கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா ஆதிக்க சாதிக்காரர்? விசாரணைக்கு ஆணையிட்ட ஆட்சியர்

தலித் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா ஆதிக்க சாதிக்காரர்? விசாரணைக்கு ஆணை

பட மூலாதாரம், screenshot

    • எழுதியவர், மு.ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அவலுவலகத்தில் பணிபுரியும் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்த ஊழியரை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் இழிவுபடுத்தி காலில் விழவைத்ததாக புகார் எழுந்துள்ளது. அது தொடர்பான ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கோபால்சாமி (கவுண்டர் சாதியை சேர்ந்தவர்) என்பவர் தன்னுடைய சொத்து விவரங்கள் சரிபார்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, கோபால்சாமியின் ஆவணங்கள் சரியான முறையில் இல்லை எனவும், சரியான ஆவணங்களை கொண்டு வரும்படியும் கூறியுள்ளார்.

இதனால், கோபமடைந்த கோபால்சாமி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியிடம், தனக்கும் சட்டம் தெரியும் என கூறி தகாத வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, குறுக்கிட்ட கிராம உதவியாளர் முத்துசாமி கிராம நிர்வாக அலுவலரிடம் தவறாகப் பேசவேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த கோபால்சாமி, அவரை சாதியைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளை பேசியதோடு, "நான் நினைத்தால் இந்த ஊரில் நீ குடியிருக்க முடியாது. அரசு பணியில் இருக்க முடியாது. எனவே, தொடர்ந்து நீ அரசு பணியில் இருக்க வேண்டுமென்றால் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இந்த ஊரிலும், அரசு வேலையிலும் இனிமேல் நீ நீடிக்க முடியாது. எனது சாதி செல்வாக்கை பயன்படுத்தி இந்த ஊரில் இருந்தும், வேலையில் இருந்தும் உன்னை வெளியேற்றிவிடுவேன்," என்று மிரட்டியதாக காணொளியுடன் வெளியான சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முத்துசாமி கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பதிவு என்று கூறப்படும் காணொளிதான் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

போராட்டம்.

இச்சம்பவம் தொடர்பாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக ஆய்வு செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் உரிய பிரிவுகளில் வழக்கு செய்து கோபால்சாமியைக் கைது செய்ய உத்திரவுட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் , இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளதாகவும் விசாரணையின் அடிப்படையில் குற்றம்சாட்டப்படுகிறவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி, குற்றம்சாட்டப்படும் கோபால்சாமி ஆகியோரை தொடர்புகொண்டு நடந்த விவரம் குறித்து அறிவதற்கு பிபிசி தமிழ் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. கலைச்செல்வியோ, முத்துசாமியோ இதுவரை போலீசில் புகார் ஏதும் செய்யவில்லை.

ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் சாதிக் கொடுமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.
படக்குறிப்பு, ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் சாதிக் கொடுமைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் சமாதானம் பேசுவதா?

இச்சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை கு.ராமகிருஷ்ணன், சாதியை குறிப்பிட்டு தகாத வார்த்தைகள் பேசியவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, காவல்துறையினர் சமரசம் செய்து வைத்ததாக குற்றம் சாட்டுகிறார்.

'அன்னூர் பகுதியில் உள்ள எங்களது இயக்க தோழர்கள் மூலம் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து எங்களுக்கு தெரியவந்தது.உரிய ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கோபால்சாமி என்பவரிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரிடம் கோபால்சாமி மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துசாமி இதனை கண்டித்துள்ளார்.அதற்காக கோபால்சாமி, முத்துசாமியை சாதி ரீதியாக திட்டியதோடு மிரட்டியுள்ளார். மேலும் அவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்தியுள்ளார்.இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு பயந்து முத்துசாமி காலில் விழுந்து கதறியுள்ளார்.

கோவை கு.ராமகிருட்டிணன்
படக்குறிப்பு, கோவை கு.ராமகிருட்டிணன்

இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தெரியவந்ததும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் கோவையில் நடைபெறாமல் இருக்க, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாதி ரீதியாக மிரட்டியவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என கு. இராமகிருஷ்ணன் கோரிக்கை வைக்கிறார்.

அன்னூர் பகுதியில் போராட்டம்

இச்சம்பவத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் அன்னூர் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :