கொரோனா - குணமான பின்னும் தொடரும் ஆபத்துகள்: தமிழக மருத்துவர்கள் தடுப்பது எப்படி?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நோய்க்கான சிகிச்சையிலும் கோவிட் - 19க்கு பிந்தைய காலகட்டம் குறித்தும் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் தெரியவந்துள்ளன.

உலகம் முழுவதுமே கோவிட் - 19 நோய்க்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயிலிருந்து மீண்ட பிறகு நீண்ட கால பாதிப்புகள் அல்லது தொடர் பாதிப்புகள் ஏதும் நேரக்கூடுமா என்பது குறித்த தரவுகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கோவிட் - 19ஆல் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் நுரையீரல், இதயம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்பகட்ட தரவுகளின் அடிப்படையில், கோவிட் - 19ல் இருந்து மீண்டவர்களில் சிலருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்திருக்கிறது.

கோவிட் -19 நோய் தாக்கும்போது ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, ரத்தத்தின் அடர்த்தி அதிகமாவது. இதன் காரணமாகவே, நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்படுவது குறைகிறது.

கோவிட் - 19லிருந்து மீண்ட பிறகும் சிலருக்கு ரத்தத்தின் அடர்த்தியும் உறையும் வேகமும் அதிகமாகவே நீடிப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மூளையில் ரத்தம் உறைவது, மாரடைப்பு ஏற்படுவது ஆகிய பாதிப்புகள் சிலருக்கு நேரலாம்.

பேராசிரியர் டாக்டர் பரந்தாமன்
படக்குறிப்பு, பேராசிரியர் டாக்டர் பரந்தாமன்

"கோவிட் - 19 பாதிப்பின் காரணமாக, இப்படி பாதிப்புகள் நேர்வது இப்போதுதான் கண்டறியப்பட்டிருக்கிறது. இதை எதிர்கொள்ள ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறோம்.

அதாவது கோவிட் - 19லிருந்து குணமடைந்து செல்பவர்களுக்கு D-Dimer சோதனைகளைச் செய்யவேண்டும். அதில் ரத்தம் உறையும் தன்மை, அடர்த்தி அதிகமாக இருப்பது தெரியவந்தால், அபிக்ஸபான் போன்ற மருந்துகளை அடுத்த 3 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பக்கவாதம், இருதய பாதிப்பைத் தடுக்க முடியும்" என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியரான டாக்டர் பரந்தாமன்.

கோவிட் -19 நோய் தாக்கும்போது ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, ரத்தத்தின் அடர்த்தி அதிகமாவது.

பட மூலாதாரம், Getty Images

அடுத்ததாக, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலில் தண்ணீர் கட்டிக்கொள்வது ஒரு முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.

இதனால், இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக நோய்கள் ஆகியவை முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. "அதனைக் குறைக்க இப்போது லாஸிக்ஸ் என்ற மருந்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். ஏற்கனவே PALM என்ற முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் P என்பது prone positioning. A என்பது avoid activity L என்பது Low moleculor Heparin M என்பது methylprednisolone. இப்போது கூடுதலாக லாஸிக்ஸையும் சேர்த்து PALM Plus என்ற முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்கிறார் பரந்தாமன்.

கோவிட் - 19 நோய் தாக்கினால் ஏற்படக்கூடிய 'சைட்டோகைன்' பாதிப்பிற்கு தற்போது டோசுலிசிமாப் தற்போது அளிக்கப்படுகிறது. ஆனால், அதனுடைய பக்கவிளைவுகள் அதிகமாக உள்ள நிலையில், Bruton's Tyrosin Kinase inhibitorஆக செயல்படும் அகலாப்ரூட்னிப் மருந்து சைட்டோகைன் புயலை எதிர்கொள்வதில் சிறப்பாகச் செயல்படும் எனத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் பரந்தாமன்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்த நோய்த் தொற்றைத் தடுக்க, முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது தவிர, மூச்சுக் குழாயின் வெளிப்பகுதியைக் கழுவுவதையும் ஒரு வழிமுறையாக முன்வைக்கப்படுகிறது.

"மூச்சுக்குழாயில் இருந்து சோதனைக்காக மாதிரி எடுக்கப்படும்போது, நோய்த் தொற்று இருந்தால் அந்த சிறிய மாதிரியில் 71 கோடி வைரஸ்கள் இருக்கும். நோயுற்றவர் தும்மும்போதும் இருமும்போதும் 20 கோடி வைரஸ்கள் வெளியாகும். அந்த அளவுக்கு மூச்சுக் குழாயில் வைரஸ்கள் இருக்கும். ஆகவே வெதுவெதுப்பான உப்பு நீரில் வெளிப்புற மூச்சுக்குழாயைக் கழுவுவது நல்லது" என்கிறார் பரந்தாமன்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதற்கிடையில், நீண்டகாலமாக குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுவரும் பிசிஜி தடுப்பூசியை 60-65 வயதுடைய முதியவர்களுக்கு அளித்தால், அவர்களது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் என்பதால், அதனை அளித்துப் பரிசோதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பிசிஜி தடுப்பூசி இந்தியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், அந்தத் தடுப்பு மருந்தினை முதியவர்களுக்கு அளித்துப் பரிசோதிக்க தமிழக அரசின் அனுமதியை ஐசிஎம்ஆர் கோரியிருந்தது. தற்போது இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையத்தில் இந்த சோதனை விரைவில் துவங்கப்படவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :