கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக இந்துத்துவ அமைப்பினர் மீது முஸ்லிம் பெண் புகார்

பெண்னுக்கு பாலியல் துன்புறுத்தல்- மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷாபாஸ் அன்வர்
    • பதவி, மீரட்டிலிருந்து பிபிசி இந்திகாக

பாலியல் வல்லுறவு குறித்து புகார் செய்தபோது, "ஒன்றும் பிரச்னையில்லை. ​​நூறு மாடுகள் தானமாக வழங்கினால் சரியாகி விடும்" என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக பரேலியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் தான் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில், மீரட்டில் உள்ள பல்லவபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இந்த விவகாரத்தில் பெண்ணின் புகார் ஜூலை 28ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணை நடைபெறுகிறது. பெண்ணின் மருத்துவ பரிசோதனை மற்றும் அவரிடம் வாக்குமூலம் பெறும் நடைமுறை முடிந்து விட்டது," என பல்லவபுரம் காவல் நிலையப் பொறுப்பாளர் தேவேஷ் ஷர்மா தெரிவித்தார்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் என்ன தெரியவந்தது என பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த மீரட்டின் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வினீத் பட்நாகர், "பரேலியைச் சேர்ந்த இளம்பெண்ணின் கூட்டு பாலியல் வல்லுறவு விவகாரத்தில் மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டது. ஆனால் அதன் விவரங்களை வெளியிட முடியாது, "என்று கூறினார்.

இந்த விவகாரத்தில், மீரட்டின் பல்லவபுரத்தில் வசிக்கும் ஒரு இந்துத்துவ அமைப்பின் தலைவி என்று சொல்லப்படும் மீனாட்சி செளஹான், அவரது மகன் அனிகேத் மற்றும் மீனாட்சியின் மைத்துனர் அஜய் செளஹான் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

"இந்திய தண்டணையியல் சட்டத்தின் பிரிவு 323 (அடித்தல்) 328 (போதை பொருள் பயன்படுத்தல்) 376 டி (கூட்டு பாலியல் வல்லுறவு) 420 (மோசடி) 506 (கொலை மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.," என பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் சுமீத் செளத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.

"இளம்பெண்ணின் மருத்துவ அறிக்கையும், வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்த பிறகே கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட பெண்மணி , பாதிக்கப்பட்டவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி வாங்கிக் கொண்டுள்ளார்," என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த பெண் எப்படி மீனாட்சியுடன் தொடர்பில் வந்தார்?

பல்லவரபுரம் காவல் நிலையம்

பரேலி குடியிருப்புவாசியான பாதிக்கப்பட்ட இளம்பெண், மீரட்டில் வசிக்கும் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுடன் எப்படி தொடர்பில் வந்தார் என்ற கேள்வி இந்த வழக்கில் எழுப்பப்படுகிறது.

"எனது 13 வயது சகோதரர் கடந்த ஆண்டு ஜூன் 18 அன்று கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஜூன் 20 அன்று பரேலியில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை. எனக்கு நீதி வேண்டும்." என பாதிக்கப்பட்ட 25 வயது பெண் பிபிசியிடம் தெரிவித்தார்.

சகோதரரின் கொலைக்குப் பிறகு மீனாட்சி செளஹானிடம் உதவி கேட்டதற்கான காரணத்தை கேட்ட போது , ​​" எனது சகோதரரின் கொலைக்குப் பிறகுதான் மீனாட்சி செளஹானை ஃபேஸ்புக் மூலம் சந்தித்தேன். ஒரு இந்துத்துவ அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், எனக்கு உதவி செய்வதாகவும் என்னிடம் அவர் கூறினார். நான் அவரை நம்பினேன். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு வேலை வாங்கி தருவதாகவும் அவர் உறுதியளித்தார். அதற்காக 20 ஆயிரம் ரூபாயையும் பெற்றுக்கொண்டார்," என அந்த இளம் பெண் கூறினார்.

குற்றம்சாட்டியுள்ள பெண்ணும், மீனாட்சி செளஹானும் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர்.

"நான் கடந்த ஏப்ரல் மாதம் மீரட்டுக்கு வந்திருந்தேன். நான் சுமார் பத்து நாட்கள் இங்கு தங்கியிருந்தேன், ஆனால் வேலை கிடைக்காததால் திரும்பிச் சென்றுவிட்டேன்." என அவர் குறிப்பிட்டார்.

"அந்த நேரத்தில் நான் மீனாட்சி செளஹானின் மகன் அனிகேத்துடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். மீனாட்சி தன்னுடைய சகோதரரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்," என்றார் அவர்.

பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டுகள் என்ன?

பெண்னுக்கு பாலியல் துன்புறுத்தல்- மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

2021 ஜூலை 15 ஆம் தேதி தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த இளம்பெண் குற்றம்சுமத்தியுள்ளார்.

"ஜூலை 15 அன்று நான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். எனக்கு போதை மருந்து கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டது. நான் மயங்கி விழுந்தபோது, ​​மீனாட்சியின் மகன் அனிகேத் மற்றும் அவரது உறவினர் அஜய் செளஹான் என்னை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்," என்று அவர் கூறியுள்ளார்.

"எனக்கு நினைவு திரும்பியபோது, ​​குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என்னை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தார். நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அவர் துப்பாக்கியால் மிரட்டினார். என் வீடியோவும் எடுக்கப்பட்டது. வெளியே சொன்னால் அதை பரப்பி விடுவதாகவும் மிரட்டினர். இது பற்றி மீனாட்சி செளஹானிடம் நான் புகார் செய்தபோது, ​​'அது ஒன்றும் பிரச்னையில்லை. நூறு மாடுகள் தானமாக வழங்கினால் சரியாகப்போகும். வாயை மூடிக்கொண்டு இரு என்று என்னை மிரட்டினார். அடுத்த நாள் அதாவது ஜூலை 16 அன்று என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்," என்று அவர் குறிப்பிட்டார்.

பாலியல் பலாத்காரம் குறித்து போலீஸில் புகார் செய்ய 12 நாட்கள் தாமதமானதற்கான காரணம் குறித்து கேட்டபோது, குற்றம்சாட்டப்பட்டவரின் மிரட்டல்களால் தான் பயந்து இருந்ததாக அந்த பெண் கூறினார்.

கடந்த காலத்தில் மீனாட்சி செளஹான் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு உள்ளதா என்பது குறித்து பல்லவபுரம் காவல் நிலைய பொறுப்பாளர் தேவேஷ் ஷர்மாவிடம் கேட்டதற்கு, "அத்தகைய புகார் எதும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் அவருக்கு குற்றப்பின்னணி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது," என்றார்.

குற்றம்சாட்டப்பட்ட மீனாட்சி சௌகான் அவரது சகோதரரை அறிமுகம் செய்ததாக அந்த இளம் பெண் கூறினார். இது குறித்து குற்றம்சாட்டப்பட்டவரின் சகோதரர் தீபக் செளஹானிடம் கேட்டபோது, ​​"அந்தப் பெண் என் நண்பர் என்பது உண்மைதான். ஆனால் அவர் மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்த புகார் பற்றி இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. நான் யாரை குற்றம் சொல்ல முடியும்? அதை சட்டம்தான் தீர்மானிக்கும். அந்தப்பெண் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் சகோதரி மீனாட்சி மீதும் நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.

தான் டெல்லியில் வசிப்பதாகவும், அங்கு சிறிய வேலைகளைச் செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதே சமயத்தில், தான் பரேலியில் வசிப்பதாகவும், பட்டப்படிப்பு வரை படித்துள்ளதாகவும், புகார் செய்த பெண் கூறியுள்ளார். இளைய சகோதரரை இவந்த அவரது குடும்பத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீங்கலாக மேலும் ஆறு உடன்பிறப்புகள் உள்ளனர்.

மீனாட்சி செளஹானை தொடர்பு கொள்ள முடியவில்லை

பெண்னுக்கு பாலியல் துன்புறுத்தல்- மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

இந்த முழு அத்தியாயத்திலும் மீனாட்சி செளஹான் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. வழக்கு பதிவு செய்ததிலிருந்து அவர் தலைமறைவாக உள்ளார் மற்றும் பல முறை முயற்சி செய்தும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனினும், குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மீனாட்சி செளஹான் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை, உள்ளூர் ஊடக செய்திகளில் வெளிவந்துள்ளது.

இளம் பெண் சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று அதில் அவர் கூறியுள்ளார். தான் அரசியல் சதிக்கு பலியாகியுள்ளதாகவும், இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை நடந்தால், எல்லாமே தெளிவாகி விடும் என்றும் அவர் குறிப்பிடுள்ளார்.

மீனாட்சி செளஹான், ராஷ்ட்ரிய இந்து யுவ வாஹினியின், பெண்கள் பிரிவின் தலைவராக தன்னை முன்னிறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாஹினிக்கும் இந்த அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.

குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு மாநிலத்தின் இந்து யுவ வாஹினியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த அமைப்பின் மாநில தலைவர் நாகேந்திர தோமர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :