வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMI TWITTER

படக்குறிப்பு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து தென்னாடு மக்கள் கட்சியின் நிறுவனரான கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கியுள்ள நிலையில், அந்தக் கணக்கெடுப்பு முடியாமல் எப்படி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என அந்த மனுவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும் 68 ஜாதிகளைச் சேர்த்து அவர்களுக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிவிட்டு, வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 22 ஜாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் எண்ணம் இருந்திருந்தால், முன்கூட்டியே அதனைச் செய்திருக்கலாம் எனவும் தற்போது இயற்றப்பட்டிருக்கும் சட்டம் தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு முடியாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடும்படி தனது மனுவில் கணேசன் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இதில் 19 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் வழங்கப்படுகிறது. 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்கப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில மணி நேரங்களுக்கு முன் பிப்ரவரி 26ஆம் தேதி பிற்பகலில் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற ஜாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.

அதிமுக - பாமக கூட்டணி உறுதி; பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS TWITTER

படக்குறிப்பு, கோப்புப்படம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார். கூறப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது." என்று கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சி. வளர்மதி இதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய அனுமதி கோரினார். பிறகு சட்ட முன் வடிவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்குப் பிறகு துணை முதலமைச்சரும் பேரவையின் முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். "இன்று அறிமுகம் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களையும் அரசின் கீழ் வரும் நியமனங்கள் அல்லது பதவிகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி இட ஒதுக்கீடு செய்தல் சட்ட முன்வடிவு இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்று அந்தத் தீர்மானம் கூறியது.

இதையடுத்து அந்த சட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வன்னியர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும் அதனுடன் தொடர்புடைய வன்னியர் சங்க அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தன. சமீபத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனருடன் தமிழக அமைச்சர்கள், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், இந்த இடஒதுக்கீடு கோரிக்கையை டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் வலியுறுத்தினர்.

உள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்ட மறுநாளே அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: