கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்

கோவை காலில் விழுந்த சம்பவம்.

பட மூலாதாரம், SCREEN SHOT

படக்குறிப்பு, கோவை காலில் விழுந்த சம்பவம்.
    • எழுதியவர், மு.ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊழியரை வேறு சாதியைச் சேர்ந்தவர் காலில் விழ வைத்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய காணொளி வெளியாகியுள்ளது.

அதில், குற்றம்சாட்டப்பட்ட கோபால்சாமியை, தலித் சமூகத்தை சேர்ந்த கிராம உதவியாளர் முத்துசாமி கடுமையாக தாக்குவதோடு, தகாத வார்த்தைகளில் திட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் கிராம ஊராட்சியில், கிராம நிர்வாக அவலுவலகத்தில் பணிபுரியும் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு ஊழியரை வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் இழிவுபடுத்தி காலில் விழவைத்ததாக கடந்த 7ம் தேதி புகார் எழுந்தது. அத்துடன் அந்த சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியானதால் இந்த விவகாரம் பரவலான கவனத்தை ஈர்த்தது.

இது குறித்து விசாரித்தபோது, ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த கோபால்சாமி (கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்), தன்னுடைய சொத்து விவரங்களுக்கான சரிபார்ப்புக்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்விக்கும் கோபால்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது குறுக்கிட்ட உதவியாளர் முத்துசாமி, 'அரசு அலுவலரிடம் தவறாக பேச வேண்டாம்' என்று கூறியதாகவும், அதனால் மேலும் ஆத்திரமடைந்த கோபால்சாமி, அவரை சாதியைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டியதாகவும் கூறப்பட்டது. மேலும், கோபால்சாமியின் காலில் முத்துசாமி விழுந்து மன்னிப்பு கேட்கும் காணொளி வெளியானதால், இந்த விவகாரத்தில் முத்துசாமிக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், இரு தரப்பினரையும் விசாரித்து, காணொளியின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், அரசு ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்த பிரிவுகளில் கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இச்சம்பவம் குறித்து விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர். அப்போது அவர்கள் தரப்பில் மற்றொரு காணொளி வழங்கப்பட்டது.

அந்த காணொளியில் குற்றம்சாட்டப்பட்ட கோபால்சாமியை, அரசு ஊழியர் முத்துசாமி கடுமையாக தாக்குவதோடு, தகாத வார்த்தைகளை கொண்டு திட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மேலும், சாதி குறித்து கோபால்சாமி பேசியதாகவும் முத்துசாமி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அதை கோபால்சாமி மறுக்கும் காட்சிகளும் இருந்தன.

இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் அளித்துள்ள புகார் மனுவில், 'எங்கள் விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமி, அவருக்கு சொந்தமான விவசாய விளைநிலத்தை முறைகேடாக வேறு ஒருவருக்கு பட்டா மற்றும் கணினி சிட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுத்தது பற்றி கடந்த மூன்று மாதங்களாக கிராம நிர்வாக அலுவலரிடம் அணுகியும் அவர் அதை சரி செய்து கொடுக்கவில்லை.

போராட்டம்.
படக்குறிப்பு, தலித் அரசு ஊழியருக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பல கட்சி - அமைப்பினர்.

இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலரிடம், 'முப்பது ஆண்டுகளாக இருந்த எங்களுடைய சொத்தை பணம் வாங்கிக்கொண்டு வேறு நபர்களுக்கு மாற்றிக் கொடுத்து விட்டாயே' எனக்கூறி முறையிட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கிராம உதவியாளர் முத்துசாமி விவசாயி கோபால்சாமியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபின் கொலைவெறியுடன் தாக்கியதை கிராம நிர்வாக அலுவலர் தடுத்தார்.

இதனால் என்ன செய்வதென்று உணராமல் தரையில் கீழே சரிந்த கோபால்சாமியை அருகிலிருந்த பெஞ்சில் அமர வைத்து, குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள். தாக்குதல் நடத்தப்பட்டபோது, முத்துசாமிதான் கோபால்சாமியை தாக்கி உள்ளார். தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார் என்பதை காணொளியில் அறியலாம்.

ஆனால், கோபால்சாமியை தாக்கிய பிறகு, தனது சாதி பெயரை முத்துசாமியே குறிப்பிட்டு தன்னை கேவலப்படுத்திக் கொண்டுள்ளார். தன் மீது அவர் சுமத்திய பழியை அப்போதே கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கோபால்சாமி மறுத்துள்ளார். இவை அனைத்தும் காணொளியில் பதிவாகியுள்ளன.

எனவே ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் முத்துசாமி கொடுத்த பொய் புகார்களை ரத்து செய்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாய சங்கத்தினர் புகார் மனுவில் கோரியுள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோபால்சாமி அளித்த புகாரின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் ஆகிய இருவரும் கடந்த புதன்கிழமை அன்று ஒட்டர்பாளையம் அலுவலகத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :