நரேந்திர மோதி உரை: "இப்போது இந்தியா வாய்ப்புகளின் நிலம்"

பட மூலாதாரம், GoI
கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் இந்தியா அமெரிக்கா உறவு தொடர்பான `இந்தியா ஐடியாஸ்` மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா அமெரிக்கா வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் டெல்லியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோதி உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய நரேந்திர மோதி வாழ்வது எந்தளவுக்கு ஏதுவானதாக இருக்கவேண்டுமோ அதேபோல தொழில் செய்வதும் ஏதுவானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வெளிப்படையானதாகவும் சீர்திருத்தங்களை மையப்படுத்தியதாகவும் மாற்றுவதற்காக தாங்கள் முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறினார்.
தங்களது சீர்திருத்தங்கள் போட்டி, வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் மயமாக்கல், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், கொள்கை நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி உள்ளதாகவும் நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
வரலாற்றிலேயே மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், உள்கட்டமைப்பு துறையில் அதிக அளவில் முதலீடு செய்து பல கோடி பேருக்கு வீடு கட்டுதல், சாலை அமைத்தல், துறைமுகம் அமைத்தல் ஆகியவற்றில் பங்கெடுத்துக் கொள்ளுமாறும் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார்.
தற்போது முதல்முறையாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமான இணையதள பயன்பாட்டாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய வருமாறு அவர் தனது உரையின் போது அழைப்புவிடுத்தார்.
இந்தியாவில் மருத்துவத் துறை ஆண்டுக்கு 22 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.
"வரலாறு காணாத வகையில் வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள், வேளாண் உற்பத்தி பொருட்கள் விநியோகம், மீன் வளர்ப்பு, இயற்கை வேளாண்மை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன," என அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












