இந்திய விடுதலை நாள்: இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை வரலாறு கொடூரமாகப் பார்ப்பது ஏன்?

தேசப் பிரிவினைக்கு சில நாட்களுக்குப் பின், 1947இல் டெல்லியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் எடுக்கப்பட்ட படம்.

பட மூலாதாரம், Photo12/Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, தேசப் பிரிவினைக்கு சில நாட்களுக்குப் பின், 1947இல் டெல்லியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் எடுக்கப்பட்ட படம்.

இந்தியா பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை அடைந்து 74 ஆண்டுகள் முடிந்து இன்று 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்திய விடுதலை நாளான இன்று இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை குறித்த சில முக்கியக் கேள்விகளுக்கு விடைகள் இங்கே.

1.இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது எப்படி? சுருக்கமான வரலாறு என்ன?

பாகிஸ்தான் உருவாவதற்கான முதல் கோரிக்கை 1940ஆம் ஆண்டு மார்ச் 23இல் முன்வைக்கப்பட்டது. அன்றைய தினம்தான் லாகூரில் முஸ்லிம் லீக், 'பாகிஸ்தான் தீர்மானம்' என்பதை முன்மொழிந்தது. இதன்படி, முழுமையான, சுதந்திரமான, தனி நாடு முஸ்லிம்களுக்கு தேவை என்று வெளிப்படையாகக் கோரப்பட்டது. 1906இல், பிரிக்கப்படாத 'இந்திய முஸ்லிம்களின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக' முஸ்லிம் லீக் உருவானது.

பிரிட்டன் வைஸ்ராய் லின்லித்கோ 1940இல், 'ஆகஸ்ட் பிரகடனம்' (மாண்டேகு பிரகடனம் என்றும் இது அறியப்படுகிறது.) என்ற திட்டத்தை முன்வைத்தார். அதில், வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய போர் பிரதிநிதி ஆலோசனைக் குழுவிற்கு இந்திய பிரதிநிதிகளை நியமிப்பது உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய இரு அமைப்புகளும் 'ஆகஸ்ட் பிரேரணையை' ஒட்டு மொத்தமாக நிராகரித்தன.

1944ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகாத்மா காந்தியும், ஜின்னாவும் பாகிஸ்தான் கோரிக்கை பற்றி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இருவரிடையேயும் இதுதொடர்பாக ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவின. பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி.

1946இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த பிரிட்டனால் அனுப்பப்பட்ட அமைச்சரவை தூதுக்குழு பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய முஸ்லிம் லீக், போராட்டங்களை தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கலகங்கள் ஏற்பட்டன.

கலகங்கள் வன்முறையாக உருவெடுத்து 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16இல் இருந்து 18க்கு இடைப்பட்ட காலத்திற்குள் கலவரப் படுகொலைகளாக மாறின.

'கல்கத்தா பெருங்கொலைகள்' (Great Calcutta Killings) என்று சரித்திரத்தில் பதிந்துவிட்டன. இதில் கிட்டத்தட்ட நான்காயிரம் மக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த கலவரங்கள் கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்தில் இருந்து பிஹார் வரை பரவியது.

1947 ஜனவரி 29இல் முஸ்லிம் லீக் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையை புறக்கணிப்பதாக அறிவித்தது, பிப்ரவரி மாதத்தில் பஞ்சாபிலும் வகுப்புவாத வன்முறைகள் தொடங்கின.

1948 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறுவதாக பிரிட்டன் பிரதமர் க்ளேமெண்ட் எட்லி அறிவித்தார். லார்ட் மவுண்ட்பேட்டன், வைஸ்ராயாக பதவியில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்தியாவின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியுடன் பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியுடன் பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா.

மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று லார்ட் மவுண்ட்பேட்டன் வைஸ்ராயாகவும், இந்திய கவர்னர் ஜெனரலாகவும் பதவியேற்றார்.

ஜூன் இரண்டாம் தேதியன்று, பிரிவினை திட்டத்தை மவுண்ட்பேட்டன், இந்தியத் தலைவர்களிடம் முன்வைத்தார். அடுத்த நாள், நேரு, ஜின்னா மற்றும் சீக்கிய சமுதாய பிரதிநிதி பல்தேவ் சிங் ஆகியோர் ஆல் இந்திய ரேடியோவில் பிரிவினைத் திட்டம் பற்றி நாட்டு மக்களிடம் எடுத்துரைத்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் என்ற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது. இந்தியாவின் இரு புறமும் இருந்த கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் இடையே மீண்டும் பிரிவினை நடந்தது.

இந்தியாவின் உதவியுடன் 1971இல் நடந்த வங்கதேச விடுதலைப் போரின் பின் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என்ற தனி நாடானது.

2.இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது என்ன நடந்தது?

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நவீன காலத்தின் மிகப்பெரிய அழிவுகளில் ஒன்று; போர், பஞ்சம் அல்லாத காலங்களில் நடைபெற்ற உலகிலேயே பெரிய மக்கள் இடப்பெயர்வு இதுதான்.

பிரிட்டிஷ் இந்தியாவின் விடுதலையின்போது, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பிலும் ஏறக்குறைய 1.25 கோடி மக்கள் அகதிகள் ஆனார்கள். இந்த மக்கள், நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இரு தரப்பிலும் ஐந்து முதல் பத்து லட்சம் பேர் வரை கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டனர்.

குறிப்பாக பஞ்சாபில், பல தலைமுறைகளாக சேர்ந்து வாழ்ந்துவந்த, ஒரே மொழியைப் பேசிய இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியோரிடையே பிளவு ஏற்பட்டது. முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் சீக்கியர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர்ந்தனர்.

பிரிவினை, ஒரு புதிய நாட்டை மட்டும் உருவாக்கவில்லை, வன்முறை எழுப்பிய கொடூர நினைவுகள், கோபத்தையும் கையறுநிலையையும் ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையில் எழுப்பப்பட்ட எல்லைக்கோடு, மக்களிடையே ஆறாத் துயரத்தின் நினைவலைகளை எழுப்பும் ஓர் அதிர்வலையாகவே இருக்கிறது.

7 ஆகஸ்டு 1947 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் செல்லும் ரயிலில் ஏறும் இஸ்லாமியப் பெண்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்டு 7, 1947 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் செல்லும் ரயிலில் ஏறும் இஸ்லாமியப் பெண்கள்.

போர்க்களத்தையும், மோதும் ராணுவங்களையும் கொண்டிருந்த உள்நாட்டுப் போரல்ல இது என்றாலும், நடைபெற்ற வன்முறைகள் தற்செயலானவையல்ல. பல்வேறு தரப்பின் ஆயுதக் குழுக்களும், கும்பல்களும் எதிர்தரப்புக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டன. சக மனிதர்களை, விரோதிகளாக்கியது பிரிவினை.

காயங்கள் புரையோடி வடுக்களாகின; ஆனால் யாரும் பொறுப்பாக்கப்படவில்லை, எந்தவித சமாதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நடந்த சம்பவங்கள் பற்றிய விவரங்களும், பதிவுகளும் மெளனத்தில் புதைந்து, சொல்லப்படாத கதைகளாக அமிழ்ந்துபோயின.

நடந்த பயங்கரங்களைப் பதிவு செய்யும் முயற்சிகளில் இலக்கியமும் சினிமாவும் வழிகண்டன. பிரிவினையின் அரசியல் குறித்தே வரலாற்று ஆசிரியர்களின் கவனம் குவிந்தது. இந்த மாபெரும் பிளவின் அனுபவங்கள், மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கங்களை நோக்கி அவர்களின் கவனம் திரும்ப நீண்டகாலம் பிடித்தது.

சம்பவங்களின் நேரடி சாட்சிகள் பெரும்பாலோர் இறந்துவிட்ட நிலையில் வாய்மொழி வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சிகள், கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியிருக்கிறது. இறந்தவர்களுக்கு பெரியளவிலான நினைவுச் சின்னங்களும் இல்லை. பிரிவினைக்கான நினைவுச் சின்னம் ஒன்று இந்தியப் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் 2016-ல் அமைக்கப்பட்டது.

3. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை உண்டானது ஏன்?

பிரிவினை, இந்தியா பாகிஸ்தானிடையே நச்சைக் கலந்தது; தெற்காசிய புவிஅரசியல் ஒட்டுமொத்தமாக சிதைந்து போனது.

பிரிவினையின்போது, இரண்டு பகுதிகளாக இருந்த பாகிஸ்தான், 1971இல் கிழக்குப் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று வங்கதேசம் என்ற புது நாடாக உருவானதும் எல்லைகள் சுருங்கிப்போயின.

ஹரி சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹரி சிங்

1947இல் சுதந்திரத்தின்போது, பிரிவினையால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இந்தியா பாகிஸ்தான் என பிரிந்த நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மீண்டும் இரண்டானது.

சுதந்திரத்திற்கான ஏற்பாட்டின்போது, இமய மலைப்பகுதியில் இருந்த காஷ்மீரின் அரசர் ஹரி சிங் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்தார்.

இந்து அரசர் இந்தியாவுடன் இணைய முடிவை எடுக்க, அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாக இருந்ததால், சுதந்திரமடைந்த சில மாதங்களில் காஷ்மீர் மீதான உரிமை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை எழுந்தது.

சிக்கலான மோதல்கள் தீர்க்கப்படாத நிலையில், காஷ்மீர் பிரச்னையே இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளிடையே பிணக்குக்கு பிரதான காரணமானது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இதர பிரச்னைகள் பின்தங்கிப்போயின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :