கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பிகார் பெண் கத்திப் பேசியதால் கைது

பாலியல் வல்லுறவு சித்தரிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சீட்டு திவாரி
    • பதவி, பிபிசிக்காக

பிகாரில் உள்ள அராரியா பகுதியை சேர்ந்த ஒரு பெண், கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர். அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்மணியும், அவருக்கு உதவியாக இருந்த அமைப்பின் இரு பெண் உறுப்பினர்களும், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திறாக சமஷ்டிபூரில் உள்ள தல்சிங் சரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, நாட்டில் உள்ள 350-ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பட்னா உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த பிரச்சனையில் தலையிட்டு, விசாரிக்க வேண்டும் என கடிதங்கள் எழுதியுள்ளனர்.

கடந்த ஜூலை 6ஆம் தேதி தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, அடுத்த நாள் அராரியாவில் இருக்கும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் பாதிக்கப்பட்ட பெண்மணி.

அவரின் வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறை, இந்த வழக்கை இந்திய தண்டனைச்சட்டம் 376(டி)-ன் கீழ் பதிவு செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த பெண்ணிற்கு தெரிந்த ஓர் இளைஞர் , அவருக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுத்தருவதாகக் கூறி, அழைத்து சென்றதாகவும், ஆள் அரவமற்ற இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்து நான்கு நபர்கள் இவரை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், உடன் இருந்தவரை உதவிக்காக இந்த பெண்மணி அழைத்தபோது, அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் சமூக சேவையில் ஈடுபடும் ஜன் ஜக்ரன் சக்தி சங்கதன் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் உதவியோடு இந்த பெண்மணி வீட்டை அடைந்ததாகவும், வீட்டில் வாழ்வதற்கு கடினமாக இருந்த நிலையில், மீண்டும் அந்த அமைப்பின் உறுப்பினர்களுடன் சென்று தங்கிவிட்டார்.

ஜூலை 7 மற்றும் 8ஆம் தேதிகளில் அந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, குற்றவியல் நடுவர் முன்னிலையில், ஜூலை 10ஆம் தேதி இவரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

குற்றவியல் நடுவர் முன் வாக்குமூலம்:

நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து ஜன் ஜக்ரன் சக்தி ஜகந்தன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்மணியுடன், அந்த அமைப்பை சேர்ந்த இரு உறுப்பினர்களும் குற்றவியல் நடுவரை பார்க்க சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 10ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் அங்கு சென்றடைந்த அவர்கள், நான்கு மணி நேரம் காத்திருந்து வாக்குமூலம் அளித்ததாகவும், அப்போது, இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரும் அங்கு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் அறிக்கையில், "வாக்குமூலத்தை அளித்த பிறகு, குற்றவியல் நடுவர் அவரை கையெழுத்து போடுமாறு கேட்டபோது, பதற்றம் அடைந்துள்ளார் அந்த பெண்மணி. நீதிபதி படிப்பது தனக்கு புரியவில்லை என்று, அவருடன் வந்த கல்யாணி அக்காவை அழைக்குமாறு கூறியுள்ளார்."

கல்யாணி மற்றும் தன்மையீ ஆக்யோர் இந்த அமைப்பின் உறுப்பினர்க்ள். பாதிக்கப்பட்ட பெண்மணியுடன் அங்கு வந்திருந்தவர்கள்.

"பிறகு, இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியும் உள்ளே அழைக்கப்பட்டார். பிறகு, அந்த வாக்குமூலத்தில், பாதிக்கப்பட்ட பெண் கையெழுத்து போட்டுள்ளார். அந்த அறையிலிருந்து வெளியே வந்தவுடன், தனக்கு தேவைப்பட்ட போது நீங்கள் எங்கு சென்றீர்கள் என அந்த இரு பெண்களிடமும், பாதிக்கப்பட்ட பெண் சத்தமாக கேட்டுள்ளார்."

அந்த சத்தத்தை கேட்ட குற்றவியல் நடுவர், கல்யாணியை உள்ளே அழைத்துள்ளார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தை தனக்கு படித்து காண்பிக்கப்பட வேண்டும் என கல்யாணி கேட்டவுடன், சூழல் சற்று பரபரப்பானது. பாதிக்கப்பட்ட பெண், கல்யாணி மற்றும் தன்மையீ ஆகியோர் மாலை 5 மணி வரை காவலில் வைக்கப்பட்டு, பின் ஜூலை 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து உள்ளூர் பத்திரிக்கையன தைநிக் பாஸ்கரில் வெளியாகியுள்ள செய்தியில், "நீதிமன்ற அதிகாரி ஒருவர், இந்த மூவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின், முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண், வாக்குமூலம் கொடுத்ததாகவும் பிறகு அதை மறுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது," என வெளியாகியுள்ளது.

பிறகு, அந்த வாக்குமூலத்தின் நகலை கைப்பற்ற முயற்சிகள் நடந்ததாகவும், இத்தகைய செயல்களை பார்த்த குற்றவியல் நடுவர் கோபமடைந்து, இந்த மூன்று பெண்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

அந்த முதல் தகவல் அறிக்கையின் நகல் பிபிசிக்கு கிடைத்தது. இதுகுறித்து கருத்து கேட்க, அரசு தரப்பு வழக்கறிஞரை தொடர்பு கொண்டபோது, " ஊரடங்கு காரணமாக, நான் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு செல்வதில்லை. இந்த வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்று பதிலளித்தார் வழக்கறிஞர் லஷ்மி நாராயணன்.

பெண்

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து அராரியா பகுதி காவல்துறை அதிகாரியான புஷ்கர் குமாரிடம் செய்தியாளர் பேசியபோது, "அவர்கள் சிறைக்கு அனுப்பப்படவில்லை," என்றார். மேலும் கேள்விகள் எழுப்பியபோது, செய்தியாளர் பேசுவது கேட்கவில்லை என்றார்.

மீண்டும், தொலைபேசியில் அழைத்தபோது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. மாவட்ட கண்காணிப்பளர் துரட் செலி சவ்லராம் மற்றும் காவல்மகளிர் நிலைய பொறுப்பாளரான ரீடா குமாரி ஆகியோரை தொடர்புகொள்ள செய்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பிபிசி சார்பில் அனுப்பப்பட்ட மின் அஞ்சலுக்கும் பதில் கிடைக்கவில்லை.

350 வழக்கறிஞர்களின் முயற்சி

இந்திரா ஜெயசிங், பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட 350 வழக்கறிஞர்கள் பட்னா உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த பிரச்சனையில் உயர் நீதிமன்ற நீதிபதி தலையிட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது மிகவும் கடுமையான ஒரு செயல் என்றும், அந்த பெண்மணி மனதளவில் மிகவும் பலவீனமாக இருப்பதால், இந்த நேரத்தில், அவரை கவனித்துக்கொள்பவரிடமிருந்து விலகி இருந்தால், அது அவரின் உடல்நிலைக்கு பாதிப்பை உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

கூட்டுப்பாலியல் வழக்கு கிடப்பில் போடப்பட்டு, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கே முக்கியமானதாக தற்போது பார்க்கப்படுவதாவும், பாதிக்கப்பட்ட பெண்மணி சற்று 'துணிச்சலுடன்' நடந்துகொண்டதற்காக இவ்வாறு அவரின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விடுதலை வேண்டும் மகளிர் அமைப்புகள்:

இந்த வழக்கு குறித்த தகவல் வெளியானதும், பிகாரில் உள்ள மகளிர் அமைப்புகள், அந்த மூன்று பெண்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.

"இது மனிதத்தன்மையற்ற ஒரு முடிவு. அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு நடந்த கொடுமையை பலமுறை கூறுமாறும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். அவரின் அடையாளமும் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஒருவரும், அவரின் குடுமத்தினரும், அந்த பெண்ணை இவர் மணந்துகொள்வதன் மூலமாக வழக்கை முடித்துவிடலாம் என கேட்டுள்ளனர். அதை அந்த பெண்மணி மறுத்துள்ளார். அவர் 22 வயதாகும் பெண்மணி, தனது வழக்கை தைரியமாக நடத்த விரும்புகிறார். ஆனால், அவரின் 'சட்டநீதியான பொறுப்பாளர்' யார் என கேட்கப்பட்டுள்ளது. அவருக்கு ஊலவியல் ரீதியாக ஆலோசனைகள் அளிக்க அதிகாரிகள் யாரும் இல்லை. எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு நீதிவேண்டும்," என்கிறார், பிகாரின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவரான ராம்பரி.

பாலியல் வன்முறை தொடரான இந்திய சட்டங்கள்:

இந்தியாவில் உள்ள பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் என்று பார்த்தால், 1980களில்தான் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்பட்டது. அதன் விளைவாக, உண்மையை நிரூபிக்க வேண்டும் என்ற பொறுப்பு பெண்ணிடமிருந்து ஆணிடம் சென்றது. பிறகு 2013இல், குற்றவியல் திருத்தச்சட்டம், பெண்களை மய்யப்படுத்தியதாக மாற்றப்பட்டது.

இதுகுறித்து பேசும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கத்தீஜா ஃபாரூக்கீ, "இந்த சட்டத்தை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பற்றிய பாலியல் தகவல்களை வெளியிடக்கூடாது. அவரின் அடையாளம் பாதுக்கப்பட வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தனது வாக்குமூலத்தை அளிக்கும்போது, நம்பிக்கைக்கு உரிய ஒருவரை அருகில் வைத்துக்கொள்ள இந்த சட்டம் பெண்களுக்கு அனுமதி அளிக்கிறது. தனது வாக்குமூலத்தின் நகலையும் அந்த பெண்ணால் பெற்றுக்கொள்ள முடியும். முடிந்தால், இந்த வாக்குமூலத்தை ஒரு பெண் நீதிபதி முன்பு அளிக்கப்பட முயல வேண்டும் என்கிறது சட்டம். இத்தனை வசதிகள் சட்டத்தில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக ரீதியாகவும், சட்டரீதியாகவும், குடும்பத்தினராலும், மனிதநேயமற்ற விளைவுகளை எதிர்கொள்கின்றனர்." என்கிறார்.

பாலியல் வன்கொண்டுமையிலிருந்து மீண்டவரின் மன உளைச்சல்:

கத்தீஜா குறிப்பிட்ட விஷயங்களை மற்றொரு பாலியல் வன்கொடுமையிலிருந்து மீண்ட 21 வயது பெண்மணியான சுலேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாழ்க்கையிலும் பார்க்க முடியும்.

"பிகாரில் பணமுள்ள மனிதர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. நீங்கள் அதுகுறித்து புகார் அளித்தால், அவர்கள் உங்களிடம் மிகவும் மோசமாக கேள்வி கேட்பார்கள். என்ன நடந்தது? நீ எதற்காக அங்கே போனாய்? என்ன உடை அணிந்திருந்தாய்? திரும்பத்திரும்ப இதே கேள்விகளை கேட்கிறார்கள். காவல்நிலையத்தில் புகார் அளித்ததே நீங்கள் செய்த தவறு என்ற எண்ணத்தை வரவைத்துவிடுவார்கள். என்னை பாலியல் வன்புணர்வு செய்தது ஒரு காவல்துறை அதிகாரி. எனக்கு எப்படி நீதி கிடைக்கும்?" என்று கேட்கிறார் அவர்.

இந்த செய்தி வெளியாகும் வரை சட்டரீதியாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

ஜன் ஜக்ரன் சக்தி ஜகந்தன் அமைப்பு இந்த வழக்கு குறித்து தெரிவித்த சில விஷய்ங்களை தனிப்பட்ட முறையில் பிபிசியால் உறுதி படுத்த முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: