ரவிக்குமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளி வென்ற மல்யுத்த வீரன் யார்?

பட மூலாதாரம், Reuters
டோக்யோ ஒலிம்பிக்கில் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த விளையாட்டில் 57 கிலோ எடைப் பிரிவில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சவுர் உகெவை எதிர்கொண்டு 4-க்கு 7 என்கிற புள்ளி கணக்கில் தோல்வி கண்டாலும், இந்தியாவுக்கு 2-வது வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்துள்ளார் ரவிக்குமார் தஹியா.
அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவைத் தோற்கடித்து இந்தியாவுக்கு மீண்டும் பதக்க நம்பிக்கை கொடுத்த தஹியா, இறுதிப் போட்டியில் தோற்றது இந்தியர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.
டோக்யோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இந்தியாவின் மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன் பிறகு இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரவிகுமார் மூலம் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
யார் இவர்? இவரது பின்னணி என்ன?
1. மல்யுத்த பரம்பரை: ரவிகுமார் தஹியாவின் தந்தை ராகேஷ் தஹியா, தாத்தா, மாமாக்கள் என அனைவருமே மல்யுத்த வீரர்கள்தான். ரவிகுமாரின் மாமாக்களில் ஒருவர் காவல் துறையிலும், ஒருவர் ராணுவத்திலும் இணைந்துவிட்டனர். ஆனால் அவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார்.
2. ஏழ்மையிலும் செம்மை; ரவிகுமாரின் தந்தை ராகேஷ், இந்தியாவின் பல கோடி விவசாயிகளைப் போல சொந்த நிலமின்றி, நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்தனை ஏழ்மையிலும் விடாமுயற்சியோடு மட்டுமே வளர்ந்த ரவிகுமார்தான் இன்று இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
3. ஆட்டத்தில் அர்ஜுனன்: ரவிகுமார் தஹியா எப்போதும் எதை குறித்தும் புகார் கூறியது இல்லை. பயிற்சி எத்தனை கடினமானதாக் இருந்தாலும் செய்வார். அவருக்கு இயற்கையான மல்யுத்த திறன் இல்லை, இருப்பினும் அவர் தன்னை வளர்த்துக் கொண்டார். அர்ஜுனனைப் போல இலக்கில் கவனமாக இருந்தார் என்கிறார் அவரது தொடக்க கால மல்யுத்தப் பயிற்சியாளர் பிரம்மச்சாரி ஹன்ஸ்ராஜ்.

பட மூலாதாரம், Getty Images
4. பொதுவாக ஹரியானாவில் மல்யுத்த வீரர்களின் உருவம் மற்றும் ஆடும் முறையைப் பொறுத்து பலருக்கு பட்டப் பெயர்கள் வழங்கப்படுமாம். அப்படி ரவிகுமார் தஹியாவுக்கு வழங்கப்பட்ட பெயர் மோஹினி என்கிறார் ஹன்ஸ்ராஜ்.
5. ஹன்ஸ்ராஜ் தன்னால் மேற்கொண்டு மல்யுத்தம் கற்றுக் கொடுக்க முடியாது என உணர்ந்த பின், புது டெல்லியில் இருக்கும் சத்ரசால் மைதானத்தில் ரவிகுமாரை சேர்த்துவிட்டார். சுஷீல் குமாரைப் பார்த்து வளர்ந்த ரவிகுமார் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் முன்னணி மல்யுத்த பயிற்சிப் பள்ளியான சத்ரசால் மைதானத்தில் சேர விரும்பினார் என்கிறது இ எஸ் பி என் வலைதளம். ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தின் நஹரி கிராமத்தில் பிறந்த ரவிக்குமார் தஹியா, இந்த நாளுக்காக 13 ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் உழைத்திருக்கிறார்.
6. ரவிக்குமார் இருக்கும் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 15 ஆயிரம்தான். ஆனால் இந்த கிராமம் இதுவரை மூன்று ஒலிம்பிக் வீரர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. மகாவீர் சிங் 1980 மாஸ்கோ மற்றும் 1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். அமித் தஹியா 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். தற்போது ரவி தஹியா இந்தப் பாரம்பரியத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
7. பத்து வயதிலிருந்தே, டெல்லியில் உள்ள சத்ரசால் விளையாட்டு மைதானத்தில் சத்பால் சிங் வழிகாட்டுதலில் மல்யுத்த நுட்பங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் ரவிகுமார் தஹியா.

பட மூலாதாரம், MADDIE MEYER/GETTY IMAGES
8. ரவியின் தந்தை, காலையில் நான்கு மணிக்கு எழுந்து அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று அங்கிருந்து ஆசாத்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்ரசால் விளையாட்டு மைதானத்திற்கு மகனை அழைத்துச் சென்று வந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக இது தடையின்றித் தொடர்ந்தது.
9. ஒரு காலத்தில் ரவி குமாருக்கு இரும்புச் சத்து குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நண்பர் அருண் மூலம் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டபின், அதை சரி செய்து கொண்டார், அதன் பிறகு அவர் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
10. ரவிகுமார் தஹியா வென்ற பதக்கங்கள்:
2015ஆம் ஆண்டு ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ரவி தஹியா முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
இதற்குப் பிறகு, அவர் 2018இல் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்பிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 2019இல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், 2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.
2021இல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கத்தை வென்று தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார்.
2019ஆம் ஆண்டில், கஜகஸ்தானில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் நுழைந்தார். இன்று இந்தியாவுக்காக டோக்யோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பிற செய்திகள்:
- சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்?
- ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெற்றிக்கு ஒடிஷா உதவியது எப்படி?
- தனுஷுக்கு 48 மணி நேர கெடு - சொகுசு கார் வரி வழக்கில் என்ன தீர்ப்பு?
- டெல்லியை உலுக்கும் 9 வயது சிறுமியின் மரணம்: 'பாலியல் வல்லுறவு என பெற்றோர் புகார்'
- நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க வல்லவர் சரத் பவாரா மமதா பானர்ஜியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












