"அண்ணாமலை முதிர்ச்சியற்றவர்" - கொந்தளிக்கும் அதிமுக - திமுகவுக்கு மாற்று பாஜக என்றதால் சர்ச்சை

அண்ணாமலை

பட மூலாதாரம், K.Annamalai/Twitter

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`தமிழகத்தில் தி.மு.கவுக்கு மாற்று பா.ஜ.கதான்' என தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. `அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சியில்லை' என சாடுகிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். உண்மையில் தி.மு.கவுக்கு மாற்று பா.ஜ.கதானா?

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``தமிழகத்தில் தி.மு.கவுக்கு மாற்றாக பா.ஜ.க உள்ளது. "திமுகவின் விமர்சனங்கள் அனைத்தும் பா.ஜ.கவை எதிர்த்தே முன்வைக்கப்படுகின்றன. பேச்சு அரசியலில் அவர்களுக்கு நாங்கள்தான் எதிரி. எங்களுக்கு அவர்கள்தான் எதிரி. எங்கள் இரண்டு பேருக்கும் இடையில்தான் யுத்தம் நடக்கிறது. இது இரு முனைப் போட்டியாக சென்று கொண்டிருக்கிறது," என்றார்.

அப்போது அ.தி.மு.க கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, `` அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது" என அவர் பதில் அளித்தார். தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போதும், ``தி.மு.கவுக்கு எதிரி பா.ஜ.க என்ற அடிப்படையில் அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். பிரதமர் மோதியின் நலத்திட்டங்களால் தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதனால் வரும் தேர்தலில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

தே.மு.தி.கவுக்கு கிடைத்த வாய்ப்பு

``தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும்தான் இரு முனைப் போட்டி நிலவுகிறதா?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``புதிதாகத் தலைவராகப் பொறுப்பேற்றதால் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். தேர்தலில் 66 இடங்களில் வென்று பலமான எதிர்கட்சியாக அ.தி.மு.க உள்ளது. அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி உள்ளது. நாங்கள் ஏற்கெனவே 7 முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். 50 ஆண்டுகால பொன்விழாவை கொண்டாட இருக்கிறோம். அப்படியிருக்கும்போது இந்த இரு கட்சிகளுக்கும் இடையில்தான் போட்டியே தவிர, வேறு எந்த கட்சியும் இதில் சொந்தம் கொண்டாட முடியாது. இரு முனைப் போட்டி என்பது சரியான ஒன்று அல்ல. 66 இடங்களில் வென்ற எதிர்கட்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது" என்கிறார் வைகைச்செல்வன்.

வைகை செல்வன்

பட மூலாதாரம், Vaigai Selvan/Twitter

`` சசிகலா பேச்சு உள்பட சில காரணங்களால் அ.தி.மு.கவில் குழப்பம் நீடிப்பதால், அதனை பா.ஜ.க தனக்கு சாதகமாக தக்க வைத்துக் கொள்ள முயல்கிறதா? என்று கேட்டோம்.

``அனைத்து கட்சிகளும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவே முயலும். தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும். வெற்றிடத்தைக் காற்று நிரப்பும். `ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க இருக்காது' என்று கூறினார்கள். நான்கு வருடங்களாக இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் ஆட்சியைக் கொண்டு சென்றனர். தற்போது எதிர்கட்சி நிலையில் இருக்கிறோம். ஒரு பலவீனமான எதிர்க்கட்சியாக நாங்கள் இல்லையே. 2011 ஆம் ஆண்டு தே.மு.தி.கதானே எதிர்க்கட்சியாக இருந்தது. அந்த வாய்ப்பு தி.மு.கவுக்குக்கூட கிடைக்கவில்லையே. 2016 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக வந்த தி.மு.க, 2021 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார்கள்.

`அரசியல் முதிர்ச்சியற்ற அண்ணாமலை`

அண்ணாமலை

பட மூலாதாரம், K.Annamalai/Twitter

அதேநேரம், மக்களின் செல்வாக்கு என்பது அ.தி.மு.க பக்கம்தான் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிவாய்ப்பை இழந்தோம். தற்போது தேர்தல் முடிந்து 3 மாதங்கள்கூட நிறைவடையவில்லை. அதனால் எந்தக் கருத்துகளையும் கூறாமல் இருக்கிறோம். சட்டமன்றத்தில் பலம் .வாய்ந்த எதிர்கட்சியாக அ.தி.மு.க பணியாற்றும். போலியான வாக்குறுதிகளைக் கூறி தி.மு.க ஆட்சியைப் பிடித்துவிட்டது என்பதை மக்களிடம் கூறுவோம். மற்றபடி, சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் பெரியளவில் ஆதரவு இல்லை. அப்படியொரு தோற்றத்தை முனைந்து ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

பா.ஜ.க தொண்டர்களுக்காக அண்ணாமலை அப்படிப் பேசியிருக்கலாம். ஆனால், நிலைமை அவ்வாறாக இல்லை. சட்டமன்றத்தில் யார் ஆளும்கட்சி, யார் எதிர்க்கட்சி என்றுதான் பார்க்கப்படும். அவர்களுக்குப் பலம் இருக்கிறதா, இல்லையா என்பதை இன்னொரு தேர்தலில்தான் பார்க்க முடியும். அண்ணாமலையின் பேச்சை, அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சாகத்தான் பார்க்க முடிகிறது" என்கிறார்.

பா.ஜ.கவின் கிளைக் கழகமா அ.தி.மு.க?

`` தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறதா?" என தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``உண்மைதான். அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் வேறு வேறல்ல என்பதை அண்ணாமலை முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.கவின் கிளைக் கழகமாக அ.தி.மு.க மாறிவிட்டது என்பதைத்தான் அவர் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். அதனால்தான், `களத்தில் நாங்கள் இருக்கிறோம்' என்கிறார்.

அ.தி.மு.கவில் இரண்டு அணிகளும் ஒன்றிணைகிறதோ இல்லையோ பா.ஜ.கவோடு அ.தி.மு.க ஒன்றிணைந்துவிட்டது. ஆனால், கருத்தியல்ரீதியாக அவர்களது செயல்பாடுகள் தவறு என்பதால்தான் தேர்தலில் மக்கள் அவர்களை நிராகரித்தார்கள். அ.தி.மு.கவில் திராவிடம் என்ற ஒரு வார்த்தை இருப்பதால்தான் அவர்களால் 66 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. தவிர, அவர்களிடம் பணபலம் இருந்ததும் ஒரு காரணம். கொங்கு மண்டலத்தில் சாதியரீதியாக செயல்பட்டார்களே தவிர, மக்கள் முழுமையாக அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை," என்கிறார்.

அண்ணாமலை

பட மூலாதாரம், K.Annamalai/Twitter

தொடர்ந்து பேசுகையில், ``செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசும்போது, `2026 ஆம் ஆண்டுக்குள் 150 இடங்களைப் பிடிப்போம்' என்கிறார். அது ஒவ்வொரு கட்சியும் காணக் கூடிய கனவுதான். `ஊடகங்களை 6 மாதங்களுக்குள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்' எனப் பேசிவிட்டு, பின்னர் அதை மறுத்துப் பேசினார். அதேநேரம், தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு எதிர்கட்சிகளே இல்லை என்றெல்லாம் நான் கூற விரும்பவில்லை. எதிர்கட்சி என்ற ஒன்று இருந்தால்தான் ஆளும்கட்சி ஆரோக்கியமாக செயல்பட முடியும். அதற்கு பா.ஜ.கதான் ஒரே வழியா என்றால் நிச்சயமாக இல்லை," என்றார் கண்ணதாசன்.

பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா?

இங்கு இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகள் இருக்கும்போது, நாங்கள்தான் எதிர்கட்சி என பா.ஜ.க கூறுவது, `நானும் ரௌடிதான்' என்ற வடிவேலு நகைச்சுவை காட்சியைத்தான் நினைவூட்டுகிறது. மத்தியில் ஆளும்கட்சியாக இருப்பதை வைத்துக் கொண்டு அண்ணாமலை இப்படி பேசுகிறார். சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் அவர்கள் வென்றதற்குக் காரணம், அ.தி.மு.க வாக்குகளை அடிப்படையாக வைத்துப் போட்டியிட்டதால்தான். சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் பா.ஜ.கவின் பலம் என்னவென்பது தெரிந்திருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சம் வாக்குகளில் அவர்கள் ஒவ்வொருவரும் தோற்றார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க என்பது நிராகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. தேசியக் கட்சி என்றால் அனைத்து மாநிலங்களையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் அவர்கள் ஒன்றாகத்தான் பார்க்கிறார்களா? `காவிரி பிரச்னையில் கர்நாடகா பக்கம் இருப்பேன்' என்று கூறிய அண்ணாமலை, இப்போது வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்" என்கிறார்.

அ.தி.மு.கவை தி.மு.க மதிக்கிறதா?

பா.ஜ.க மீது அ.தி.மு.கவும் தி.மு.கவும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``சட்டமன்றத்தில் அ.தி.மு.கவை எதிர்கட்சியாக நினைத்திருந்தால், அவர்களை குறிவைத்துத்தான் தி.மு.க விமர்சனங்களை முன்வைத்திருக்க வேண்டும். திமுகவினர் பா.ஜ.கவை நோக்கித்தான் கூறினர். அப்படியானால் அ.தி.மு.க என்றொரு கட்சியே தி.மு.கவுக்குத் தென்படவில்லையா. பா.ஜ.கவை நோக்கி குற்றச்சாட்டுகளை வைத்தால்தான் அ.தி.முக வலுவிழக்கும் என்று நினைக்கிறார்களா? அ.தி.மு.க-பா.ஜ.க உறவு என்பது இன்றைக்குப் பலமாக இருக்கிறது, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என அனைத்து ஊடக சந்திப்புகளிலும் அண்ணாமலை தெளிவாகக் கூறிவிட்டார்.

மேலும், 150 இடங்களில் வெற்றி பெறப் போவது பற்றிப் பேசும்போது, `எந்தக் கட்சிக்கும் தனியாக ஆட்சியமைக்கும் ஆசை இருக்கும், அதனை நோக்கிப் பயணிக்கிறோம்' என்றார். இன்றைக்குக் கூட்டணி சரியாக இருக்கிறது. நாளை 150 இடங்களில் பா.ஜ.க வெல்ல இருக்கிறது. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவரவர் விருப்பத்துக்கேற்ப என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். தி.மு.கவுக்கு பா.ஜ.க பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. உண்மையிலேயே தி.மு.கவுக்கு தைரியம் இருந்தால் எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.கவை எதிர்த்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முயலுமா? அப்படிச் செய்தால்தான் அ.தி.மு.கவை எதிர்கட்சியாக தி.மு.க நினைக்கிறது என்று பொருள்" என்கிறார்.

`ஆச்சரிய' அண்ணாமலை

``அரசியல் முதிர்ச்சியவற்றவர் அண்ணாமலை என்கிறாரே வைகைச் செல்வன்?" என்றோம். ``சரியாகத் தொடங்கப்பட்ட ஒரு விஷயம், 50 சதவிகிதம் முடிவடைந்ததற்கு சமம் என்பார்கள். அப்படிப் பார்க்கும்போது கடந்த 5 நாள்களுக்குள் பா.ஜ.க அல்லாத அனைத்துக் கட்சிகளுக்கும் அண்ணாமலை ஒரு சவாலாகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் தென்படுகிறார். பா.ஜ.க மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களை அதன் ஆழத்துக்குச் சென்று மற்றவர்கள் வெட்கம் அடையும் வகையில் அவர் பதில் சொல்கிறார். இதற்கு மேலும் அவர் முதிர்ச்சியுள்ளவரா.. இல்லையா என்பதை மக்களின் பார்வைக்கே விட்டு விடுகிறோம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :