பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியுள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த விலை உயர்வு, சரிவடையாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் காங்கிரஸும் பாஜகவும் விலையேற்றத்துக்கு பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையில் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த செய்தியில், பெட்ரோல் விலை விவரம் பிரித்துக்காட்டப்பட்டு, பெட்ரோல் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு மோதி அரசு காரணம் அல்ல, மாநில அரசுகள்தான் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் வரியை விட மாநில அரசுகள் அதிக வரி விதிக்கின்றன. ஆகவேதான் நுகர்வோரை அடைவதற்குள் அதன் விலை மிகவும் அதிகமாகிவிடுகிறது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் ஒரு பலகை வைக்கப்பட வேண்டும். அதில் பெட்ரோல் வரி தொடர்பான இந்த தகவல் கொடுக்கப்பட வேண்டும் - அடிப்படை விலை - ரூ. 35.50, மத்திய அரசு வரி - ரூ .19, மாநில அரசு வரி - ரூ .41.55, விநியோகஸ்தர் - ரூ. 6.5, மொத்தம்- லிட்டருக்கு ரூ. 103."
இப்படி செய்தால் பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.
மாநில அரசு பெட்ரோல் விலையில் மிகப்பெரிய பங்கை வரி வடிவில் வசூலிப்பதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உண்மையை எப்படி அறிவது?
இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பெட்ரோல் இறக்குமதி நாடாகும் என்று OPEC (எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு) தெரிவிக்கிறது .இந்தியாவில் ஒரு நாளைக்கு 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. பொருளாதார காரணங்களால் தற்போது இதன் கிராக்கி, கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது..
பெட்ரோல் - ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதன் மீது விதிக்கப்படும் வரி, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். இதனுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் அல்லது குறையும். எனவே அதன் விலை, ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது.

பட மூலாதாரம், Social Media
எண்ணெய் விலை, நான்கு நிலைகளில் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்-
- சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை, சுத்திகரிப்பு நிலையத்தை அடைய சரக்கு கட்டணம் (கடல் வழியாக அனுப்பப்படும் பொருட்களின் வரி).
- டீலர் லாபம் மற்றும் பெட்ரோல் நிலையத்துக்கான பயணம்.
-பெட்ரோல் நிலையத்தை அடைந்ததும், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட கலால் வரி அதில் சேர்க்கப்படும்.
-இதனுடன் மாநில அரசுகள் வசூலிக்கும் மதிப்பு கூட்டு வரி (VAT) சேர்க்கப்படுகிறது.
மத்திய அரசு எவ்வளவு வரி விதிக்கிறது?
இப்போது கேள்வி என்னவென்றால், கலால் வரி என்ற பெயரில் மத்திய அரசு எவ்வளவு பணம் வசூலிக்கிறது?
தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 32ரூபாய் 90 பைசா.
2014 முதல் 2021 வரை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியிலிருந்து மத்திய அரசின் வருவாய் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களவையில் மத்திய அரசு இந்தத்தகவலை தெரிவித்தது.
2014 ஆம் ஆண்டில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ .9.48 ஆக இருந்தது. அது இப்போது லிட்டருக்கு ரூ .32.90 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை பற்றிய விரிவான விளக்கம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பொது மக்களிடம் இருந்து யார் எவ்வளவு வரி வசூல் செய்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
2021 ஜூலை 16 முதல் பொருந்தும் இந்தத்தரவுகள், பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ .41 என்று காட்டுகிறது.

பட மூலாதாரம், Indian Oil
இதில் சரக்குக் கட்டணம் (சரக்குக் கப்பல்கள் வரும்போது செலுத்தப்படும் வரி) லிட்டருக்கு 0.36 ரூபாய். 32.90 ரூபாய் கலால் வரி மத்திய அரசின் கணக்கிற்கு செல்லும். டீலரின் லாபம் ரூ. 3.85 இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பிறகு டெல்லி அரசு நிர்ணயித்த VAT ரூ .23.43 வசூலிக்கப்படுகிறது. இதனால் டெல்லியில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ .101.54 ஆனது.
டெல்லி அரசு பெட்ரோலுக்கு 30 சதவிகிதம் வாட் வரியை விதிக்கிறது. இது பெட்ரோல் மீதான கலால் வரி, டீலர் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் அதற்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
ஆனால் மத்திய அரசால் விதிக்கப்படும் கலால் வரியானது, பெட்ரோலின் அடிப்படை விலை, டீலரின் லாபம் மற்றும் சரக்கு கட்டணம் ஆகியவற்றுக்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
அரசு இதற்கு ஒரு சதவிகிதத்தை நிர்ணயிக்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொத்த தொகையை முடிவு செய்கிறது. ஜூலை 16 -ன் தரவுகளின்படி, தற்போது இது ரூ. 32.90 ஆகும்.
மாநில அரசு விதிக்கும் வரி எவ்வளவு?

பட மூலாதாரம், Indian Oil
மத்திய பிரதேச அரசு பெட்ரோலுக்கு அதிகபட்ச வாட் வரியை விதிப்பதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் ஜூலை 26 அன்று கூறினார். இது லிட்டருக்கு 31.55 ரூபாயாகும். அதே நேரத்தில், ராஜஸ்தான் அரசு டீசல் மீது அதிகபட்ச வாட் வரியை அதாவது லிட்டருக்கு 21.82 ரூபாயை விதிக்கிறது. அதாவது, பெட்ரோலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநில அரசு வசூலிக்கும் தொகையானது, மத்திய அரசின் கலால்வரியைக்காட்டிலும் குறைவாகவே உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள் மிகக் குறைவான VAT வசூலிக்கிறது. அங்கு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூ. 4.82 ஆகவும், டீசல் மீது லிட்டருக்கு 4.74 ரூபாயாகவும் உள்ளது.
மாநில அரசுகள் சில நேரங்களில் VAT உடன் வேறு சில வரிகளையும் சேர்க்கின்றன. அவற்றிற்கு பசுமை வரி, நகர விகித வரி போன்ற பெயர்கள் சூட்டப்படுகின்றன.
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் முக்கிய வருமான ஆதாரங்களாகும்.
உண்மை சரிபார்ப்பு: தற்போது முன்வைக்கப்படடுள்ள வாதம் தவறானது என்று எங்கள் உண்மை சரிபார்ப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசால் வசூலிக்கப்படும் கலால் வரி, எந்த ஒரு மாநிலமும் வசூலிக்கும் மதிப்பு கூட்டு வரியைவிட அதிகம். நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசே இதை ஒப்புக்கொண்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












