'எடப்பாடி பழனிசாமி ஆட்சி பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி' : தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் அதிமுகவில் அதிர்வலை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள சம்பவம், அ.தி.மு.க தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், கொங்கு மண்டலத்தில் அதிகப்படியான மோசடிகள் அரங்கேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 23ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், அ.தி.மு.க ஆட்சி 2016 ஆம் ஆண்டு அமைந்தவுடன் 5318.73 கோடி ரூபாய் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
2021ஆம் ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள் பலருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக தள்ளுபடி கடன் சான்றிதழை வழங்க வேண்டும்' என்றார்.
சேலம், ஈரோட்டுக்குக் கூடுதல் கடன்கள் ஏன்?
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கோரிக்கைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்துள்ள விளக்கம், அ.தி.மு.க தரப்புக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் பேசிய ஐ.பெரியசாமி, ` விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ 12,110 கோடி ரூபாயை அவசரமாக அறிவித்துள்ளனர். தற்போதைய அரசு அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் எந்த முறையில் கடன் வழங்கப்பட்டுள்ளது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மட்டுமல்லாமல் அனைத்து வங்கிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .
இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதிலும், 136 சங்கங்களில் 203 கோடி ரூபாய் அளவுக்கும் 229 சங்கங்களில் 108 கோடி ரூபாய் அளவுக்கும் 155 சங்கங்களில் 11 கோடி அளவுக்கும் முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, 12,110 கோடியில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 1,350 கோடி அளவுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரோட்டில் 1,085 கோடி ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டத்தில் மட்டும் 2,500 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 44 நகைப் பொட்டலங்களைக் காணவில்லை.
இதில் 300 பவுன் நகைகள் உள்ளன. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் நகைகளும் அங்கே கடன் வழங்கிய முறையையும் பரிசீலித்து பின்பு அதற்குண்டான ரசீதுகளை வழங்குமாறு நாங்கள் ஆணையிட்டுள்ளோம். பயிர்க்கடன் மோசடியில் பல்வேறு வி.ஐ.பிக்களுக்கும் தொடர்புள்ளது. வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்யும்போது இவர்கள் அனைவரும் சிக்குவார்கள்" என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
2 சுற்றறிக்கைகள்
``கூட்டுறவு சங்கங்களில் எந்தளவுக்கு ஆய்வு நடந்து வருகிறது?" என அந்தத் துறையின் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.
`` தமிழ்நாட்டில் 4,531 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில்தான் அதிகப்படியான கடன்கள் கொடுக்கப்பட்டன. ஓராண்டு முடிந்த பிறகு நகைக்கடன்களை முறைப்படுத்தியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது. கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக பொறுப்புகளில் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். அதனால் பயிர்க்கடன் வழங்கியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன" என்கின்றனர். இதுதொடர்பாக, கூட்டுறவுத் துறையில் இருந்து வேளாண் சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட இரண்டு சுற்றறிக்கைளை நம்மிடம் அளித்தனர்.
அதில், கூட்டுறவுத் துறையின் நிதி மற்றும் வங்கியியல் பிரிவின் கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் கடந்த 21.6.2021 அன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ` கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 2018-19, 2019-20, 2020-21 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட பொது நகைக்கடன் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் தங்களது வங்கி தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாகவும் மண்டல இணைப் பதிவாளர்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வாரியாக தனித்தனி படிவங்களில் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 31 இறுதி கெடு

இதனைத் தொடர்ந்து கடந்த 22.6.21 அன்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ` பயிர்க்கடன் தள்ளுபடி 2021' தொடர்பான மொத்த பயனாளிகளின் பட்டியலில் உள்ள பயனாளிகளின் கடன் ஆவணங்கள் மற்றும் சங்கத்தின் பதிவேடுகள், பேரேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்தி சரிபார்க்கும் பொருட்டு அயல் மண்டல குழுக்கள் அமைத்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தள்ளுபடிக்குப் பரிந்துரைக்கப்பட்ட விவசாய நகைக்கடன்களுக்கு ஈடாக பிணை வைக்கப்பட்ட தங்க நகைகளின் எடை, உண்மைத்தன்மை மற்றும் தரம் (தூய்மை) குறித்தும் வழங்கப்பட்ட கடன் தொகை, கடன் வழங்கப்பட்ட நாளன்று பதிவாளர் சுற்றறிக்கையின்படி அனுமதிக்கப்பட வேண்டிய தொகைக்கு மிகாமல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதில், முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட கடன்களை சரக துணைப் பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு 100 சதவிகிதம் மேலாய்வு (Super check) செய்து சரிபார்ப்புக்குழு அளித்த அறிக்கையின் நகல் ஒன்றினை கூட்டுறவுத் தணிக்கை உதவி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.
கடன்களை சரிபார்த்த பின்னர் சரக துணைப்பதிவாளர் முறைகேடாக வழங்கப்பட்ட கடன்களில் 100 சதவிகிதமும் மொத்த கடன்களில் 5 சதவிகிதமும் சரிபார்த்ததற்கான சான்றுடன் மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். இதில் முறைகேடுகள் ஏதுமிருப்பின் அதுகுறித்த அறிக்கையினை சங்கம் வாரியாகத் தொகுத்து மண்டல இணைப் பதிவாளர்கள் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். இதனை 31.7.2021க்குள் பதிவாளருக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
தள்ளுபடிக்காகவே முறைகேடு!

பட மூலாதாரம், CMO/TWITTER
``பயிர்க்கடன் விவகாரத்தில் என்ன நடந்தது?'' என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` விவசாயக் கடன் தள்ளுபடியில் 5,000 கோடி ரூபாயை மட்டுமே கடந்த அரசு கொடுத்தது. இதில் மீதமுள்ள 7,110 கோடி ரூபாயை எப்போது கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை. விவசாயக் கடன் ரத்து அறிவிப்பின்போதே, `முழுத் தொகையையும் அரசு விடுவிக்க வேண்டும் இல்லாவிட்டால் கூட்டுறவு சங்கங்கள் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்' என எச்சரித்தோம். ஆனால், அ.தி.மு.க அரசு பணத்தை விடுவிக்கவில்லை. சட்டமன்றத்தின் கடைசி நாளில் நகைக்கடன் ரத்து அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசாணை வெளியிடப்படவில்லை. 5 சவரனுக்குக்கீழ் அடமானம் வைத்தவர்களைக் கணக்கெடுக்குமாறு கூறியுள்ளனர். 5 சவரனுக்குக்கீழ் தள்ளுபடி அறிவிப்பு வரும் எனத் தெரிந்தே பல சங்கங்களில் முறைகேடு நடந்திருக்கிறது" என்கிறார்.
தொடர்ந்து மேலும் சில தகவல்களைப் பட்டியலிட்டார். `` கூட்டுறவு சங்கங்களில் சொந்த நிதியும் இல்லை. மத்திய கூட்டுறவு சங்கங்களில் கடனும் வழங்கப்படவில்லை. 5 சவரன் நகையை அடமானம் வைத்துவிட்டால், அதற்கான பணம் மத்திய கூட்டுறவு வங்கியில் வரவு வைக்கப்பட்டுவிடும். அந்தவகையில், பணமே இல்லாமல் நகைக்கடன் வழங்கப்பட்டதாகவும் கணக்கு எழுதப்பட்டுள்ளது. அதிலும், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் மட்டுமே அதிகப்படியான கடன் தொகை கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தள்ளுபடி வரப் போகிறது எனத் தெரிந்தே ஊழல் நடந்திருக்கிறது. கொங்கு மண்டலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். பல இடங்களில் போலியான நகைகள் உள்ளன. காணாமல் போன நகைகள் என பலவற்றையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கள்ளக்குறிச்சியில் பத்தாண்டுகளாக நகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 4 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட கடன்களை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதில் இருந்து கிடைக்கக் கூடிய தகவல்களைப் பொறுத்தே தமிழக அரசு முடிவெடுக்க உள்ளது" என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சேலம் இளங்கோவன் சொல்வது என்ன?
இதுதொடர்பாக, கூட்டுறவுத் துறையின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை பலமுறை தொடர்பு கொண்டபோது, அவரிடம் இருந்து உரிய பதில் வராததால், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான சேலம் இளங்கோவனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கடன் தள்ளுபடி தொடர்பாக அமைச்சர் சில தகவல்களைக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக ஆவணங்களை பார்த்த பிறகு பேசுகிறேன்" என்றார்.
இதையடுத்து, அமைச்சரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` பயிர்க்கடன் தள்ளுபடியை மிகவும் சிந்தித்துத்தான் அறிவித்தார்கள். 2016 முதல் இரண்டு முறை விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். அம்மா ஆட்சியில் 5,600 கோடியை தள்ளுபடி செய்தார். அதன்பிறகு 2017ஆம் ஆண்டு வறட்சி நிவாரணம் கொடுத்தோம். கூடவே, இடுபொருள் மானியத்தையும் கொடுத்தோம். 2021ஆம் ஆண்டு 12,110 கோடி ரூபாயை இ.பி.எஸ் தள்ளுபடி செய்தார். விவசாயிகள் மீது அக்கறை உள்ளதால்தான் இவ்வளவு விஷயங்களையும் செய்தோம். இதைப் பற்றி சிந்திக்காமல், தேர்தலுக்காக அறிவித்தோம் என்று கூறுவதை ஏற்க முடியாது. அதிலும், கடன் தள்ளுபடியை அறிவித்து பதினைந்தே நாளில் அதற்கான ரசீதையும் கொடுத்ததுதான் சிறப்பானது" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` கடன் தள்ளுபடியை அறிவித்து அதில் எதாவது முறைகேடுகள் நடந்திருந்தால் ஆதாரத்தைக் காட்டட்டும். வழக்கு போடட்டும். 2006ஆம் ஆண்டு, `7,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம்' என தி.மு.க அரசு அறிவித்தது. ஆனால், அதனை செயல்படுத்தாமல் காலம்தாழ்த்தினர். ஒரு கட்டத்தில் 4,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடனை தள்ளுபடி செய்தனர். இதனை விசாரிக்கச் சொல்கிறவர்கள், அவர்கள் ஆட்சிக்காலத்தில் தள்ளுபடி அறிவித்ததில் நடந்த முறைகேடுகளையும் ஆய்வு செய்யட்டும். அதில் பயனடைந்தவர்கள் தி.மு.கவினர் யார் என்ற விவரத்தையும் சொல்லட்டும். எங்கள் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு எவ்வளவோ நல்ல திட்டங்களை செயல்படுத்தினோம். விவசாய முதல்வர் இருந்ததால்தான் இது சாத்தியமானது" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












