பங்குச்சந்தையில் களமிறங்க இதுதான் சரியான நேரமா? பணம் ஈட்டுவது சாத்தியமா?

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

பங்குச்சந்தை என்னும் வார்த்தை அதில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் கவர்ச்சிகரமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மற்றவர்களுக்கோ இருக்கும் பணத்தையும் இழக்கும் இடமாகவும், ஏன் சிலருக்கு சூதாட்டம் நடக்கும் இடமாகவும் கூட தெரிகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது அதலபாதாளத்துக்கு சென்ற இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகள் தற்போது மிகக் குறுகிய காலத்தில் சரிவிலிருந்து மீண்டெழுந்து சரியான நேரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபத்தை தந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும், நாடு முழுவதும் வேலைவாய்ப்பும், தொழில்துறைகளும் முடங்கிப் போயுள்ள இந்த சூழ்நிலையில் பங்குச்சந்தையில் களமிறங்குவது சரியான நேரமாக இருக்குமா? ஏற்ற-இறக்கங்கள் நிறைந்த பங்குச்சந்தையில் நிலைத்திருக்க செய்ய வேண்டியது என்ன? பங்குச்சந்தையில் ஈடுபட பணத்தை தவிர்த்து வேறென்ன முன் தயாரிப்புகள் அவசியம்? பங்குச்சந்தைக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பு என்ன? தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் விலை உச்சத்தை அடைந்து வரும் வேளையில் இவற்றில் எது சிறந்த முதலீடு? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் காண்போம்.

சரிவிலிருந்து மீண்டு சரித்திரம் படைத்த பங்குச்சந்தைகள்

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் 11,200 புள்ளிகளுக்கு மேல் இருந்த இந்தியாவின் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நெஃப்டி, கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்தினாலும், முடக்க நிலை அறிவிப்பினாலும் அடுத்த மூன்றே வாரங்களில் 3,800க்கும் அதிகமான புள்ளிகளை இழந்து கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றது.

ஆனால், அதிவேகமாக அடுத்த நான்கே மாதங்களில் சரிவை ஈடுகட்டிய பங்குச்சந்தையில் சரியான நேரத்தில் முதலீடு செய்த பலருக்கும் பல மடங்கு லாபத்தை எண்ணற்ற பங்குகள் அளித்துள்ளன.

இதையடுத்து, பங்குச்சந்தையில் ஈடுபட இதுதான் சரியான நேரம் என்ற எண்ணத்தில் இந்தியாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் பல லட்சக்கணக்கானோர் புதிதாக டீமேட் கணக்குகளை தொடங்கியுள்ளனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் முறையாக பங்குச்சந்தையில் களமிறங்குபவர்கள் என இந்தியாவின் முன்னணி தனியார் பங்குச்சந்தை சேவை நிறுவனத்தின் தலைவரான நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த நிலையில், உண்மையிலேயே ஒருவர் புதிதாக பங்குச்சந்தையில் ஈடுபடுவதற்கு இதுதான் சரியான நேரமா என்ற கேள்வியை முதலீட்டு ஆலோசகர் சோம வள்ளியப்பனிடம் முன்வைத்தோம், "இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொரு தனிநபரை பொறுத்து அமையும். அதை தெரிந்துகொள்வதற்கு முன்பு, பங்குச்சந்தையில் கடந்த ஐந்து மாதங்களாக நிலவும் ஏற்ற இறக்கத்திற்கான காரணங்களை புரிந்துகொள்வது அவசியம். இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்திய பொருளாதாரமும், ஆட்டோமொபைல் உள்ளிட்ட சில துறைகளும் ஊசலாடி கொண்டிருந்தன. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் அச்சமடைந்த பெரு முதலீட்டாளர்களும், நிறுவனங்களும் ஒரேயடியாக தங்களது முதலீடுகளை திரும்ப பெற்றதால் மற்ற நாடுகளை போன்று இந்தியப் பங்குச்சந்தைகளும் மிகப் வீழ்ச்சியை சந்தித்தன. இதைத்தொடர்ந்து, பொருளாதாரத்திலும் பங்குச்சந்தையிலும் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிகட்ட இந்திய அரசு அறிவித்த தொகுப்புதவி திட்டங்கள் மற்றும் சந்தையின் சரிவை பயன்படுத்தி மீண்டும் முதலீடுகள் குவிய ஆரம்பித்தது உள்ளிட்டவரின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் மீண்டு வந்துள்ளதை போன்று தெரிகிறது, ஆனால் அது நிலைக்குமா என்ற அச்சம் அனைத்து மட்டங்களிலும் நிலவுகிறது" என்று அவர் கூறுகிறார்.

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் அனைத்து தொழில்துறைகளும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி, செயல்பட்டு அந்த தயாரிப்புகள் சந்தைக்கு வந்து விற்பனையானால்தான் இந்திய அரசு அறிவித்த தொகுப்புதவி திட்டத்தின் முழுப் பயன் குறித்து தெரியவரும் என்று கூறும் அவர், கொரோனா பாதிப்பு நாள்தோறும் உச்சத்தை அடைந்துவரும் இந்த நிலையில், பங்குச்சந்தை சரிவிலிருந்து முற்றிலும் மீண்டு வந்துவிட்டதாக கூற முடியாது என்று அவர் கூறுகிறார்.

"இந்திய பங்குச்சந்தைகள் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது அடைந்த சரிவிலிருந்து வெகுவிரைவில் மீண்டு வந்தது நல்ல சமிக்ஞையாக பார்க்கப்படவில்லை. அதாவது, குறுகிய காலக்கட்டத்தில் நடந்த இந்த ஏற்றம் இன்னொரு சரிவுக்கு வழிவகுக்க 60-70 சதவீதம் வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். பங்குச்சந்தையில் நீண்டகாலமாக இருந்து அனுபவம் பெற்றவர்களே தற்போதைய நிலையில் திணறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், புதியவர்கள் உள்ளே நுழையாமல் இருப்பதே நல்லது என்று கருதுகிறேன்" என்று சோம வள்ளியப்பன் மேலும் கூறுகிறார்.

பங்குச்சந்தையில் பாதுகாப்பாக ஈடுபட வேறு வழியே இல்லையா?

கொரோனா பொது முடக்கத்தை பயன்படுத்தி பங்குச்சந்தையில் தின வர்த்தகத்தில் (Day trading) ஈடுபட்டு "ஒரு நாளைக்கு பல ஆயிரங்கள் சம்பாதிக்கலாம்; நீங்கள் இந்த வழியை பின்பற்றினால் 100% லாபம் உறுதி" என்பது போன்ற ஆசை வார்த்தைகளை கூறும் வகையிலான காணொளிகள் சமீபகாலமாக யூடியூபில் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், பங்குச்சந்தையில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று எண்ணம் உடையவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று முதலீட்டு ஆலோசகர் சோம வள்ளியப்பனிடம் கேட்டபோது, "கண்டிப்பாக தின வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. அது பெருத்த நட்டத்தை ஏற்படுத்தக் கூடும். பங்குச்சந்தையின் நிலையற்ற சூழ்நிலையிலும், அதில் முதலீடு செய்வதையே எண்ணமாக கொண்டவர்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் நிலைத்து நிற்கும் பெருமதிப்பு (Large Cap) நிறுவனங்களின் பங்குகளை பகுப்பாய்வு செய்து வாங்கி நீண்டகால முதலீடாக வைத்துக்கொள்ளலாம்" என்று கூறுகிறார்.

மேலும், பங்குச்சந்தையில் டீமாட் கணக்கை துவக்கி உடனடியாக வர்த்தகத்தில் ஈடுபடுவதை விடுத்து, பங்குச்சந்தையின் அடிப்படைகளை கற்றுக்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் யோசனைகளை காகிதத்தில் பதிவிட்டு (Paper trading) லாப - நட்டங்களை கணக்கிட்டு அனுபவம் பெறலாம். இதற்கு உதவ சில மென்பொருட்களும் உள்ளன.

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

பங்குச்சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையால், கடந்த 2019ஆம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தை விட, இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் நான்கு மடங்கிற்கும் அதிகமான முதலீடுகளை மியூச்சுவல் பண்ட்கள் ஈர்த்துள்ளதாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட்களை கருதலாமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மியூச்சுவல் பண்ட்களில் முன்னெப்போதுமில்லாத வகையில் அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களின் முதலீடுகளை மேலாண்மை செய்து வருவதால் அது ஒப்பீட்டளவில் சிறந்த வழிதான். அதேபோன்று, மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி. திட்டங்களை கூட முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம்" என்று அவர் கூறுகிறார்.

வெறும் பணம் மட்டும் போதுமா?

பங்குச்சந்தை ஏற்ற இறக்க அபாயங்களுக்கு உட்பட்டது என்பதால் எவ்வித பகுப்பாய்வையும் செய்யாமல் வெறும் பணத்தை மட்டும் முதலீடு செய்துவிட்டால் லாபம் கிடைத்துவிடும் என்று அமைதியாக இருந்துவிட முடியாது.

நீங்கள் வாங்க நினைக்கும் பங்கின் பின்னணி, அதன் செயல்பாடு, நிதிநிலை முடிவுகள், கடன் அளவு, புதிய முதலீடுகள் - தயாரிப்பு/ சேவை அறிமுகம், அந்த நிறுவனம் குறித்த சமீபத்திய செய்திகள் முதல் கணிப்புகள் வரை அனைத்தையும் ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் நீங்கள் லாபம் சம்பாதிக்க வந்த பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணத்தை இழக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

அதே சமயத்தில், பங்குச்சந்தை என்பது வெறும் பணத்தை மட்டும் முதலீடு செய்து லாபத்தை மட்டுமே பார்க்கும் இடமல்ல என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், பங்குச்சந்தையில் ஈடுபடுவதால் ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்புள்ள உளவியல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த உளவியல் வல்லுநர் கீதன் அனந்தன், "பங்குச்சந்தையில் ஒருவர் புதிதாக ஈடுபடுகிறார் என்றால், அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு அதிருப்தி இருக்கும். அதாவது, வேலைவாய்ப்பை இழந்த ஒருவர் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்காக பங்குச்சந்தையில் ஈடுபட முடிவெடுக்கலாம். ஆனால், வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சனையை சரிவர எதிர்கொள்ளாமல், எவ்வித அனுபவமும் திட்டமும் இல்லாமல் மனமாற்றத்துக்காக பங்குச்சந்தையில் ஈடுபட வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அதன் அடுத்தடுத்த படிகளும் பாதகமாவே அமையும் வாய்ப்புண்டு" என்று எச்சரிக்கிறார் அவர்.

"ஒருவர் பங்குச்சந்தையில் ஈடுபடுவதற்கு முன்னர் தனக்குத்தானே அதற்கான காரணத்தை விளக்கிக்கொள்வது மட்டுமின்றி, அதற்கு தேவையான தகுதியும், திறமையும், ஆர்வமும் தனக்கு உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு, தனக்கு வழிகாட்டியாக ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்வது சிறந்தது. இது ஒருவரது தாயாகவோ அல்லது மனைவியாகவோ கூட இருக்கலாம். ஏனெனில், நிதிசார்ந்த விடயங்களில் ஆண்களைவிட பெண்களே அதிகளவில் சிறந்த முடிவுகளை எடுப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக உங்களது சேமிப்புக்கு மேல் உள்ள பணத்தை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள், எக்காரணத்தை கொண்டும் மற்றவர்களின் பணத்தையோ அல்லது கடன் பெற்றோ பங்குச்சந்தையில் இறங்க வேண்டாம்."

பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் பெருகுவதை காண்பதை மட்டுமே ஒரே எண்ணமாக கொண்டு அதில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணற்ற உளவியல் பிரச்சனைகளும் பிறகு அதன் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த உளவியல் வல்லுநரான கீதன், "வாழ்க்கையில் வெற்றி - தோல்வி என்பது எவ்வளவு இயல்பான ஒன்றோ அதேபோன்றதுதான் பங்குச்சந்தையும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் வெற்றியை மட்டுமே குறிவைத்து இறங்குபவர்கள் அதில் ஏற்படும் தோல்வியிலிருந்து வெளிவருகிறேன் என்ற பெயரில் பெருமளவிலான பணத்தை தொடர்ந்து இழப்பதுடன், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அடிமையாகி விடுவார்கள். எனவே, உண்மையிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்களது எல்லைகளை நிர்ணயித்துவிட்டுதான் அதில் இறங்க வேண்டும். ஒரேயொரு முறை தோல்வி அடைந்துவிட்டாலேயே பங்குச்சந்தையிலிருந்து வெளிவர வேண்டுமென்று அவசியமில்லை, ஆனால் அதிலிருந்து தக்க பாடத்தை கற்றுக்கொள்ள ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் சில நாட்கள் இடைவெளி விடுவது நல்லது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுய கட்டுப்பாட்டு உள்ளவர்களால் இதை திறம்பட கையாள முடியும். கண்மூடித்தனமாக செயல்படுபவர்கள் இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது" என்று அவர் கூறுகிறார்.

உச்சத்தை தொடும் தங்கமும், வெள்ளியும் சிறந்த முதலீடா?

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்புக்கு போட்டியாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் நாள்தோரும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. அதாவது, கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் 10 கிராம் தூய தங்கத்தின் விலை சுமார் 13,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதே சமயத்தில் தங்கத்தை விட அதிகபட்சமாக வெள்ளியின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மார்ச் மாதத்தின் இறுதியில் சுமார் 39,000 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை தற்போது 65,000 ரூபாயை கடந்துள்ளது.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலீட்டு ஆலோசகர் சோம வள்ளியப்பன், "பங்குச்சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஒருதரப்பினர் மியூச்சுவல் பண்ட்களிலும், மற்றொரு தரப்பினர் தங்கம் மற்றும் வெள்ளியிலும் அதிகளவில் முதலீடு செய்து வருவதால் இவற்றின் தேவை அதிகரித்து விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது" என்றார்.

பங்குச்சந்தையை ஒப்பிடும்போது தற்போது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை சிறந்த முதலீடா என்று பரவலாக எழும் கேள்விக்கு பதிலளித்த அவர், "சேமிப்பில் ஒரு பகுதியை தங்கம் மற்றும் வெள்ளியில் இப்போது முதலீடு செய்வதில் தவறில்லை. எனினும், அதிவேகமாக உயர்ந்து வரும் இவற்றின் தேவை வரும் மாதங்களில் குறைந்தால் விலையும் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் அதிகளவிலான முதலீடுகளை தவிர்க்கலாம். அதே சமயத்தில், இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வழங்கும் தங்க சேமிப்பு பத்திர திட்டதில் முதலீடு செய்தும் பலன் பெறலாம்" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: