பாஜக vs திமுக: 'மோதியின் திட்டத்துக்கு தி.மு.க சொந்தம் கொண்டாடுவதா?' - கொதிக்கும் எம்.எல்.ஏ சி.சரஸ்வதி

- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
`மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தன்னுடைய திட்டமாக தி.மு.க விளம்பரப்படுத்திக் கொள்கிறது' என அதிர்ச்சிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார், மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சரஸ்வதி. என்ன நடக்கிறது ஈரோட்டில்?
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக பா.ஜ.கவின் சி.சரஸ்வதி இருக்கிறார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சரஸ்வதி, ` மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு நீதிமன்றத்தில் வாதாடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவப் படிப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்துள்ளது. இதை தனது சாதனையாக தி.மு.க சொல்லிக் கொள்கிறது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித சலுகைகளையும் பெற்றுத் தரவில்லை.
நாட்டில் வாழும் அனைத்து சமூக மக்களுக்கும் சமமான சலுகைகள் கிடைக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். அதன் காரணமாகவே, பொருளாதாரத்தின் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்களை எல்லாம், தி.மு.க சொந்தம் கொண்டாடி வருகிறது' எனத் தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ சி.சரஸ்வதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
அரசு விழாக்களில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தீர்களே?
`` ஆமாம். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மின்வாரியத்தில் நடந்த கூட்டம் உள்பட 2, 3 அரசு நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. `நம்மை ஏன் தவிர்க்க வேண்டும்?' எனக் கட்சிக்காரர்கள் ஆதங்கப்பட்டனர். எல்லா இடத்திலும் இவ்வாறு நடக்கிறது. எதனால் எங்களுக்கு அழைப்பு மறுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. நான் பேட்டி கொடுத்த பிறகு தீரன் சின்னமலை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன்பிறகு என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கலாம்."
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு பல இடங்களில் அழைப்பிதழ் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க எம்.எல்.ஏக்களை மட்டும் புறக்கணிக்க என்ன காரணம்?
`` பா.ஜ.கவை அவர்கள் எதிர்க்கட்சியாக நினைக்கின்றனர். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்".

பட மூலாதாரம், BJP4INDIA TWITTER PAGE
மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தமது திட்டங்களாக தி.மு.க அறிவித்துக் கொள்வதாகக் கூறுகிறீர்கள். அதைப் பற்றிக் கூற முடியுமா?
`` பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை அவர்கள் செய்வதாக விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையத்தை நவீனமாக மாற்றும் வேலைகள் நடக்கின்றன. இதை தி.மு.க அரசு செய்வதாகக் காட்டிக் கொள்கிறார்கள். இவையெல்லாம் உதாரணங்கள்தான்."
கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகமெடுத்தபோது, அ.தி.மு.க அமைச்சர்கள் பிரதான பங்கு வகிப்பதாகப் பேசப்பட்டது. இரண்டுக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?
``அனைவரும் அதையேதான் செய்கிறார்கள். `இது மத்திய அரசின் திட்டம்' என அ.தி.மு.க அமைச்சர்கள் சொல்லிக் கொள்ளவில்லை. அதேநேரம், `நாங்கள் மட்டுமே செய்கிறோம்' எனவும் அவர்கள் கூறவில்லை."
தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு எதிர்க்கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. இது இருமுனைப் போட்டியாக செல்கிறது' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார். அப்படித்தான் நிலவரம் இருக்கிறதா?
``நானும் அப்படித்தான் நினைக்கிறேன்."

பட மூலாதாரம், Tn bjp
தொகுதி மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுப்பதில் தி.மு.க அரசு போதிய ஒத்துழைப்பு தருகிறதா?
``என்னுடைய தொகுதி மக்களுக்கு நான் செய்ய வேண்டியதை செய்து வருகிறேன். அதில் எந்தவிதத் தலையீடும் இல்லை."
`முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது' என சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்தனவே?
``இங்கு 62 வகையான பிரிவுகளில் மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, செட்டியார், முதலியார், ஆங்கிலோ இந்தியன், கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே முன்னேறிய பிரிவினரா? அனைத்து செட்டியார் சமூக மக்களும் படித்தவர்களா.. பணக்காரர்களா என்ன? இதில் சாதாரண கூலி வேலைக்குச் செல்வர்கள் பலர் உள்ளனர். மேலும், பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினர் ஏராளமானோர் உள்ளனர்.
`முன்னேறிய சமுதாயம்' என்று சொல்பவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. அதேபோல், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பலர் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், முன்னேறிய சமுதாயத்தில் பிறந்த காரணத்தாலும் ஏழைகள் என்பதாலும் எந்தவித வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கும் கொடுப்பதுதானே சமூக நீதியாக இருக்க முடியும்?"
சட்டசபையில் முதன்முதலில் நுழைந்திருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
``முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு ஆளுநர் உரை நடந்தது. இன்னமும் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கவில்லை. அதன்பிறகுதான் எப்படி இருக்கிறது எனக் கூற முடியும்."
பிற செய்திகள்:
- "வாழ விருப்பம் இல்லை, குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்"- வருத்தத்தில் யாஷிகா ஆனந்த்
- சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை - என்ன நடந்தது?
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
- மீரட்டில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக முஸ்லிம் பெண் புகார்
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












