நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க 'வல்லவர்' சரத் பவாரா, மமதா பானர்ஜியா? - இந்திய அரசியல்

பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
- எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
- பதவி, பிபிசி மராட்டி செய்தியாளர்
கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் அரசியல் நிகழ்வுகளிலிருந்து, ஒரு பொதுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்கும் முயற்சி வேகமாக நடந்து வருவது தெளிவாகிறது. இதை வழி நடத்தப்போவது மமதா பானர்ஜியா அல்லது சரத் பவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் இவை பல ஊகங்களுக்கு வழி வகுக்கின்றன.
மூன்று நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மமதா பானர்ஜி கொல்கத்தா திரும்பினார். பிரதமர் நரேந்திர மோதி, நிதின் கட்கரி, சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை அவர் சந்தித்துள்ளார். பல எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்தார். ஆனால், மமதா-பவார் இடையிலான சந்திப்பு நிகழவில்லை. இது விரைவில் நிகழும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2024 தேர்தலில் பாஜகவுக்கு ஒரு பலமான போட்டியை உருவாக்குவது குறித்துப் பல நாட்களாகவே விவாதிக்கப்பட்டு வந்தாலும், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் இந்த விவாதத்தைத் துரிதப்படுத்தியுள்ளன.
கொரொனா இரண்டாவது அலையின் கோரத் தாண்டவம், அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் நரேந்திர மோதி அரசு விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. இது புதிய கூட்டணிக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்த சாத்தியக்கூறு, இருவரைச் சுற்றியே விவாதிக்கப்படுகிறது. ஒருவர் மமதா பானர்ஜி, மற்றொருவர் சரத் பவார்.
இருவரும் தத்தம் அரசியல் வியூகங்களின் மூலம் தத்தம் மாநிலங்களில் பாஜக ஆட்சியமைப்பதைத் தடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் பவார் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மூலமும் மேற்கு வங்கத்தில் மமதா, கடும் எதிர்ப்பு அரசியல் மூலமும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். மமதா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வாராகியுள்ளார்.
நரேந்திர மோதிக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான தனிப்பட்ட ஆளுமைப் போட்டியில் ஒவ்வொரு முறையும் மோதியே முந்தியுள்ளார். எனவே எதிர்க்கட்சிகளின் முகமாக யார் இருப்பது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பின்னணியில் சரத் பவார் மற்றும் மமதா பானர்ஜியின் அரசியல் முன்னெடுப்புகள் கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன.
ராஷ்டிர மன்ச் என்ற புதிய முன்னணியை அமைக்க, பவார் பல எதிர்க்கட்சித் தலைவர்களையும் முக்கிய நபர்களையும் டெல்லியில் சந்தித்தார். மமதாவும் தனது டெல்லிப் பயணத்தின் போது இதையே செய்தார்.

பட மூலாதாரம், NILESH DHOTRE
மேற்கு வங்கத் தேர்தலில் மமதாவின் அரசியல் ஆலோசகராக இருந்து வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோர் கடந்த சில நாட்களில் பவாரைப் பல முறை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரில் வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது.
'கடந்த காலங்களில் நான் இதைப் பல முறை செய்திருக்கிறேன்'
பல ஆண்டுகளாகப் பிரதமாராகும் சாத்தியம் படைத்தவராக சரத் பவாரின் பெயர் அடிப்பட்டு வந்துள்ளது. அவர் காங்கிரஸில் இருந்த போதும் கட்சியை விட்டு விலகிய போதும், நரேந்திர மோதி இரு முறை முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த நிலையிலும் அவரது பெயர் விவாதங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி அல்லாத மூன்றாவது அணி பற்றிய பேச்சு எழுந்த போதெல்லாம் பவாரின் பெயரும் பேசப்பட்டது. கடந்த சில மாதங்களாக அவர் பல தலைவர்களைச் சந்தித்து வருவதால், அவர் மூன்றாவது அணிக்கு அடித் தளம் போடுகிறார் என்ற செய்தி வலம் வரத் தொடங்கியது.
இதை பவாரே மறுத்தும் வந்துள்ளார். ராஷ்டிர மன்ச்சின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்திய சரத் பவார், தாம் இப்படிப் பல முறை இதற்கு முன்னர் செய்திருப்பதாகவும் இப்போது செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.
ஆனால், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க பவார் பலருடன் பேசி வருவதாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், பாஜகவுக்கு எதிராக ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்கக்கூடிய திறமை படைத்தவராக இவர் பார்க்கப்படுகிறார். அரசியல், நிர்வாக அனுபவத்துடன் கூட்டணி நுணுக்கங்கள் பற்றிய நன்கறிந்தவர் இவர்
அனைத்துக் கட்சிகள், தலைவர்களுடனும் இவருக்கு நல்லுறவு உண்டு. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நரேந்திர மோதியுடனும் சோனியாவுடனும் நல்லுறவு கொண்டவர் இவர். கூட்டணிக்கு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இயல்பு மிக முக்கியம். தனது கட்சியுடன் மூன்று தசாப்தங்களாக மோதல் போக்கைக் கொண்ட சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் புதிய நண்பர்களைப் பெறவும் அனைவரையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கவும் இவர் அறிவார்.

பட மூலாதாரம், NArendra modi twitter page
தேர்தல் பிரசாரமாகட்டும் அவைக் கூட்டத் தொடராகட்டும் இவரது பங்கு எப்போதும் இருந்துள்ளது. தற்சமயம், இவரது வயது ஒரு குறுக்கீடாக இருக்கலாம். 2022-ல் இவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் மிக நெருக்கமான போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. 2024 தேர்தலுக்கான கூட்டணியை 2022-ல் இவர் உருவாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மாநிலத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தேசிய அளவில்
சரத் பவார் போன்றே, புதிய கூட்டணிக்குத்தான் மமதாவும் முயற்சிக்கிறார். டெல்லி பயணத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் ஆட்டம் ஆரம்பம் என்று அவரே கூறியிருக்கிறார். அடிக்கடி இனி டெல்லி வரவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவருக்கு டெல்லி அரசியல் புதிதல்ல. தனியாளாக மேற்கு வங்கத்தை வென்ற அவர், எதிர்க்கட்சியின் முகமாக அறிவிக்கப்படுவாரா?
பாஜகவை ஆட்சியமைப்பதிலிருந்து தடுக்க முடியும் என்று பவாருக்கு அடுத்தபடியாக இவர் நிரூபித்துள்ளார். பாஜகவைப் போலவே கடும் போக்கில் அரசியல் செய்ய மற்ற கட்சிகளாலும் முடியும் என்பதையும் பலர் கட்சி தாவி பாஜகவுக்குப் போனாலும் வெற்றி சாத்தியம் என்பதையும் அவர் காட்டியுள்ளார்.
அவரது பிரசாரமும் வெற்றியும் அவர் பெண் என்னும் அம்சமும் அவருக்குக் கூடுதல் பயனளிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஎன இரு கூட்டணியிலும் இவர் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளார். கூட்டணி அரசியல் இவருக்குப் புதிதன்று. அனைத்துக் கட்சிகளுடனும் இவருக்கு நல்லுறவு உண்டு. சோனியா காந்தியுடன் கூட நல்ல உறவைக் கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், INC party
அவரது ஆதிக்கப் போக்கு, கூட்டணிக்குத் தேவையான உள்ளடக்கிய அரசியல் அணுகுமுறைக்குத் தடையாக இருக்கலாம். இவரது முன் கோபத்தால் பல கூட்டணிகள் முறிந்துள்ள வரலாறும் உண்டு.
எதிர்க் கட்சிகள் கூட்டணியை உருவாக்குவதில் பவார் போல இவர் விவேகத்துடன் செயல்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவர் தலைமையில் கூட்டணி அமையுமா என்று கேட்கப்பட்டதற்கு அவர் தெளிவான பதில் கூறவில்லை. ஆனால் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் காட்டுகின்றன.
நரேந்திர மோதிக்கு எதிராக கூட்டுத் தலைமை?
சரத் பவார் மற்றும் மமதா பானர்ஜி தற்போது விவாதப் பொருளாக இருந்தாலும், எதிர்க்கட்சிக் கூட்டணி ஒரு கூட்டுத் தலைமையைத் தான் கொண்டிருக்கும் என்று அரசியல் விமர்சகர் அபய் தேஷ்பாண்டே கூறுகிறார்.
"தலைவர் வேண்டுமென்றால், உத்தவ் தாக்கரே கூட ஏற்கலாம். சஞ்சய் ராவத் கூட ஒருமுறை அவருக்குத் தேசிய அளவில் தலைமை தாங்கும் தகுதி உள்ளதாகக் குறிப்பிட்டார். அகிலேஷ் யாதவ், மாயாவதி என்று பல பேர் உள்ளனர். நாடாளுமன்றத்தில் வேண்டுமானால் இவர்கள் பங்களிக்கலாமே தவிர, எதிர்க்கட்சியின் முகமாக இவர்கள் இருக்க முடியாது" என்கிறார் அபய்.

மேலும் அவர், "காங்கிரஸ் வலுவிழந்து விட்டது. பிராந்தியக் கட்சிகள், பாஜகவை எதிர்ப்பது போலதான் காங்கிரஸையும் எதிர்க்கின்றன. தற்போதைய நிகழ்வுகள் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளுக்கான ஓர் அமைப்பு உருவாவது போலத் தோன்றுகின்றன. இது தொடர்ந்தால், புதிய கூட்டணி, சரத் பவார் முன்னெடுப்பில் உருவாகலாம். அடுத்த மூன்றாண்டுகள் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்" என்று கூறுகிறார்.
"தேர்தலில் நரேந்திர மோதியை எப்படி வெல்வது என்பதை மமதாவும் வியூகம் மூலம்நரேந்திர மோதியை எப்படி வெல்வது என்பதை பவாரும் காட்டியுள்ளனர். இவர்கள் கை கோர்த்தால் அது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கும். 2019 பெரு வெற்றிக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் பின்னடைவைச் சந்தித்தது பாஜக. அங்கு தொடங்கியது மேற்கு வங்கத்தில் முடித்து வைக்கப்பட்டது" என்று திவ்ய மராட்டியின் ஆசிரியர் சஞ்சய் அவதே கூறுகிறார்.
"ஆனால், பிராந்தியத் தலைவர்கள் தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவது கடினம். அதனால், வெளியில் காட்ட ஒரு தேசிய முகம் தேவை. உதாரணத்திற்கு ராகுல் காந்தி. அவர் வெற்றியாளராகத் தன்னை நிரூபித்துக்கொள்ளவில்லை என்றாலும், அவர் ஒரு தேசியத் தலைவர் என்று அனைவராலும் அங்கீகரிக்கபப்ட்டவர். வேறு யாராவது கூட இவர் போல முன்வைக்கப்படலாம். ஆனால் ஒரு தேசிய முகம் தேவை," என்றும் அவர் கூறுகிறார்.
எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் குடியரசுத் தலைவர் தேர்தலும் ஒரு பரிசோதனைக் களமாக இருக்கும். சரத் பவாரும் மமதாவும் இந்த இரு தேர்தல்களில் ஆற்றவிருக்கும் பங்களிப்பு எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பிற செய்திகள்:
- தமிழக மேற்கு மாவட்டங்களில் நோய் எதிர்ப்புத்திறன் குறைய காரணம் என்ன?
- மதுரை பேக்காமன் கோயிலில் பட்டியலினத்தவர் நுழைவு: நடந்தது என்ன?
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
- மீரட்டில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக முஸ்லிம் பெண் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












