பெரியவர்கள் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில், சிட்ராவின் சகோதரி சிட்ராவுக்கு தேவையான உணவையும் தண்ணீரையும் யாருக்கும் தெரியாமல் வழங்கி வந்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 7 பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகப் பெண்கள் உரிமைக் குழுவான பெருவாட்டி கூறுகிறது. ஆனால், தீவின் தொலைதூர பகுதிகளில் இன்னும் அதிக அளவில் கடத்தல் நடக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

சிட்ரா உட்பட மூன்று பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஜூன் மாதம் எடுக்கப்பட்ட காணொளியில் ஒரு பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்யப்படுகிறது.

‘’ பெண்களும் வேறு வழியில்லாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள். இது குடும்பத்தினர் செய்து வைக்கும் திருமணம் போன்றது. அதில் பெண்களால் தங்களது விருப்பங்களைச் சொல்ல முடியாது’’ என்கிறார் பெருவாட்டி அமைப்பின் செயற்பாட்டாளர் அப்ரிசா.

’’திருமணத்திற்கு மறுக்கும் பெண்களை அச்சமூகத்தினர் களங்கப்படுவார்கள். அந்த பெண்களுக்கு யாருடனும் திருமணம் ஆகாது எனவும், குழந்தைகள் பிறக்காது எனவும் சாபம் விடுவார்கள்’’ என்கிறார் அவர்.

சிட்ராவும் இதேபோன்ற சாபத்தை எதிர்கொண்டார்.

‘’நான் எனது தோழனைத் திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது. கடவுளுக்கு நன்றி’’ என்கிறார் மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு வந்த சிட்ரா.

உள்ளூர் வரலாற்றாசிரியர் ஃபிரான்ஸ் வோரா ஹெபி, மணமகள் கடத்தல் என்ற வழக்கம் சும்பாவின் கலாச்சார மரபுகளின் இல்லை என்று கூறுகிறார். பெண்களைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர்களால் இது செய்யப்படுகிறது என்கிறார் அவர்.

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த வழக்கம் தொடர்கிறது என்கிறார் ஃபிரான்ஸ்.

தேசிய அளவில் எதிர்ப்பு எழுந்த பிறகு, இந்த கடத்தல் வழக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என சும்பா பிராந்திய தலைவர்கள் ஒரு கூட்டு அறிவிப்பில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிந்தாங் புஷ்பயோகா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சும்பா தீவிற்குச் சென்றார்.

‘’ சும்பா கலாச்சாரத்தில் திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் வழக்கம் இல்லை என உள்ளூர் மத தலைவர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்’’ என்றார் அமைச்சர் பிந்தாங் புஷ்பயோகா.

மேலும், பெண்களுக்கு எதிரான இந்த வன்முறையை நிறுத்த அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை ’நீண்ட பயணத்தின் முதல் அடி’ என பெண்கள் உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :