பிகாரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் சிறையில் தள்ளப்பட்டது ஏன்? பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தன் தரப்பு கருத்துகளையும் என்ன நடந்தது என்பதையும் நீதிபதியிடம் பதிவு செய்தபோது, அரசாங்கப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

பாலியல் தாக்குதல் மற்றும் வல்லுறவு தொடர்பாக இந்தியாவில் பல கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அனைத்தும் சட்டப்படிதான் நடக்கிறதா? களநிலவரத்தில் சட்டப்புத்தகங்கள் பின்பற்றப்படுகிறதா?

பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க இந்த சட்டமும், சமூகமும், நிர்வாகமும் பாதிக்கப்பட்டவருக்கு எந்த அளவிற்கு உதவுகிறது என்பதுதான் இங்கு கேள்வி. காவல்நிலையத்திலும், தன் வேலையிடத்திலும் இந்த சமூகத்திலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் நேர்கொள்ளும் துன்பங்கள் ஏராளம்.

சமீபத்தில் பிகாரில் உள்ள அராரியா பகுதியை சேர்ந்த ஒரு பெண், கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். அதோடு சிறையிலும் அடைக்கப்பட்டார். அந்த பெண்மணியும், அவருக்கு உதவியாக இருந்த அமைப்பின் இரு பெண் உறுப்பினர்களும், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திறாக சமஷ்டிபூரில் உள்ள தல்சிங் சரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தன் தரப்பு கருத்துகளையும் என்ன நடந்தது என்பதையும் நீதிபதியிடம் பதிவு செய்தபோது, அரசாங்கப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

பின்னர் 10 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய இரு உறுப்பினர்களான தன்மய் மற்றும் கல்யாணி இருவரும் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பாதிக்கப்பட்ட பெண், பிபிசியிடம் தன் நீதிக்கான போராட்டம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் பலரும் நீதி வேண்டி போராட அஞ்சுவதற்கு என்ன காரணம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு பிறகு...

என் பெயர் குஷி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) ஜூலை 6ஆம் தேதி இரவு நான் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, வெளி உலகத்திற்கு நான் குஷி என்றே அறியப்படுவேன். 10 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, இப்போதுதான் விடுவிக்கப்பட்டேன்.

நான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டேன்

பட மூலாதாரம், Getty Images

நான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டேன். எனக்கு உதவி செய்ய முன்வந்து, எனக்கு துணையாக நின்ற இருவரும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.

என்ன நடந்தது?

ஜூலை 10ஆம் தேதி எனக்கு நடந்த பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக புகாரளிக்க அராரியா அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நாங்கள் சென்றோம்.

குற்றவியல் சட்டம் 164 பிரிவுபடி மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

நானும், எனக்கு உதவ முன்வந்த கல்யாணி, தன்மய் மற்றும் மேலும் சிலர் அராரியா மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றோம்.

நான் பள்ளிப்படிப்பு எதுவும் படிக்கவில்லை. ஆனால், என் 22 வயதில் பல விஷயங்களை பார்த்த அனுபவங்களும் கற்றுக்க கொண்ட பாடங்களும் அதிகம்.

நாங்கள் தன்மய் மற்றும் கல்யாணியின் வீட்டில் வேலைப்பார்க்கிறோம்.

சட்டத்திற்கு முன் அனைவருமே சமம் என்று கற்றுக் கொண்டது அங்குதான்.

சட்டத்திற்கு முன் அனைவருமே சமம்

பட மூலாதாரம், Getty Images

அன்று நீதிபதி முன்பு வாக்குமூலம் பதிவு செய்ய எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது.

என்னை பாலியல் வல்லுறவு செய்த நபரும் அங்கு இருப்பார் என்று தெரிந்திருக்கவில்லை.

என்ன நடந்தது?

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த பெண்ணிற்கு தெரிந்த ஓர் இளைஞர் , அவருக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுத்தருவதாகக் கூறி, அழைத்து சென்றுள்ளார். ஆள் அரவமற்ற இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்து நான்கு நபர்கள் இவரை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், உடன் இருந்தவரை உதவிக்காக இந்த பெண்மணி அழைத்தபோது, அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அந்த ஆண் எனக்கு வண்டி ஓட்ட கற்றுத்தருவதாக கூறினான். எனக்கு சைக்கிள் ஓட்ட மிகவும் பிடிக்கும். வண்டி ஓட்டத் தெரிந்தால், யாரையும் எதிர்பார்காமல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். சில நாட்கள் அவன் எனக்கு நன்றாக கற்றுக் கொடுத்தான். ஜூலை 6 அன்று யாருமே இல்லாத இடத்திற்கு கூட்டிச் சென்றான். அதற்கு பிறகு நடந்த விஷயத்திற்கு நீதி கேட்டுதான் நான் நீதிமன்றத்தில் இருக்கிறேன்" என்கிறார் குஷி.

குஷி

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றத்தில் அவனோடு, அவனது தாயும் இருந்தார். எனக்கு மேலும் பதற்றமாகிவிட்டது. அன்று இரவு நடந்தது எல்லாம் என் கண்முன் மீண்டும் வந்தது.

நான் ஏன் நீதிமன்றத்தில் அவனை பார்க்க வேண்டும்? அவன் இல்லாத இடத்தில் நான் வாக்குமூலம் பதிவு செய்ய முடியாதா?

விரைவில் வாக்குமூலம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்தேன்

நீதிமன்றத்தில் நடந்தவை...

இதே யோசனையில் 3 மணி நேரமாக அங்கு நின்று கொண்டிருந்தேன். என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அங்கு அமர ஒரு இருக்கை கூட இல்லை.

அன்று இரவு நடந்தவற்றை வெளியே சொல்ல எனக்கு விருப்பமில்லை.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணை இந்த சமூகம் எப்படி நடத்தும் என்பது நமக்கு தெரியும்.

ஏன் இவள் சைக்கிள் ஓட்ட வேண்டும்? அந்தப்பையனிடம் ஏன் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும்? ஏன் இவள் வெளியே சுற்ற வேண்டும் என்று என்னைதான் கேள்வி கேட்பார்கள்

இதெல்லாம்தான் என் யோசனையில் இருந்தது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணை இந்த சமூகம் எப்படி நடத்தும் என்பது நமக்கு தெரியும்.

பட மூலாதாரம், Getty Images

நான் படித்திருக்கவில்லை, ஏன் சைக்கிள் ஓட்ட வேண்டும், எனக்கு எதற்கு ஸ்மார்ட் போன் என்று என்னிடம் குற்றம் குறை கண்டுபிடிக்க தொடங்கிவட்டார்கள் உள்ளூர் மக்கள்.

ஆனால், தற்போது நான் பேசவில்லை என்றால், அந்த ஆண்கள் மீண்டும் என்னை தொல்லை செய்வார்கள் என்று என் அத்தை கூறினார்.

மேலும், எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் நினைத்தோம். கல்யாணி மற்றும் தன்மய் இருவரும், முதலில் போலீஸில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள்.

கடந்த சில நாட்களில் எனக்கு நடந்தவற்றை எத்தனை முறை கூறியிருப்பேன். அன்று இரவு நடந்ததை போலீஸ் பதிவு செய்யும்போது, இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

யார் மீது புகார் அளித்தோமோ அந்த நபரின் குடும்பத்தினரும் எங்களிடம் பேச முயற்சித்தார்கள்.

அந்த நபரோடு நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுகூட கூறினார்கள். எங்களுக்கு அவ்வளவு அழுத்தம் தரப்பட்டது. இப்போது நினைத்தாலும் எனக்கு பதற்றமாக இருக்கிறது.

என்னைப் பற்றி செய்திகள் அனைத்து செய்தித்தாள்களிலும் வந்துவிட்டன. என் பெயர், முகவரி கூட வெளியிடப்பட்டது.

இதில் இருந்து எல்லாம் என்னைப் போன்றோரை காப்பாற்ற விதி இருக்கிறதா? எனக்கு நடந்த பாலியல் வல்லுறவு குறித்து என்னை மீண்டும் மீண்டும் ஏன் பேச சொல்கிறார்கள்? ஏன் அனைத்தும் என்னைப்பற்றியே இருக்கிறது?

நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு, நான் உள்ளே அழைக்கப்பட்டேன். நீதிமன்றத்துக்குள் என்னுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

என்ன ஆகும்? என்ன செய்வது? தன்மய் மற்றும் கல்யாணி இருவரும் வெளியே இருக்கிறார்கள்.

இந்நிலையில், நான் அன்று இரவு நடந்தவற்றை நீதிபதியிடம் கூற, அதை ஒருவர் எழுதினார்.

அது முடிந்தபிறகு என்னிடம் அது படித்துக் காட்டப்பட்டது. படித்தவர் முகத்தில் துணி கட்டியிருந்ததால் என்னால் எதையும் ஒழுங்காக கேட்க முடியவில்லை. அவர் பேசியது எதுவும் புரியவில்லை.

துணியை எடுத்துவிட்டு படிக்குமாறு கூறினேன். ஆனால் அவர் எடுக்கவில்லை.

Banner image reading 'more about coronavirus'
Banner

என்னை அந்த வாக்குமூலத்தில் கையெழுத்திடுமாறு நீதிபதி கூறினார்.

நான் பள்ளிக்கு செல்லவில்லைதான். ஆனால், படிக்காமல் எதிலும் கையெழுத்திடக்கூடாது என்பது எனக்கு தெரியும். நான் கையெழுத்திட மறுத்து கல்யாணி அக்காவை அழைத்தேன்.

அதனால் கோபமடைந்த நீதிபதி, எங்கள் மீது நம்பிக்கை இல்லையா. நீதிமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா என கத்தினார்.

என் மனதில் எதுவுமே ஓடவில்லை. நான் ஏதாவது தப்பு செய்துவிட்டேனோ என்று நினைத்தேன். "உங்களை நம்பாமல் இல்லை. ஆனால், நீங்கள் படித்தது எனக்கு எதுவும் புரியவில்லை" என்று கூறினேன்.

நான் பயந்துபோய் கல்யாணி அக்காவிடம் சென்றேன். பின்னர் நீதிபதி மற்ற நீதிமன்ற பணியாளர்களையும், போலீஸாரையும் உள்ளே அழைத்தார்.

அதனைத் தொடர்ந்து நானும் கல்யாணி அக்காவும் உள்ளே சென்றோம். நீதிபதி இன்னும் கோபமாகவே இருந்தார். நாங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டோம். ஆனால், யாருமே நாங்கள் பேசுவதை கவனிக்கவில்லை.

மீண்டும் மீண்டும் என்னையே குற்றம் சொன்னார்கள்.

நீதிபதியாவது நாங்கள் சொல்வதை கேட்பார் என்று நினைத்தோம். கல்யாணி மற்றும் தன்மய் இருவரும் என் பக்க நியாயத்தை எடுத்துவைக்க முயன்றனர்.

எனக்கு புரியவில்லை என்றால், நான் படித்து பார்த்த பிறகு கையெழுத்திடலாம் என்று நீதிபதியிடம் எடுத்துக் கூறினார்கள்.

மீண்டும் மீண்டும் என்னையே குற்றம் சொன்னார்கள்

பட மூலாதாரம், Getty Images

"உங்களுக்கு தெரியாது இங்கு எவ்வளவு பணி இருக்கிறது என்று" என நீதிபதி கூறினார்.

நீதிக்காக போராடுவோம்...

என்ன எழுதியிருக்கிறது என்பது புரியாதவரை வாக்குமூலத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று கூறினோம். அது சட்டப்படி குற்றமா?

அந்த நீதிமன்ற அறையே அவ்வளவு இறைச்சலாக இருந்தது. நாங்கள் பேசியது எதுவும் யாருக்கும் கேட்டிருக்காது.

நான், கல்யாணி அக்கா, தன்மய் என நாங்கள் மூவரும் அரசாங்கப் பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி சிறையில் தள்ளப்பட்டோம்.

எனக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. எனக்கு உதவி செய்த இருவர் சிறையில் இருக்கிறார்கள்.

எங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தவறாக நடந்துகொண்டோம் என்றும் வாக்குமூல அறிக்கையை கிழிக்க முயன்றோம் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

எங்களுக்கு நீதி வேண்டும். தொடர்ந்து போராடுவோம்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: