சந்திரயான் – 2 விண்கலத்தின் ரோவர் குறித்து தகவலை வெளியிட்டுள்ள தமிழக பொறியாளர்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் கலன் சேதமடையாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் -2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 22ஆம் தேதி விண்ணிற்கு செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு 2019 செப்டம்பர் 7ஆம் தேதி நிலைவை நெருங்கிய நிலையில், சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன், நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக தெரிகிறது.
இதையடுத்து தொடர் முயற்சியில் லேண்டர் இருப்பிடத்தை இஸ்ரோ கண்டறிந்தாலும் அதை உறுதி செய்வதில் சிரமங்கள் நீடித்தன. இந்த சூழலில் நிலவை சுற்றி வரும் நாசாவின் எல் ஆர் ஓ விண்கலம் எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் உதவி கொண்டு லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வட மேற்கில் 750 மீட்டர் தூரத்தில் உடைந்த பாகங்கள் தென்படுவதாக தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சன்முக சுப்ரமணியன் நாசாவுக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் லேண்டர் விழுந்த இடம் மற்றும் உடைந்த பாகங்களை ஆய்வின் மூலம் நாசா உறுதி செய்தது.
இந்நிலையில் சந்திரயான் விண்கலத்தின் ரோவர் சேதமடையாமல் இருந்திருக்க கூடும் என்ற புதிய தகவலை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், "நிலவில் லேண்டர் வேகமாக சென்று மோதியதில் அதில் இருந்த ரோவர் வெளியேறி சில மீட்டர் தூரம் தள்ளி விழுந்துள்ளது. வேகமாக மோதியதால் லேண்டரின் சில பாகங்கள் மட்டுமே உடைந்து சிதறியிருக்கும். அதே நேரம் ரோவர் கலன் பாதிப்படையாமல் இருக்க வாய்ப்புள்ளது. கடந்த மே மாதம் நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் கிடைத்தன. இதற்கு முன்பு கண்டறிந்த பாகங்களும் லேண்டரின் ஆய்வு சாதனங்களாகவே இருக்கக்கூடும் இதன் விவரங்களை இஸ்ரோ,நாசா மையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன்," என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டபோது, "பொறியாளர் சண்முக சப்ரமணியன் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றுள்ளது. எங்கள் வல்லுநர் குழு அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்," என தெரிவித்தனர் என விவரிக்கிறது அச்செய்தி.
புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வர் ஆலோசனை - தினத்தந்தி
புதிய கல்விக்கொள்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார் என்கிறது தினத்தந்தி நாளிதழின் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
புதிய கல்விக்கொள்கையில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்களில் கல்வித்துறையை கவனித்துக்கொண்டு இருக்கும் எஸ்.விஜயகுமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசின் நிலைப்பாடு
இன்று காலை 10 மணிக்கு நடக்கும் இந்த உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்து அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.
அதன்பின்னர், எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்விக்கொள்கையில் அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு - தினகரன் நாளிதழ்

பட மூலாதாரம், Getty Images
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பிறகு, பாலிவுட்டில் நெபோட்டிசம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெறுகிறது. நடிகை கங்கனா ரணாவத்தும் பாலிவுட் நடிகர்கள் குறித்து தொடர்ந்து பல கருத்துகளை முன்வைத்து வந்தார். இதனை தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் மகன் ஆதித்யா தாக்ரேவை பேபி பென்குயின் என குறிப்பிட்டு கங்கனா ரணாவத் டிவிட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக முதல்வர் மகன் பேச வேண்டும், மௌனம் கலைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது கங்கனா மணாலியில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். அங்கு துப்பாக்கி சூடு நடந்ததாக கூறுகிறார்.இது குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "இரவு 11.30 மணிக்கு எனது அறையில் நான் இருந்தபோது அருகில் இரண்டு முறை துப்பாக்கி சத்தம் கேட்டது. 8 வினாடி இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்தன. வீட்டு காம்பவுண்ட் சுவருக்கு பின்னால் இருந்து யாரோ சுட்டுள்ளனர். எனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம். சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மகன் குறித்து நான் கருத்து தெரிவித்ததற்காக இந்த மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் மும்பையில் இருந்து மணாலிக்கு வந்துள்ளதால் இந்த வீட்டை குறிவைத்து சுட்டுள்ளனர். இதற்கு நானே சாட்சி. உள்ளூரில் யாருக்காவது பணம் கொடுத்து இப்படி மிரட்டி இருக்கலாம். சுஷாந்த் சிங்கையும் இப்படித்தான் பயமுறுத்தி இருக்க வேண்டும். நான் பின்வாங்காமல் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன்" என்றார்.
இதையடுத்து கங்கனா வீட்டில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநருக்கு கொரோனா; குணமடைந்தார் அமிதாப் பச்சன்
- நாசா & ஸ்பேஸ் எக்ஸ்: பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்
- எகிப்திலுள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகளா? - எலான் மஸ்க்கால் எழுந்த சர்ச்சை
- டிக் டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் திட்டத்தை நிறுத்திய மைக்ரோசாப்ட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












