'12,000 ஆண்டுகள் இந்திய கலாசார வரலாறை ஆராயும் குழு மாற்றி அமைக்கப்படும்' - இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் 12,000 ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய இந்திய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் குழு மாற்றி அமைக்கப்பட்டவுள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், தென்னிந்தியர்கள் ஆகியோருக்கு இடம் இல்லை என்பது கடந்த ஆண்டு இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த பிரஹலாத் சிங் படேல் எழுத்து மூலம் தகவல் அளித்தபின் தெரியவந்தது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர்.
அக்குழு மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது என தற்போதைய இந்திய கலாசாரத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 23, 2020 அன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு இக்குழுவை கலைக்குமாறு கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று அந்த குழு இன்னும் நீடிக்கிறதா, அக்குழு கலைக்கப்பட்டு பன்மைத்துவ பிரதிநிதித்துவத்தோடு மாற்றி அமைக்கப்படுமா என்று வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு அளித்துள்ள பதிலில் "இக்குழு 2016ல் அமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் இரண்டு முறை கூடியுள்ளது. இக்குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றி அமைக்கப்படும் போது அதன் உறுப்பினர் உள்ளடக்கம் பன்மைத்துவ நோக்கில் அமைவதற்கான எல்லா ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்படும்" என்று அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
12,000 வருடங்களுக்கு முன்பிருந்து வரலாற்றுக் காலம்வரை
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள், அவர்கள் வரலாற்றை அறிவியலுக்குப் புறம்பான முறையில் அணுகுவார்கள் என்பதைக் காட்டுகிறது. இது மிகவும் கவலைக்குரியது என Early Indians நூலின் ஆசிரியரான டோனி ஜோசப் இந்த சர்ச்சை வெளியான நேரத்தில் பிபிசி தமிழிடம் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Universal History Archive
"முதலாவது இந்தியர்கள் (First Indians) அல்லது ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் (Out of Africa) 65,000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவை வந்தடைந்தார்கள். இதற்குப் பிறகு கடந்த 12,000 ஆண்டுகளில் மூன்று மிகப் பெரிய மனித இடப் பெயர்வுகள் நிகழ்ந்தன.
12,000 ஆண்டுகளுக்கு முன்பாக இரானின் ஆரம்ப கால விவசாயிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்தடைந்தார்கள். இவர்கள் முதலாம் இந்தியர்களோடு கலந்து, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் விவசாயப் புரட்சியைச் செய்தார்கள். இது நடந்தது ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக. இதுதான் ஹரப்பா நாகரிகமாக உருப்பெற்றது.
இதற்குப் பிறகு 4,000 வருடங்களுக்கு முன்பாக கிழக்காசியாவிலிருந்து ஒரு இடப்பெயர்வு நடந்தது. அதன் மூலம் ஆஸ்ட்ரோ - ஏசியாடிக் மொழிகளான காஷி, முண்டாரி போன்ற மொழிகள் இந்தியாவிற்குள் வந்தன.
இதற்கு அடுத்தபடியாக நடந்த மூன்றாவது மிகப் பெரிய இடப்பெயர்வில் மத்திய ஆசிய ஸ்டெப்பி புல்வெளிகள், அதாவது தற்போதைய கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள், இவர்கள் மூலம் இந்தோ - ஆரிய மொழிகள் இந்தியாவிற்குள் வந்தன.
இந்திய மக்களை உருவாக்கிய இந்த நான்கு பெரும் இடப்பெயர்வுகளுமே நாம் இப்போது காணும் கலாசாரத்தை வடிவமைத்தவர்கள். தற்போதுள்ள இந்தியர்களில் எல்லோருமே இந்த மூதாதையர்களின் மரபணுவைக் கொண்டவர்கள். முடிவாகப் பார்த்தால், நாம் எல்லோருமே இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான். எல்லோருமே ஒன்றோடொன்றாகக் கலந்தவர்கள்" என தெரிவித்திருந்தார் டோனி ஜோசப்.












