"கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்" - சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா

பட மூலாதாரம், Getty Images
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள்லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி இறுதியாக வெற்றி பெற்றால் அதனை பெருமளவில் உற்பத்தி செய்ய முயன்று வருகிறது.
இந்நிலையில், அவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்தியாவுக்கு அளிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
"எங்கள் நிறுவனம் தயாரிக்கும் 50 சதவீத தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ளவை வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படும். பெரும்பாலும் இந்த மருந்துகள் அரசாங்கத்திற்கு விற்கப்படும். நோய்தடுப்பு திட்டங்கள் மூலம் மக்கள் அதனை இலவசமாக பெறுவார்கள்" என இந்தியா டுடே ஊடகத்திடம் பேசிய அதார் பூனாவாலா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும்.
இந்தியாவில் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் இருந்து பெற முயன்று வருவதாக குறிப்பிட்ட அதர் பூனாவாலா, இது வெற்றி அடைந்தால், அதிக அளவிலான தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
"நாங்கள் திட்டமிட்டது போன்ற முடிவுகள் வந்தால், இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களுக்குள் சில லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்க முடியும். பின்னர் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் 300ல் இருந்து 400 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்."
இந்த தடுப்பூசிகள் யாருக்கு முதலில் சென்றடையும் என்ற கேள்விக்கு பதிலளித்த அதர் பூனாவாலா, இதன் தேவை யாருக்கு அதிகம் இருக்கிறது என்பதை பொறுத்து அரசாங்கமே இதனை முடிவு செய்யும் என்று குறிப்பிட்டார்.
"முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இது முதலில் சென்றடைய வேண்டும் என்பதே சரியான நெறிமுறையாகும். நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்களுக்கு பின்னர் வழங்கிக் கொள்ளலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் விலை
இந்த தடுப்பூசியின் விலை குறித்து தற்போது கூறுவது கடினம் என்றாலும், இது அனைவருக்கும் மலிவு விலையில் நிச்சயம் கிடைக்கும்படி இருக்கும் என்று அதர் பூனாவாலா குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
"நிச்சயம் இந்த தடுப்பூசி மலிவு விலையில் கிடைக்கும். இன்று கொரோனா பரிசோதனை செய்ய 2,500 ரூபாய் செலவாகிறது. ரெம்டிசிவிர் போன்ற மருந்துகள் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. நாங்கள் இந்த தடுப்பூசி ஒன்றை சுமார் 1,000 அல்லது அதற்கு குறைவான ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளோம். ஆனால், இதனை யாரும் காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்காது என்று நினைக்கிறேன்.அரசாங்கத்தின் நோய் தடுப்பு திட்டங்கள் வழியாக இது மக்களுக்கு கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
ஆப்ரிக்க நாடுகளில் தடுப்பூசியின் விலையை 2 அல்லது 3 டாலர்கள் என்ற அளவில் விலையை நிர்ணயம் செய்ய தனது நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"இந்த பெருந்தொற்று காலத்தில் நாங்கள் லாபம் பார்க்க விரும்பவில்லை. பெருந்தொற்று முடிந்தவுடன், இந்தத் தடுப்பூசிகளை சந்தையில் என்ன விலையில் விற்பனை செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு, மற்ற மருநதுகள் போல தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படும். ஆனால், தற்போதைக்கு அதிக விலையில் விற்பனை செய்ய மாட்டோம்" என்று அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன?
- அதிமுகவை விமர்சிக்கும் பாஜக: கந்த சஷ்டி கவசத்தால் கூட்டணியில் முரண்?
- 'நான் ஒன்றும் முட்டாள் கிடையாது': கிரண்பேடி; 'பலமுறை சொல்லிவிட்டேன்': நாராயணசாமி
- N-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை - யார், எப்படி பயன்படுத்த வேண்டும்?
- ஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












