ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு வெளியே சாதிய கோஷம் #Groundreport

பட மூலாதாரம், ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES
- எழுதியவர், துருவ் மிஷ்ரா
- பதவி, ரோஷனாபாத், ஹரித்வாரில் இருந்து பிபிசி இந்திக்காக
டோக்யோ ஒலிம்பிக்கில் அர்ஜென்டினாவிடம் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோற்றபோது, வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு வெளியே சாதிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய ஒருவரை ஹரித்வார் போலீசார் கைது செய்தனர்.
இவர்,எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஹரித்வாரின் மூத்த காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
வந்தனா கட்டாரியாவின் வீடு ரோஷனாபாத் கிராமத்தின் குறுகிய தெருக்களில் உள்ளது. காரில் அவரது வீட்டை அடைய முடியாத அளவிற்கு, தெரு அத்தனை குறுகலானது.
அவரது வீட்டை அடைய, வெளியே பிரதான சாலையில் காரை நிறுத்த வேண்டும். பின்னர் சுமார் 300-400 மீட்டர் நடந்தால் அவரது வீட்டை அடையலாம். சுற்றியுள்ள பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த பகுதியில் வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முகவரியைக் கேட்டபோது, பெரும்பாலான மக்களுக்கு அவரது பெயர்கூடத்தெரியவில்லை.

பட மூலாதாரம், DHRUV MISHRA
பட்டாசுகள் வெடிக்கப்பட்டதா?
"மாலை சுமார் 5 மணி இருக்கும். நாங்கள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தோம், அப்போது பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. நாங்கள் கீழே சென்றோம். நாங்கள் கேட்டபோது, பட்டாசுகள் வெடித்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று வந்தனா கட்டாரியாவின் தாயார் பிபிசியிடம் தெரிவித்தார்.
வந்தனாவின் தாயார் ரத்த அழுத்த நோயாளி. நாங்கள் அவரை சந்தித்தபோது, அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் மேலும் பேச மறுத்துவிட்டார்.
வந்தனாவின் மூத்த சகோதரர்களில் ஒருவரான லாக்கன் சிங் கட்டாரியா, பிபிசியுடன் பேசுகையில், "நாங்கள் அனைவரும் இங்கே வீட்டில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தோம். பல ஊடக நபர்களும் உடனிருந்தனர். அணி தோற்றவுடன் எங்கள் வீட்டின் அருகே ஒரு வீட்டிலிருந்து பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. எங்கள் மூத்த சகோதரர் இதையெல்லாம் கேட்டு, விசாரிக்குமாறு சொன்னார்," என்று குறிப்பிட்டார்.
"நாங்கள் கீழே சென்றபோது, அங்கு பெரும் கூட்டம் இருப்பதைக் கண்டோம். அங்கு பலர் 'அவர்கள் பட்டாசுகளை வெடிக்கிறார்கள், என்ன செய்வது?' என்று கேட்டார்கள். பிறகு இரண்டு காவலர்கள் அங்கு வந்தனர். நடந்த விஷயம் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விக்கி பால் (முழு பெயர் விஜய்பால்)-ஐ உடன் அழைத்துச் சென்றனர்,"என்று லாக்கன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், DHRUV MISHRA
மறுபக்கம்
வந்தனா கட்டாரியாவின் வீட்டிலிருந்து விஜய்பாலின் வீடு சுமார் 40 மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த நேரத்தில் அவரது இரண்டு சகோதரிகளும் வீட்டில் இருந்தனர். இருவரும் மிகவும் பயந்துபோயிருந்தனர். அவர்கள் கதவைத்திறக்கவில்லை. நாங்கள் அவர்களிடம் பேச முயன்றபோது, "நீங்களும் அவருடைய (வந்தனா கட்டாரியா) வீட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் அந்த வீட்டிலிருந்து வருவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் உங்களுடன் பேசமாட்டோம்,"என்று ஒரு சகோதரி கூறினார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து கைது செய்யப்பட்ட விஜய்பாலின் மூத்த சகோதரி எங்களுடன் பேச ஒப்புக்கொண்டார்.
"என் சகோதரர் மாட்டிவிடப்பட்டுள்ளார். வந்தனா கட்டாரியாவின் சகோதரர்கள் என் குடும்பத்துடன் முன்பு கூட சண்டையிட்டனர்." என்று கூறிய அவர் அடிதடி சண்டையின் சில வீடியோக்களையும் எங்களுக்கு காட்டினார்.
தங்கள் தரப்பைக்கேட்க இதுவரை எந்த ஒரு ஊடகவியலாளரும் தங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஊடக நபர்கள் அனைவரும் வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்குச் சென்று , பின்னர் அங்கிருந்து திரும்பிவிடுகின்றனர் என்றார் அவர்.
விஜய்பாலின் தாயார் கவிதா பால் சட்டபூர்வமான நடைமுறைகளை முடித்த பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வீட்டிற்கு வந்தார்.
பட்டாசுகளை வெடித்த குற்றச்சாட்டு குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "என் மகன் அன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் காய்ச்சல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப்பட்டார். அதனால் அவர் அறைக்குள் படுத்திருந்தார். திடீரென்று எங்கள் வீட்டின் மொட்டைமாடியில் பட்டாசுகள் வெடித்தன.. நாங்கள் அங்கு ஓடினோம்,"என்றார்.
"பின்னர் விஜய்பாலின் தந்தைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தோம்.அந்த நேரத்தில் போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்து என் மகனை அழைத்துச் சென்றனர். இவ்வளவு சீக்கிரம் போலீசார் வருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?" என்று அவர் வினவினார்.
உங்களுடைய கூரையில் இதுபோல பட்டாசுகளை யார் வெடிக்க முடியும் என்று நாங்கள் விஜய் பாலின் தாயிடம் கேட்டோம், மொட்டை மாடி உங்களுடையது , அப்படியிருக்கும்போது வேறு யார் பட்டாசுகளை வெடிக்க முடியும்?
அதற்கு பதிலளித்த அவர் "எங்கள் மொட்டைமாடி ஒன்றுடன் ஒன்று ஒட்டிய நிலையில் உள்ளது.. வந்தனா கட்டாரியாவின் குடும்பத்துடன் எங்களுக்கு ஒரு பழைய பகை உள்ளது. எங்களுக்குள் உள்ள சண்டையை மேலும் அதிகரிக்க யாராவது இந்த செயலை செய்திருக்கலாம்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், DHRUV MISHRA
அக்கம்பக்கத்து மக்களிடம் இதுபற்றி தகவல் பெற முயன்றபோது, பெரும்பாலான மக்கள் இந்த விஷயம் குறித்து பேசுவதை தவிர்த்தனர்.
சாதிவெறி அவதூறுகள்?
இந்த வழக்கில், விஜய்பால் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய்பால் சாதி வெறி வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் `சாதிவெறியர்’ என்று கூறப்படுவது குறித்து வந்தனாவின் சகோதரர் லாகனிடம் பேசியபோது, "இதில் எஸ்சி/எஸ்டி சட்டத்திற்கு எந்தப்பங்கும் இல்லை. இங்கு சாதி வெறி வார்த்தை ஒரு பிரச்னை அல்ல. சிலர் அதை கிளப்பிவிட்டுள்ளனர். பிரச்னை பட்டாசு வெடிப்பது தொடர்பானது மட்டுமே." என்றார்.
ஆனால் இந்த முழு விஷயத்திலும், வந்தனா கட்டாரியாவின் மூத்த சகோதரர் சந்திரசேகர் கட்டாரியா, சாதிவெறி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக எழுத்துமூலமான புகார் அளித்துள்ளார். ஹரித்வாரின் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) இதை பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
போலீஸ் தரப்பு

பட மூலாதாரம், DHRUV MISHRA
ஹரித்வார் எஸ்எஸ்பி செந்தில் ஆவுடை கிருஷ்ண ராஜ் , பிபிசியுடன் பேசிய போது, "வந்தனா கட்டாரியாவின் சகோதரர் சந்திரசேகர் கட்டாரியாவின் எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டது. அதன் கீழ் நடவடிக்கை எடுத்து, நாங்கள் பிரிவு 504 (தூண்டுதல்) மற்றும் எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் , முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தோம். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது. " என்றார்.
வந்தனா கட்டாரியாவின் மூத்த சகோதரர் சந்திரசேகர் கட்டாரியா நாள் முழுவதும் வீட்டில் இல்லை. அவர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது, சாதி வார்த்தைகளைப் பயன்படுத்திய விஷயம் எங்கிருந்து வந்தது என்று அவரிடம் விசாரிக்க முயற்சித்தோம்.
இதற்கு பதிலளித்த சந்திரசேகர் கட்டாரியா, "நாங்கள் தலித் சாதியிலிருந்து வந்தவர்கள், இது அனைவருக்கும் தெரியும். எங்களால் எங்கள் சாதியை மாற்ற முடியாது. சாதி வார்த்தைகளைச் சொல்லி அவதூறாக பேசினார் என்பது பற்றி நாங்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் சொல்கிறார்கள். நீங்கள் போய் அவர்களிடம் கேளுங்கள். 'வந்தனா கட்டாரியா முர்தாபாத்'(ஒழிக) போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. இது ஏன் செய்யப்படுகிறது, இந்தப்பகைமை உணர்வு ஏன்? "என்று அவர் வினவினார்.
பழைய பகை மற்றும் இருதரப்பிலும் எழுப்பப்பட்ட கோஷங்கள்
விஜய்பாலின் சகோதரிகளால் காட்டப்பட்ட சண்டைகளின் வீடியோக்கள் பற்றி சந்திரசேகரிடம் கேட்கப்பட்டபோது, "இவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். அவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்கள். நாங்கள் யாருக்கும் பயப்படமாட்டோம், நாங்கள் முசாஃபர்நகரைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அங்கு செய்தது போலவே இங்கும் செய்வோம் என்று கூறுகிறார்கள். என்னை கொன்றுவிடுவதாக கூட இவர்கள் மிரட்டியுள்ளனர்," என்கிறார்.
மறுபுறம், விஜய்பாலின் தாயார் கவிதா சாதி வார்த்தைகளை தாங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார். வந்தனா கட்டாரியாவின் சகோதரர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே சாதி பெயரை கொண்டு `ஒழிக` கோஷங்களை எழுப்பியதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுபற்றி தகவல் பெற வந்தனாவின் உறவினர் ஒருவரிடம் நாங்கள் பேசியபோது, 'நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு வெளியே கோஷங்களை எழுப்பினோம்' என்று ஒப்புக்கொண்டார்.
இதுமட்டுமல்லாமல், அவர் ஒரு வீடியோவையும் காட்டினார். அதில் சிலர் விஜய்பாலின் வீட்டின் முன் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
தலித் அமைப்புகள்போராட்டம்
இதற்கிடையில், தலித் அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு தொடர்ந்து வருகிறார்கள். வந்தனா கட்டாரியாவுக்கு ஆதரவாக பலர் போஸ்டர் பேனர்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

பட மூலாதாரம், DHRUV MISHRA
கோஷங்களை எழுப்பும் போது பட்டாசுகளை வெடித்தவர்களுக்கு எதிராக தேசத்துரோகம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோருகின்றனர்.
ஹரித்வாரில் உள்ள ஜப்ரெடாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேஷ்ராஜ் கர்ன்வாலும் வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு வந்தார். மேலும் அவர் எஸ்சி-எஸ்டி சட்டத்துடன் கூடவே தேசத்துரோகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசினார்.
"அவர் இது போன்ற ஒரு கேவலமான செயலை செய்துள்ளார். இது விசாரணைக்குரிய விஷயம் என்றாலும், எந்த அப்பாவியும் சிக்கக்கூடாது. எந்த அப்பாவியும் சிறைக்கு செல்லக்கூடாது. ஆனால் குற்றவாளி தப்பிக்கக் கூடாது. "என்று பாஜக எம்எல்ஏ தேஷ்ராஜ் கர்ன்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












