தமிழ்நாட்டை பிரிக்க பரிசீலனையா? தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு இந்திய அரசு பதில் என்ன?

பட மூலாதாரம், LSTV SCREEN GRAB
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டமில்லை என்று மக்களவையில் தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் டி.ஆர். பாரிவேந்தர், மயிலாடுதுறை உறுப்பினர் எஸ். ராமலிங்கம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார்.
அதில் "அவ்வப்போது பல்வேறு தனி நபர்கள், அமைப்புகளால், புதிய மாநிலங்களை உருவாக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. புதிய மாநிலம் உருவாக்குவது என்பது விரிவான அம்சங்களையும் நம் நாட்டின் கூட்டாட்சி முறை மீது நேரடி தாக்கத்தையும் கொண்டது. அந்த வகையில் புதிய மாநிலத்தை உருவாக்கும்போது எல்லா வகையான அம்சங்களையும் அரசு கவனத்தில் கொள்ளும். அத்தகைய யோசனைகள் ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை," என்று கூறியுள்ளார்.
எப்படி தொடங்கியது சர்ச்சை?
சமீபத்தில் பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டபோது, அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் மாநில பாஜக தலைவருமாக இருந்த எல். முருகன் இணை அமைச்சராக இணைத்துக் கொள்ளப்பட்டார். பதவியேற்கும் நாளில், அவர் குடியரசு தலைவர் மாளிகையில் அளித்த தற்குறிப்பில் தமது சொந்த ஊரை நாமக்கல் என்பதற்கு பதிலாக 'கொங்கு நாடு' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கொங்கு நாடு என்பது தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சொல் வழக்கில் உள்ள மண்டலமாகும். மத்திய இணை அமைச்சராக பதவியேற்கும் ஒருவர் கொங்கு நாடு என தமது தற்குறிப்பில் குறிப்பிட்டதன் மூலம் அது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் நோக்கமாக இருக்கலாம் என்று தமிழ்நாட்டில் விவாதங்கள் கிளம்பின. பல தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் கொங்கு நாடு வாதங்கள் தீவிரமாக நடந்தன.
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சி இது என தமிழ்நாட்டில் ஆளும் கட்சி தரப்பும், கொங்கு நாடு கோரிக்கை வலுத்தால் பிறகு நாங்களும் மண்டல வாரியாக மாநிலத்தை பிரிக்கக் கோரும் முழக்கத்தை வெளிப்படுத்துவோம் என சில அமைப்புகளும் குரல் கொடுத்தன. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.
' க்ளெரிக்கல் மிஸ்டேக்'
இந்த நிலையில், கொங்கு நாடு சர்ச்சை தீவிரமான சில நாட்களுக்குப் பிறகு, தமது தற்குறிப்பில் தட்டச்சு பிழையால் கொங்கு நாடு என்ற வார்த்தை இடம்பெற்று விட்டது என்று முருகன் பதிலளித்தார். அத்துடன் கொங்கு நாடு முழக்கத்தை முன்வைத்த சில பாஜகவினரின் சர்ச்சை நடவடிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது மாநிலத்தை பிரிக்கும் கோரிக்கை, அங்குமிங்குமாக எதிரொலித்து வருகிறது.
இந்தப் பின்னணியிலேயே தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா, அப்படியென்றால் அந்த திட்டத்தின் நோக்கம் மற்றும் பின்னணி என்ன, தனி மாநில கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்த தனி நபர்கள் அல்லது அமைப்பு எது என தெரிவிக்குமாறு திமுக எம்.பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் கேட்டிருந்தனர்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தரப்பில் ஆரம்பம் முதலே எந்த பதிலும் வெளியிடவில்லை. தற்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயின் எழுத்துபூர்வ பதில் மூலம் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்ற தெளிவு கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை - என்ன நடந்தது?
- ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













