பல கோடி ரூபாய் மோசடி செய்து சிக்கிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ் யார்? அரசியல் பின்னணி என்ன?

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களை தனிப்படை போலீசார் வியாழக்கிழமை கைதுசெய்தனர். இந்த ஹெலிகாப்டர் பிரதர்சின் பின்னணி என்ன?

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்ற எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன் ஆகிய இருவரையும் போலீஸ் தனிப்படை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமாராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் பண்ணை வீடு ஒன்றில் வைத்து கைதுசெய்தது.

ஹெலிகாப்டர் சகோதரர்கள்: பின்னணி என்ன?

கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன் சகோதர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக அருகில் உள்ள கிராமத்தில் சுமார் 100 பசு மாடுகளை வாங்கி கிரீஷ் பால் பண்ணை என்ற பெயரில் பால் பண்ணை ஒன்றைத் துவங்கி நடத்திவந்தார்கள்.

இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, "விக்டரி பைனான்ஸ்" என்ற பெயரில் வங்கியல்லாத நிதி நிறுவனம் ஒன்றைத் துவங்கினர். இந்த நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த அடிப்படையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முகவர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த விளம்பரங்களை நம்பி, பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் பணத்தை விக்ட்ரி ஃபைனான்சில் முதலீடு செய்தனர். துவக்கத்தில் சிலருக்கு மட்டும் பணத்தைக் கொடுத்த இவர்கள், ஒரு கட்டத்தில் இழுத்தடிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில்தான் இந்த விக்ட்ரி ஃபைனான்சில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்த பைரோஜ் பானு - ஜபருல்லா தம்பதி தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்யை அணுகி புகார் ஒன்றை அளித்தனர். அதில், இந்த நிறுவனத்தின் தின வருவாய்த் திட்டத்தில் சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும் தற்போது பணத்தைக் கேட்டால் திருப்பித் தர மறுப்பதாகவும் அரசியல் கட்சியில் செல்வாக்கு இருப்பதால் தங்களை ஏதும் செய்ய முடியாது என்று கூறியதாகவும் அவர்களது புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கும்பகோணத்தில் இந்த சகோதரர்களிடம் ஏமாந்தவர்கள் ஒன்றாகத் திரண்டு, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போஸ்டர்களை ஒட்டினார். இவர்களது பால் பண்ணையில் பணியாற்றியவர்கள் உட்பட பலரும் இவர்கள் மீது புகார்களைக் கொடுத்தனர்.

புகார் அளித்துள்ள பைரோஜ் பானு - ஜபருல்லா தம்பதி
படக்குறிப்பு, புகார் அளித்துள்ள பைரோஜ் பானு - ஜபருல்லா தம்பதி

இதையடுத்து இந்த சகோதரர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. வழக்கை மாவட்ட குற்றப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்தது. விக்ட்ரி ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அங்கிருந்த ஸ்ரீகாந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். சகோதரர்கள் இருவரும் தலைமறைவானார்கள்.

10-க்கு மேற்பட்ட கார்கள் பறிமுதல்

அவர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் எம்.ஆர். கணேஷின் மனைவி அகிலா உள்பட சிலரைக் கைதுசெய்தனர். சகோதரர்களின் செல்போன்களை வைத்து சென்னை, புதுச்சேரி, வடலூர் உள்ளிட்ட ஊர்களில் காவல்துறை தேடுதல் வேட்டையை நடத்தியது.

இந்த வேட்டையில் சகோதரர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமாராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இங்கு சென்ற தனிப்படைக் காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்த கார், செல்போன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூரில் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய பிறகு சகோதரர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்ற பெயர் ஏன்?

இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான பால் பண்ணைக்கு அருகிலேயே ஹெலிபேட் ஒன்றை அமைத்து, அவ்வப்போது ஹெலிகாப்டரில் பயணங்களை மேற்கொண்டுவந்ததால் இவர்களுக்கு ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்ற பெயர் ஏற்பட்டது. இவர்களுக்கென தனியாக செக்யூரிட்டிகளையும் வைத்திருந்தனர்.

2019ஆம் ஆண்டில் ஐம்பது லட்ச ரூபாய் முதலீட்டில் "அர்ஜுன் ஏவியேஷன் பிரைவேட் லிமிட்டெட்" என்ற பெயரில் விமான நிறுவனம் ஒன்றையும் எம்.ஆர். கணேஷ் பதிவுசெய்திருந்தார்.

பாஜக பொறுப்பு

மேலும் இந்த எம்.ஆர்.கணேஷ், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் வர்த்தகப்பிரிவு தலைவராக பொறுப்பு வகித்துவந்தார். இந்த சகோதரர்கள் மீது, பல ஆண்டுகளாகவே அவ்வப்போது புகார்கள் எழுவதும், பிறகு மறைவதுமாக இருந்த நிலையில், ஒரே நபரிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில், அவர்களைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :