அமிதாப் பச்சன்: 'கொரோனா வைரஸ் குணமாகவில்லை; ஊடகச் செய்திகள் பொய்யனாவை'

அமிதாப்

பட மூலாதாரம், Getty Images

கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று குணமாகி விட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தித் தொலைக்காட்சிகள் சிலவற்றில் வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

தமக்கு தொற்று தற்போது இல்லை என வெளியாகியுள்ள செய்தி, " தவறானது, பொறுப்பற்றது உண்மைக்குப் புறம்பானது மற்றும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பொய்," என்று அமிதாப் பச்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதிகளின் மகள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் ஜூலை 11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத் தகவலை அப்போது அவர் ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

77 வயதாகும் அமிதாப் பச்சன் பாலிவுட் திரையுலகில் சுமார் 50 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் தலா ஐம்பது திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

அமிதாப் குடும்பத்தில் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாகவும் அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அபிஷேக் பச்சனும் ட்விட்டரில்தான் தெரிவித்திருந்தார்.

பின்னர் அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தங்கள் உடல் நிலை குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று தங்களுக்கு கொரானா வைரஸ் பற்றி உறுதியானபோது அபிஷேக் பச்சன் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :