கொரோனா: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் நோய் எதிர்ப்புத்திறன் குறைய காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் 66 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மேற்கு மாவட்டங்களில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விட்டதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகரித்தபடியே உள்ளது. இதை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்பட பல மாவட்டங்களில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தடுப்பூசிகளும் தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையை விஞ்சிய விருதுநகர்
அதேநேரம், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட முதல் ஆய்வில் நோய் எதிர்ப்புத் திறன் என்பது, மாநிலத்தில் 31 சதவிகிதமாக இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இரண்டாவது ஆய்வில் 29 சதவிகிதமாக இருந்துள்ளது.
தற்போது மூன்றாம் கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை (Serosurvey)பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக்காக பல்வேறு பகுதிகளில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆய்வு முடிவில், தமிழ்நாட்டில் மொத்தமாக 66.2 சதவிகிதம் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 26,610 மாதிரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. முடிவில் 17,624 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக விருதுநகரில் 84 சதவிகிதமும் ஈரோட்டில் 37 சதவிகிதமும் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முதல்கட்ட ஆய்வின்போது 49 சதவிகித நோய் எதிர்ப்புத் திறன் இருந்துள்ளது. அதுவே இரண்டாம்கட்ட ஆய்வில் 28 சதவிகிதமாகக் குறைந்து 3 ஆம் கட்ட ஆய்வில் 58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மூன்றாம்கட்ட ஆய்வில் 67 சதவிகித நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது.
சென்னையில் நடந்த முதல்கட்ட ஆய்வில் 41 சதவிகிதமாக இருந்த நோய் எதிர்ப்புத் திறன், 49 சதவிகிதமாக இரண்டாம்கட்ட ஆய்வில் உயர்ந்தது. தற்போது மூன்றாம்கட்ட ஆய்வில் 82 சதவிகித அளவுக்கு எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. மதுரையில் 79 சதவிகிதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இதில், 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாக அதிகரித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதேநேரம், ஈரோட்டில் 37 சதவிகிதம் பேருக்கும் கோயம்புத்தூரில் 43 சதவிகிதம் பேருக்கும் திருப்பூரில் 46 சதவிகிதம் பேருக்கும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. மொத்தமாகக் கணக்கிட்டால், மேற்கு மாவட்டங்களில் 45 சதவிகிதம் அளவுக்கே நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதும் பொதுசுகாதாரத்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீரோ சர்வே முடிவுகள் சரியா?

பட மூலாதாரம், TN HEALTH DEPT
``பொது சுகாதாரத்துறையின் சீரோ சர்வே (Serosurvey) முடிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. எந்த அடிப்படையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன என்பது வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை. அதில் எத்தனை பேர் முன்கூட்டியே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர், எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்ற விவரம் வெளியாகவில்லை. தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள், வயது என தரம் பிரித்து வெளியிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்," என்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தை நடத்தி வரும் மருத்துவர் புகழேந்தி.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசியவர், ``ஈரோட்டில் 37 சதவிகிதம் நோய் எதிர்ப்புத் திறன் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 66.2 சதவிகிதம் பேருக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளதாகக் கூறுகின்றனர். சீரோ சர்வே எடுப்பதற்கு எந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்? யாருக்குத் தேவை என்பதை முன்வைத்து எடுக்கப்பட்டதா அல்லது தொற்றாளர்களை கணக்கில் வைத்து எடுக்கப்பட்டதா என தெரியவில்லை. ஒரு கிளஸ்டரில் இருந்து 30 பேர் தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்கின்றனர். அதை எந்த அடிப்படையில் சர்வே எடுத்தனர் என்பதில் எவ்வித தெளிவும் இல்லை.
குறிப்பாக, வைரஸை கண்டறிந்து அழிக்கும் புரதத்தை அளக்காமல் வைரஸின் உள்புறம் உள்ள உட்கருவில் உள்ள நோய் எதிர்ப்பு புரதத்தை அளப்பதோ அல்லது வைரஸின் வெளிப்புறத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் நோய் எதிர்ப்பு புரதத்தின் அளவை எடுப்பதால் மட்டுமே நோய் எதிர்ப்புத் திறன் ஏற்பட்டுள்ளதாகத் தெளிவாகக் கூற முடியாது. அவற்றைச் செய்திருந்தால் சரியான புள்ளிவிவரங்கள் கிடைத்திருக்கும்.
கோவை, ஈரோடு புறக்கணிப்பா?

பட மூலாதாரம், Getty Images
தவிர, எங்கே நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளதோ, அதனைக் கணக்கிட்டு தடுப்பூசி விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே சென்னையில்தான் அதிகப்படியான கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும்போது எங்கே தேவையோ அங்கு அதிகமாக கொடுத்திருக்க வேண்டும். சீரோ ஆய்வு முடிவுகளைப் பார்த்தால் கோவை, ஈரோட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை.
இனி வரும் நாட்களில் தடுப்பூசியை எங்கே அதிகமாகப் பயன்படுத்துவது என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகருக்கு அடுத்தபடியாக சென்னையில் 82 சதவிகிதம் அளவுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்துள்ளது. பிறகு ஏன் சென்னையில் அதிகப்படியான தடுப்பூசிகள் போடப்படுகிறது எனத் தெரியவில்லை. கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிகமான தடுப்பூசியை செலுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.
முன்மாதிரியான கேரளா
மேலும், ``கேரளாவில் அதிகப்படியான கொரோனா தொற்று உள்ளதாகக் கூறுகிறார்கள். அங்கு நடக்கும் நிலவரம் குறித்துப் பேசியுள்ள தேசிய கோவிட் தடுப்புக் குழுவின் உறுப்பினரான ககன்தீப் கான், `கேரளா முன்மாதிரியாக உள்ளது' என்கிறார்.
அந்த மாநிலத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ளனர். அங்கு பத்து மில்லியன் மக்களில் 4,587 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவே, தமிழ்நாட்டில் பத்து மில்லியன் பேரில் 2001 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
கேரளாவில் நாளொன்றுக்கு 4.5 லட்சம் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பரிசோதனைகள்தான் நடக்கின்றன. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டைவிட கேரளாவில் மக்கள் தொகை மிகவும் குறைவு. அங்கு இலக்கை குறிவைத்து பரிசோதனைகள் நடப்பதாக ககன்தீப் கான் கூறுகிறார்.
பிரைமரி கான்டேக்ட், குளோஸ் கான்டாக்ட் ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறிந்து அவர்கள் பரிசோதனை செய்கின்றனர். அதனால்தான், அவர்களால் அதிகப்படியானோரை கண்டறிய முடிகிறது.
ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தில், `கேரளாவில் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டால், அவர்கள் வழியாக ஆறு பேருக்குத்தான் கண்டறியப்படாமல் உள்ளது. அதுவே, தமிழ்நாட்டில் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டால், அவர் மூலமாக 26 பேர் கண்டறியப்படவில்லை' என தெரிவித்துள்ளது" என்கிறார் ஆதங்கத்துடன்.
மூன்றாவது அலைக்கான தொடக்கமா?

பட மூலாதாரம், Getty Images
``நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பால் என்ன நடக்கும்?" என பொதுசுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கொரோனா முதல் அலையும் இரண்டாம் அலையும் ஊரடங்கால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. அப்படியானால், ஊரடங்களை தளர்த்தினால் கொரோனா தொற்று பரவும் என்றுதான் அர்த்தம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வோர் அளவுகோல் இருந்தாலும் சராசரியாக 66 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படிப் பார்த்தால் இன்னமும் 3 கோடிப் பேருக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகாமல் இருக்கிறது என்று பொருள்.
பொதுவாக, எதிர்ப்பு சக்தி என்பது இரண்டு வழிகளில் வரும். ஒன்று தடுப்பூசி போட்டால் வரும். அடுத்ததாக, இயல்பாகவே தொற்று வந்தால் எதிர்ப்பு சக்தி வரும். சீரோ சர்வே முடிவுகள், எதிர்ப்புத் திறன் எவ்வளவு பேருக்கு உள்ளது என்பதை காட்டுகிறது. அதுவே, எவ்வளவு பேருக்கு இல்லை என்பதைப் பார்த்தால் அது மிகப் பெரிய எண்ணாக இருக்கிறது. இதன்மூலம், மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகப் பார்க்கலாம்.
அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் முகக்கவசம் அணிவது, காற்றோட்டமான இடத்தில் இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். சென்னையில் பத்து இடங்களில் உள்ள முக்கிய வணிக வளாகங்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதைத் தவிர்த்து ஏராளமான இடங்கள் உள்ளன. போரூரிலும் தாம்பரத்திலும் உள்ள பெரிய வணிக வளாகங்கள் எல்லாம் இந்தப் பட்டியலில் வரவில்லை. ஒரு தெருவை அடைப்பது பெரிதல்ல. தனித்தனியாக மக்கள் கூடும் இடங்கள் அதிகளவில் உள்ளன. வரும் நாள்களில் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்திக் கொண்டே போக வேண்டும்" என்கிறார்.
``தென்மண்டலத்தைவிட மேற்கு மண்டலத்தில் நோய் எதிர்ப்புத் திறன் குறைவு ஏன்?" என்றோம். `` அந்தப் பகுதிகளில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதற்குக் காரணம், இயற்கையாக பாதிக்கப்படாதவர்கள், தடுப்பூசி போடாதவர்கள் அதிகப்படியாக உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பகுதிகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கேரளா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார்.
பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
``மேற்கு மண்டலங்களில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன?" என பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அந்தப் பகுதிகளில் கூடுதல் தடுப்பூசிகளை விநியோகிக்க இருக்கிறோம். அங்கு கூடுதல் பாதிப்புகள் வருகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறோம். சீரோ சர்வே முடிவுகளின்படி, அந்தப் பகுதிகளில் கவனம் செலுத்த இருக்கிறோம்" என்கிறார்.
``அங்கு தடுப்பூசிகளைக் குறைவாகப் போட்டதுதான் எதிர்ப்புத் திறன் குறைவுக்குக் காரணமா?" என்றோம். `` அப்படியெல்லாம் இல்லை. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூருக்கு அதிகப்படியான தடுப்பூசிகளை கொடுத்துள்ளோம். மேற்கு மண்டலங்களில் கூடுதல் தடுப்பூசி டோஸ்களை விநியோகிக்க உள்ளோம். தவிர, நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகியுள்ளது என்பது தொடர்பான அறிக்கையே 2 நாளைக்கு முன்புதான் வெளியானது. மூன்று மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது என யாராலும் கணிக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில் சென்னையில் தொற்று அதிகமானதால் தடுப்பூசிகளை அதிகமாக விநியோகித்தோம்," என்கிறார்.
``சீரோ சர்வே ஆய்வில், வயது, தொற்றால் பாதிக்கப்பட்டவரா, தடுப்பூசி போட்டுக் கொண்டவரா என்ற விவரங்கள் எல்லாம் சரியாகச் சொல்லப்படவில்லை என்கிறார்களே?" என்றோம். ``அடிப்படையில் நாங்கள் ஐ.சி.எம்.ஆரால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு நிறுவனம் கிடையாது. நாங்கள் தெருவில் நின்று வேலைகளைச் செய்பவர்கள். எங்கள் நிலைக்கு ஏற்ப சீரோ சர்வேயை எடுத்துள்ளோம். விரைவில் முழுமையான ஆய்வை நடத்துவோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 18 மணி நேரத்துக்கும் மேல் எங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஐ.சி.எம்.ஆர் போல ஆய்வுகளை நடத்துவதற்கு அவகாசம் வேண்டும். அதையும் நிச்சயமாக செய்வோம்" என்றார்.
பிற செய்திகள்:
- "வாழ விருப்பம் இல்லை, குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்"- வருத்தத்தில் யாஷிகா ஆனந்த்
- சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை - என்ன நடந்தது?
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
- மீரட்டில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக முஸ்லிம் பெண் புகார்
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












