மதுசூதனன் உடல்நிலை: அப்போலோ மருத்துவமனை வந்த சசிகலா - அவசரமாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images
அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனின் உடல்நிலையை விசாரிப்பதற்காக வி.கே.சசிகலா அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதேநேரம், அங்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருந்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.கவின் அவைத் தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிசிச்சையளித்து வருகின்றனர்.
அவரது உடல்நலம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியானது. இதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க தலைமைக் கழகம், `வதந்திகளை நம்ப வேண்டாம். மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது' என அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், மதுசூதனின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

இதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அ.தி.மு.க கொடி கட்டிய காரில் சசிகலாவும் வந்த சசிகலாவும் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். சசிகலாவின் திடீர் வருகையை எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி, அவசரம் அவசரமாக மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அ.தி.மு.கவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாகக் கூறிவிட்ட பிறகும், அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா பேசி வருகிறார். வரும் 23 ஆம் தேதி அன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு தொண்டர்களை சந்திக்கப்பதற்கு சசிகலா திட்டமிட்டுள்ளார்.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவும் ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றது, அ.தி.மு.க தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அ.தி.மு.க அவைத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றி வரும் மதுசூதனன், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்தவர்களில் மதுசூதனனும் ஒருவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












