பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை

பட மூலாதாரம், Vipin Kumar/Hindustan Times via Getty Images)
- எழுதியவர், பிரதீப் குமார்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
சில தினங்களுக்கு முன்பு தான் ரவிகுமார் தஹியா இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுக் கொடுத்தார். அதோடு சேர்த்து மல்யுத்தத்தில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இது.
பஜ்ரங் புனியா வென்ற பதக்கத்தையும் சேர்த்து இந்தியா மொத்தம் இரண்டு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
யார் இந்த பஜ்ரங் புனியா?
பஜ்ரங் புனியா கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக சர்வதேச அளவில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவரும் இந்தியாவின் மல்யுத்த வீரர்.
டோக்யோவில் அவர் பதக்கத்திற்கான வலுவான போட்டியாளராக கருதப்படுவதற்கான காரணம் இதுதான். ரவி தஹியா பதக்கம் வென்ற பிறகு, வெற்றியின் அழுத்தம் இவர் மீதும் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அழுத்தத்தின் கீழும் சிறப்பாக விளையாடும் மல்யுத்த வீரராக அவர் இருக்கிறார். அவர் அதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதிசெய்த நிலையில், குழந்தைப் பருவத்தில் அடித்தளம் அமைக்கப்பட்ட தனது கனவை பஜ்ரங் புனியா நிறைவேற்றியுள்ளார்.
எபிக் சேனலின் ஒரு நிகழ்ச்சியான 'உமீத் இந்தியாவில்', மல்யுத்தத்தில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்று வீரேந்திர சேவாக், பஜ்ரங் புனியாவிடம் கேட்கிறார். அதற்கு பஜ்ரங் "ஹரியானாவின் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் கோவணங்களைப்பார்பீர்கள். ஒருவர் அதை மட்டுமே அணிந்து அரங்கிற்குச்சென்று வெற்றி பெற்றால், ஏதாவது கண்டிப்பாக கிடைக்கும். எனவே இது இப்படித்தான் தொடங்கியது . ஆனால் உண்மையைச்சொன்னால், நான் பள்ளியிலிருந்து தப்பிக்க மல்யுத்த களத்திற்கு போக ஆரம்பித்தேன்." என்றார்.
ஹரியானாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தின் குடான் கிராமத்தில் உள்ள மண் மல்யுத்த களங்களுக்கு, புனியா ஏழு வயதில் செல்லத் தொடங்கினார். அவரது தந்தையும் மல்யுத்தம் செய்வார், அதனால் குடும்ப உறுப்பினர்கள் அவரது விருப்பத்திற்கு தடைபோடவில்லை.
புனியா தனது 12 வது வயதில், மல்யுத்த வீரர் சத்பாலிடம் மல்யுத்த தந்திரங்களைக் கற்றுக்கொள்வதற்காக டெல்லியில் உள்ள சத்ரசால் மைதானத்தை அடைந்தார்.
யோகேஷ்வர் தத்தை புனியா சந்தித்தபோது மல்யுத்த விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பு அதிகரித்தது. இந்த சந்திப்பைப் பற்றி யோகேஷ்வர் தத் எபிக் சேனலின் 'உமீத் இந்தியா' நிகழ்ச்சியில் பேசுகையில், "2008 ஆம் ஆண்டில், குடான் கிராமத்தைச் சேர்ந்த எனது நண்பர் என்னிடம் அறிமுகப்படுத்த புனியாவை அழைத்து வந்தார். அப்போதிலிருந்து அவரிடம் மன உறுதி இருந்தது. அவர் எங்களைக்காட்டிலும் 12-13 வயது இளையவர் . ஆனால் அவர் எங்கள் அளவிற்கு கடினமாக உழைத்தார்."என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Vipin Kumar/Hindustan Times via Getty Images
பஜ்ரங் புனியா யோகேஷ்வர் தத்தை தனது முன்னோடி, வழிகாட்டி மற்றும் நண்பராக ஆக்கிக்கொண்டார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத்தின் வெற்றியானது, தன்னாலும் ஒலிம்பிக் பதக்கம் செல்லமுடியும் என்ற உணர்வை புனியாவிடம் ஏற்படுத்தியது.
மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் ராஜேஷ் ராய் கூறுகையில், "நான் சோனிபத்தில் முதல் முறையாக பஜ்ரங்கை சந்தித்தேன். யோகேஷ்வர் தத்துடன் அவர் இருந்தார். அவர் மீது யோகேஸ்வரின் தாக்கம் பெரிய அளவிற்கு இருந்தது," என்றார்.
இதன் விளைவு என்னவென்றால், 2014 இல், பஜ்ரங் புனியா யோகேஷ்வர் அகாடமியில் சேர்ந்தார், அப்போதிலிருந்து அவருக்கு இறங்குமுகமே இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் வெற்றி பெற்ற போட்டிகளின் எண்ணிக்கைக்கு சமமாக மற்றொரு உதாரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.
புனியா 2017 மற்றும் 2019 ஆசிய சாம்பியன்ஷிப், 2018 ஆசிய விளையாட்டு மற்றும் 2018 காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அதே ஆண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவரால் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை, வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது. ஒலிம்பிக்கிற்கு முன், புனியா சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் ஆறு தங்கம், ஏழு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த வெற்றிகள் அனைத்திலும், யோகேஷ்வர் தத்தின் வழிகாட்டுதல் அவருக்கு உதவியது.
"ஒரு சிறந்த வீரரின் வழிகாட்டுதலால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த எடுத்துக்காட்டுடன் புரிந்து கொள்ள முடியும். 2018 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு பஜ்ரங் ஒரு போட்டியாளராக இருந்தார். ஆனால் அவருக்கு அது கிடைக்கவில்லை."என்று மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் ராஜேஷ் ராய் விளக்குகிறார்.
"அவர் அந்த நேரத்தில் பெங்களூரில் பயிற்சியில் இருந்தார். சோகமாக இருந்தார். கன்னாட் பிளேஸில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அவர், தனக்கு விருது வழங்கப்படாததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்தார்."

பட மூலாதாரம், Getty Images
இது மிகவும் அவசரமாக நடந்தது என்றும் , யோகேஸ்வர் தத் அதை பிறகுதான் அறிந்தார் என்றும் ராஜேஷ் ராய் கூறினார். "பஜ்ரங்கிற்கு அவர் விளக்கினார். நீ உன் விளையாட்டில் கவனம் செலுத்து. நீ தொடர்ந்து விளையாடினால் கண்டிப்பாக உனக்கு ஒரு நாள் கேல் ரத்னா விருது கிடைக்கும். நீதிமன்றம் செல்வதால் எந்தப்பயனும் இருக்காது என்றார்."
இந்த அறிவுரையின் விளைவாக பஜ்ரங்கிற்கு 2019 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைத்தது. கூடவே அவரது பெயர் மல்யுத்த உலகில் தொடர்ந்து பிரகாசித்தது. அவரது செயல்திறன் பற்றிய ஒரு அறிக்கை தலைப்புச் செய்தியாகி வருகிறது. அவர் நகைச்சுவையாக கூறுகிறார், "இந்த இரண்டரை கிலோகிராம் கை ஒருவரின் மீது விழும்போது, தங்கப் பதக்கம் வரும்."
இதைக் கேட்ட பிறகு, பஜ்ரங் புனியாவின் மீது சினிமாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற முதல் உணர்வு எழுகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பஜ்ரங் புனியா ஒருமுறைகூட சினிமா தியேட்டருக்கு சென்றதில்லை. இந்த காலகட்டத்தில் ஏழு வருட காலத்திற்கு ஒரு மொபைல் போனை கூட அவர் வைத்திருக்கவில்லை என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
செய்தி முகமை பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில், "2010 முதல், நான் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கியபோது, யோகி அண்ணன் (யோகேஷ்வர் தத்) என்னிடம் சொன்னார், 'இவை அனைத்தும் உன் கவனத்தை திசை திருப்பும்' என்று. இன்று என்னிடம் மொபைல் போன் உள்ளது .ஆனால் நான் அதை அவருடைய முன்னிலையில் பயன்படுத்துவதில்லை. அவர் என்னுடன் பத்து மணி நேரம் இருந்தால், எனது தொலைபேசி 10 மணி நேரம் அணைந்தே இருக்கும்." என்று கூறினார்.

பட மூலாதாரம், Vipin Kumar/Hindustan Times via Getty Images
உலகின் 30 நாடுகளுக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற பஜ்ரங் புனியா, எந்த நாட்டின் சுற்றுலா இடத்தையும் பார்க்கவில்லை. இது யோகேஷ்வர் தத்தின் அறிவுரையின் விளைவுதான். அவரது அணியின் மற்ற வீரர்கள் சுற்றிப்பார்க்க வெளியே சென்றாலும், பஜ்ரங் அந்த குழுவில் இருக்கமாட்டார். ஏனென்றால் அவரது முழு கவனமும் மல்யுத்தம் மற்றும் பயிற்சியில் மட்டுமே உள்ளது.
பஜ்ரங் புனியா அவ்வப்போது ட்வீட் செய்வார் என்பது உண்மைதான். ஆனால் டோக்யோ ஒலிம்பிக்கிற்கு பயிற்சியில் ஈடுபட்டதிலிருந்து, 2018 க்குப் பிறகு அவர் ஒரு ட்வீட் கூட செய்யவில்லை. அவரது ட்வீட்கள் அவரது எளிமையான குணத்தை வெளிப்படுத்துகிறது.
ட்வீட் ஒன்றில் அவர், "மோசமான நேரம் என்பது மிகப்பெரிய மந்திரவாதி. ஒரே நொடியில் நம்மை சுற்றி இருப்பவர்களின் முகங்களிலிருந்து திரையை நீக்கிவிடுகிறது." என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது மற்றொரு ட்வீட்டில், தன்னம்பிக்கைக்கும் ஆணவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தத்துவ வழியில் விளக்கியுள்ளார். "நான் சிறந்தவன், இது தன்னம்பிக்கை ... ஆனால், 'நான் தான் சிறந்தவன் 'என்பது ஆணவம்."
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பஜ்ரங் புனியாவுக்கு கிடைத்தார் ஷாகோ
டோக்யோ ஒலிம்பிக்கில் பஜ்ரங் புனியாவின் பதக்கவாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதற்கான மற்றொரு காரணம், அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் ஷாகோ பென்டினிடிஸ். கடந்த சில ஆண்டுகளாக புனியாவின் நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.
ஜார்ஜியாவின் பயிற்சியாளர் ஷாகோ பென்டினிடிஸ் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் விளையாட்டு வலைத்தளமான olympics.com இல் புனியா மற்றும் பெனடிடியஸை அறிமுகப்படுத்தும் கட்டுரையின் படி, இவர் புனியாவுடன் தந்தை-மகன் உறவை வளர்த்துக் கொண்டார்.
பென்டினிடிஸ் புனியாவின் உடல் தகுதி மற்றும் அவரது உளவியல் தகுதி குறித்து நிறைய வேலைகளைச் செய்துள்ளார். கடந்த ஆண்டு, புனியாவும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். ஆனால் டோக்யோவில் அவரது மறுபிரவேசம் வெற்றிகரமாக அமைந்தது.
அவரது பயிற்சியின் ஒரு அம்சம் மிகவும் சுவாரஸ்யமானது. பஜ்ரங் புனியா விலகி இருப்பது நல்லது என்று நினைத்த போன், கடந்த ஓராண்டில் அவருக்கு நிறைய உதவிகளை செய்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பெனடிட்ஸ் , ஜார்ஜியாவில் சிக்கிக்கொண்டபோது, அதே போனில் தொலைபேசி அழைப்புகள் மூலம் புனியாவுக்கு பயிற்சி அளித்தார்.
பஜ்ரங் தனது ' உடல் வலிமை'க்கு பெயர் பெற்றவர். இதன் காரணமாக, அவர் ஆக்ரோஷமான முறையில் விளையாடி ஆறு நிமிடங்களில் எதிராளியை வீழ்த்தமுடியும்.
ஆனால் அவரது விளையாட்டின் ஒரு பக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. அதுதான் அவரது கால் தற்காப்பு. இதன் காரணமாக, எதிரணி மல்யுத்த வீரர்கள் கால்களைத் தாக்கி புள்ளிகள் பெறுகிறார்கள்.
முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் ஷாகோ, புனியாவின் பலம் மற்றும் பலவீனங்களைப் ஆராய்ந்து,அவரது 'கால் தற்காப்பு 'குறைபாட்டைக் கண்டறிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பு ரஷ்யாவில் புனியாவின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.
பிடிஐ விளையாட்டு பத்திரிக்கையாளர் அமன்பிரீத் சிங் கூறுகையில், 'அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் மண் களத்தில் பயிற்சி செய்ததால், அதிகம் கால்களை வளைத்து விளையாடாத காரணத்தால் அவருக்கு இந்த பலவீனம் உள்ளது. ஆனால், ஜார்ஜியாவின் ஷாகோ பஜ்ரங்கின் கால் தற்காப்பு குறைபாடுகளை நீக்க பெரிதும் உதவினார்."என்று குறிப்பிட்டார்.
ஷாகோ பஜ்ரங்கிற்காக உலகின் சிறந்த பயிற்சி கூட்டாளர்களை கண்டுபிடித்து அவரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு இடங்களுக்கு பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். இந்தியாவில் பஜ்ரங்கிற்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கூட்டாளரைக் கண்டுபிடிக்க முடியவில்ல. எனவே பஜ்ரங்கின் பயிற்சிகளில் இது ஷாகோவின் முக்கியமான பங்களிப்பாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












