தி.மு.கவோடு ஏன் நெருங்குகிறது பா.ம.க? அ.தி.மு.கவை குழப்பிய 3 சம்பவங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தி.மு.க. அணியுடன் பாட்டாளி மக்கள் கட்சி நெருங்கி வருவதாகவும், "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அணியில் அதிகப்படியான இடங்களைப் பெறுவதற்கான உத்தியாகவும் இது இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
என்ன நடக்கிறது அ.தி.மு.க-பா.ம.க கூட்டணியில்?
காட்சி 1:
ஜூலை 25, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 83 ஆவது பிறந்தநாள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ராமதாஸை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த ராமதாஸ், ` உங்கள் தந்தை என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட அவரைவிட்டால் வேறு யாருமில்லை என அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் இடத்தை நீங்கள் அடைய வேண்டும்' என ஸ்டாலினை வாழ்த்தியதாக அறிக்கை ஒன்றில் ராமதாஸ் குறிப்பிடுகிறார்.
முதலமைச்சரின் வாழ்த்துக்கு பதில்தானே தெரிவித்தார் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தெரிவித்த வாழ்த்துகளுக்கு `நன்றி' என ஒற்றை வரியோடு ராமதாஸ் முடித்துக் கொண்டார் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
காட்சி 2:
`கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை தி.மு.க அரசு நிறைவேற்றுமா?' என்ற கேள்வி எழுந்தது. `நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அனைத்தையும் ஆராய்ந்த பிறகே முதல்வர் முடிவெடுப்பார்' என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் பா.ம.க எம்.எல்.ஏக்கள் கேள்வியெழுப்பியபோது, 'தமிழ்நாடு அரசு ஆலோசித்து முடிவெடுக்கும்' என்றார் முதலமைச்சர்.
அடுத்து வந்த நாள்களில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதமும் சீர் மரபினருக்கு 7 சதவிகிதமும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவிகிதமும் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த மருத்துவர் ராமதாஸ், 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்' என டுவிட்டரில் பதிவிட்டார். கூடவே, இடஒதுக்கீடு சட்டத்தை இயற்றிக் கொடுத்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். ராமதாஸின் கோரிக்கைக்கு தி.மு.க செவிசாய்த்ததாக இந்தச் சம்பவம் பார்க்கப்பட்டது.
காட்சி 3:
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவுடன் கருணாநிதி உருவப் படம் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த விழாவில், `அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்க வேண்டும்' என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டும் அவர் பங்கேற்கவில்லை. அ.தி.மு.கவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் விழாவைப் புறக்கணித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை அழைத்தும் அவர் பதில் அளிக்காமல் பங்கேற்க மறுத்தது தொடர்பாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் நீண்ட விளக்கமும் கொடுத்தார். அதேநேரம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏக்களும் விழாவில் கலந்து கொண்டனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள 9 மாவட்டங்களில், வட தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பா.ம.கவின் தயவு, அ.தி.மு.கவுக்கு மிக அவசியம் என்று பார்க்கப்படுகிறது. `தி.மு.கவுடன் நெருங்குவது போன்ற தோற்றத்தைக் காட்டினால் அ.தி.மு.கவிடம் உள்ளாட்சியில் அதிக இடங்களைப் பெறுவதற்கு பா.ம.க திட்டமிடுகிறதா?' என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
- மேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்கள்தான். `குட்கா விற்பனையை தடுக்க தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார் . இது மிகவும் சரியான நடவடிக்கை' என அரசைப் பாராட்டவும் ராமதாஸ் தவறவில்லை. மதுரையில் பென்னிகுயிக் நினைவிட இல்ல சர்ச்சையின்போதும், `மதுரை பாண்டி கோயில் உள்ளிட்ட பல இடங்களில் அரசு நிலங்கள் உள்ளன. அங்கு இப்போது திட்டமிடப்பட்டதை விட இன்னும் பிரும்மாண்டமாக நூலகம் அமைக்கலாம். அதற்காக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என மென்மையாகவே ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
பா.ம.கவின் தயவு தி.மு.கவுக்குத் தேவையா?
அந்த வரிசையில், ``தி.மு.கவை நோக்கி பா.ம.க வருகிறதா?" என தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அனைவருக்குமான இயக்கமாக தி.மு.க இருக்கிறது. சாதிய அடிப்படையிலோ சாதிக் கட்சிகளை பார்த்தோ செயல்பாடுகளை வைத்துக் கொள்ளும் கட்சி அல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தயவில் ஒரு கட்சி வெற்றி பெற முடிந்ததா என்றால், சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 தேர்தல்களில் அது நிரூபிக்கப்பட்டுவிட்டது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` தமிழ்நாட்டில் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அனைத்து மக்களுக்கான இயக்கமாக தி.மு.க இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சாதியைப் பார்த்து வாக்களிக்கவில்லை என்பதை நன்றாகவே எடுத்துக் காட்டியது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சேர வேண்டிய சமூக நீதியை கொண்டு சேர்ப்பது என்பது வாக்குகளுக்காக அல்ல, அதை அந்த மக்களின் நலனுக்கானதாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்குத் தேர்தல் ஆதாயம் என்பது அவசியமில்லை.
தி.மு.க அரசோடு பா.ம.க இணக்கமாக வருவதாகக் கூறுவதெல்லாம் ஓர் அரசியல்ரீதியான பார்வை. எந்தக் கட்சியையும் புறந்தள்ளும் வழக்கம் எங்களுக்கு இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றவுடன், `வாக்களிக்காதவர்களுக்கும் உழைப்போம்' என முதலமைச்சர் கூறினார். தொடர்ந்து ஒவ்வொரு பிரச்னையிலும் அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்த பிறகுதான் செயல்படுத்துகிறார். அது கொரோனா தொற்றாக இருந்தாலும் சரி.. காவிரி விவகாரமாக இருந்தாலும் சரி. அப்படியிருக்கும்போது எங்களுடன் பா.ம.க நெருங்கி வருகிறது என்பதெல்லாம் அரசியல்ரீதியான கருத்துதான். மக்களுக்கான நலத்திட்டங்களை அவர்கள் பாராட்டுவது என்பது இயல்பான ஒன்றுதான்" என்கிறார்.
ராமதாசுக்கு தெரியும்
இதுதொடர்பாக, அ.தி.மு.க மாநில செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எங்களோடு பா.ம.க பயணித்தது. தற்போதும் அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். சில கருத்துகளைக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் சொல்வதாலேயே அவர்கள் வெளியேறுகிறார்கள் என்று கூறுவதையெல்லாம் மாயத்தோற்றமாகத்தான் பார்க்கிறேன். மற்றபடி, எங்களின் கவனம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நோக்கியே இருக்கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் வன்னிய சமூக மக்களுக்காக ஒரு நிலைப்பாட்டை அ.தி.மு.க எடுத்தது. இவையெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகவே தெரியும்" என்கிறார்.
``தி.மு.க கூட்டணியை பா.ம.க நாடுகிறதா?" என பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரக் குழு மாநிலத் தலைவர் எதிரொலி மணியனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` தற்போது தோழமைக் கட்சிகளோடு எங்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் இல்லை. இடஒதுக்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க உரிய முறையில் செய்து கொடுத்தது. அதனை புதுப்பிக்கும் வகையில் அரசாணை வெளியிட்ட தி.மு.க அரசை பாராட்டுகிறோம். இன்றைய சூழலில் தி.மு.கவோடு செல்வதற்கு வாய்ப்பில்லை.
இடஒதுக்கீடு என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். இதனை மாற்ற வேண்டும் என்றாலும் சட்டமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும். ஒரு சமூகத்தைப் பகைத்துக் கொள்வதற்கு யாரும் விரும்புவதில்லை. யார் என்ன சொன்னாலும் அ.தி.மு.க அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை யாராலும் நீக்க முடியாது. அதனை செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். இதை வைத்து தி.மு.க, பா.ம.க கூட்டணி உருவாகி வருகிறது எனப் பேசுவதெல்லாம் ஏற்புடையதல்ல" என்கிறார்.
குழப்பத்தை ஏற்படுத்துகிறதா தி.மு.க?
``மருத்துவர் ராமதாஸின் செயல்பாடுகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது போதுமானதாக இல்லை என்பதுதான் பா.ம.கவின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டதும், அதனை வரவேற்று ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டார். இதன்மூலம், அ.தி.மு.க அணியில் குழப்பங்களையோ பிரிவையோ ஏற்படுத்தும் நோக்கத்தில் தி.மு.க இருக்கலாம்.
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு, ராமதாஸ் அளித்த நீண்ட பதிலையும் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்க வேண்டியுள்ளது. இது தி.மு.க பக்கம் பா.ம.க நெருங்கி வருவதையே காட்டுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வடக்கில்தான் வருகின்றன. அங்கு அதிகப்படியான இடங்களை அ.தி.மு.க கூட்டணியில் பெறுவதும் நோக்கமாக இருக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலில் சில எம்.பிக்களைப் பெற வேண்டிய தேவை இருப்பதால், `எந்தப் பக்கம் இருந்தால் லாபம்' என்பதையும் பா.ம.க கணக்கு போடத்தான் செய்யும். கூட்டணிக் கணக்குகள் எல்லாம் தேர்தல் நெருக்கத்தில் தெரிய வரும்" என்கிறார் சிகாமணி.
பிற செய்திகள்:
- இந்திய ஹாக்கியின் 41 ஆண்டு பதக்க தாகம் தணிந்தது எப்படி? முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பேட்டி
- ரவிக்குமார் தஹியா: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளி வென்ற மல்யுத்த வீரன் யார்?
- டெல்லியை உலுக்கும் 9 வயது சிறுமியின் மரணம்: 'பாலியல் வல்லுறவு என பெற்றோர் புகார்'
- நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்க வல்லவர் சரத் பவாரா மமதா பானர்ஜியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












