வன்னியர் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு - தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பட மூலாதாரம், Hindustan Times
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனை சட்டசபையில் அறிவித்த அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ` இது தற்காலிகமானதுதான் . சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு மாற்றியமைக்கப்படும்' என்றார்.
அதாவது, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு தி.மு.க அரசு வழங்கிய 20 சதீத இடஒதுக்கீட்டில் இருந்தே வன்னியர் சமூகத்துக்கு மட்டும் தனியாக 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து மதுரை பாப்பாரப்பட்டியை சேர்ந்த போ.அபிஷ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேநேரம், 10.5 சதவிகித இடஒதுக்கீட்டில் தென்மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாக அ.தி.மு.க தரப்பில் இருந்தே குரல்கள் எழுந்தன.
`இந்தச் சட்டம் தற்காலிகமானதுதான்' என முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `சட்டத்தில் தற்காலிகம், நிரந்தரம் என்றெல்லாம் எதுவும் இல்லை' என்றார். இந்நிலையில், சந்தீப் குமார், முத்துக்குமார் ஆகியோர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS TWITTER
இதன்மீதான விசாரணை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விவகாரம். ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும். உள் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றார்.
இதனைக் கேட்ட நீதிபதி நாகேஸ்வர ராவ், `இந்தியாவிலேயே 69 சதவிகித இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதுதொடர்பான வழக்கில்கூட இத்தனை ஆண்டுகள் ஆகியும் இறுதி முடிவு வரவில்லை.
இந்த வழக்கில் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகிவிட்டு அங்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை பார்த்துவிட்டு வாருங்கள்' என்றார். ஆனாலும், மனுதாரர் தரப்பில் ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை சுட்டிக் காட்டிவிட்டு, `உள் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ` வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க முடியாது. இதுதொடர்பாக மதுரை அபிஷ்குமார் தாக்கல் செய்த மனுவோடு இந்த வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












