சென்னை ஐ.ஐ.டி.யில் எரிந்த நிலையில் இளைஞர் உடல் கண்டெடுப்பு

ஐஐடி கொரோனா

பட மூலாதாரம், Madras IIT

சென்னை ஐ.ஐ.டி.யில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யார் இவர்? என்ன நடக்கிறது ஐ.ஐ.டி.யில்?

சென்னை கோட்டூர்புரத்தில் ஐ.ஐ.டி. செயல்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் விடுதியில் மட்டும் மாணவர்கள் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்துக்கு பயிற்சியாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸ் விசாரணையில், இறந்து கிடந்த நபர் பற்றிய விவரங்கள் உடனே தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் (22) என்பது தெரியவந்தது.

பி.டெக் பட்டதாரியான இவர் ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் ஆய்வுத் திட்ட உதவியாளராக (Project Associate) ஐ.ஐ.டியில் சேர்ந்துள்ளது தெரியவந்தது. இவரது தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியபடியே ஐ.ஐ.டிக்கு வந்து சென்றுள்ளார். நேற்று காலை கல்லூரிக்கு வந்தவர், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, உன்னிகிருஷ்ணன் வாடகைக்குக் குடியிருந்த வீட்டில் இருந்து 11 பக்க அளவில் கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், ` நான் என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, கேரளாவில் உள்ள அவரது உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அவர் எப்படி இறந்தார், அல்லது கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாதிப் பாகுபாடு குறித்த புகார்

இதற்கு முன்னதாக, கடந்த 1 ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த விபின் என்பவர் தனது பதவியில் இருந்து விலகுவதாகக் கூறியிருந்தார். `ஐ.ஐ.டியில் சாதிப் பாகுபாடு நிலவுவதால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும்' என்று ஐ.ஐ.டி பேராசிரியர்களுக்கு இமெயிலில் கடிதம் அனுப்பியிருந்தார் அவர்.

இந்நிலையில், உன்னிகிருஷ்ணனின் மரணம் ஐ.ஐ.டி வளாகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா லத்தீஃப் என்ற மாணவி, மத ரீதியாக தன்னை பேராசிரியர் ஒருவர் துன்புறுத்தியதாகக் கூறி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஐஐடி

பட மூலாதாரம், FACEBOOK

சாதிப் பாகுபாடு குற்றச்சாட்டு, மர்ம மரணம் ஆகிய இரு சம்பவங்கள் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக, அங்கு பணிபுரியும் பேராசிரியர் ஒருவரிடம் பேசியபோது, `` உன்னிகிருஷ்ணன் மரணத்துக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சாதிப் பாகுபாடு உள்ளதாக விபின் கூறியதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது எனத் தெரியவில்லை. அவருக்கு வேறு வேலை கிடைத்துவிட்டதால் பணியில் இருந்து விலகினார்" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :