ஒலிம்பிக்கில் ஏன் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை?

கிரிக்கெட் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் மைதானம்

கிளர்ந்தெழும் உணர்ச்சிகள், வாழ்வா சாவா என்பதாக நடக்கும் ஆட்டங்கள், நாட்டின் மானத்தைக் காப்பாற்றப் போராடும் வீரர்கள் என்று டோக்யோ ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியர்கள் மனதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்தியர்கள் கூகுளில் தேடும் ஒலிம்பிக் தொடர்பான கேள்விகளில் முக்கியமானது - "ஏன் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இல்லை" என்பது.

இந்த ஒலிம்பிக்கில் கராத்தே, மலையேறுதல், நீர்ச்சறுக்கு போன்ற சில புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதால், ஏன் கிரிக்கெட் இல்லை என்ற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. 2008ல் பெய்ஜிங் ஒலிம்பிக் நடந்தபோது பேஸ்பால் அதில் சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் புதுப்புது விளையாட்டுகள் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவது வழக்கம். 2024ல் பாரீசில் நடக்கவிருக்கிற ஒலிம்பிக்கில் ப்ரேக் டான்ஸ் சேர்க்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

சியர் லீடிங் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக சேர்க்கப்படவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை எதிர்காலத்தில் அது நிறைவேற்றப்படலாம். சியர் லீடிங், பேஸ்பால், ஸ்கேட்டிங், நீர்ச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் எல்லா நாடுகளிலும் விளையாடப்படுபவை அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவை பெரும்பாலும் அமெரிக்கர்களுக்குப் பிடித்தமானவை. சில நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் இந்த விளையாட்டுகள் சேர்க்கப்படுகின்றன என்றால், ஏன் இன்னும் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை?

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இல்லாதது நல்லதுதான் என்றும், இந்த காலத்திலாவது கிரிக்கெட் அல்லாத வேறு விளையாட்டுகளில் இந்தியர்கள் கவனம் செலுத்தட்டும் என்றும் சிலர் சொல்கிறார்கள். அது ஒரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

அதே நேரம் இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதால் நம்மால் நிச்சயமாக பதக்கங்கள் வெல்ல முடியும் எனவும் பலர் நினைக்கிறார்கள்.

இந்த வாதங்கள் சரியா தவறா என்பது ஒருபுறம் இருந்தாலும், கிரிக்கெட் இருக்கவேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி நாம் விவாதிக்கவில்லை. கிரிக்கெட் ஒலிம்பிக்கில் விளையாடப்பட்டிருக்கிறதா? இல்லை என்றால் ஏன் அது தவிர்க்கப்பட்டது? கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கும் முயற்சிகள் நடந்தனவா? என்பதே நம் முன் உள்ள கேள்விகள்.

இரண்டே அணிகள், ஒரே ஆட்டம்

1896ல் முதன் முதலில் ஒலிம்பிக் விளையாட்டு தொடங்கப்பட்டபோது கிரிக்கெட் ஒரு ஆட்டமாக சேர்க்கப்பட இருந்தது. ஆனால் விளையாட எந்த அணியும் இல்லாததால் அது ரத்து செய்யப்பட்டது. 1900ல் நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது. கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத பிரான்சின் பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன.

அந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 19 விளையாட்டுகள் இருந்தன. நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், ஃப்ரான்ஸ் ஆகிய அணிகள் இருந்தன. திடீரென்று நெதர்லாந்தும் பெல்ஜியமும் விலகிக்கொண்டதால், மீதி இரண்டு அணிகளும் ஒரே ஆட்டம் விளையாடின, அதுவே இறுதி ஆட்டமாக அறிவிக்கப்பட்டது.

கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர என்ன தடை?

அந்த ஆட்டத்தின் விதிகள் சற்றே வித்தியாசமானவை. ஒரு அணிக்கு 12 வீரர்கள் இருந்தார்கள். வழக்கமான ஐந்து நாள் டெஸ்ட் போட்டியோடு ஒப்பிடும்போது இது இரண்டு நாட்கள் நடந்தது. கிரேட் பிரிட்டன் அணி ஒரு தேசிய அணி அல்ல, உள்ளூர் கிளப் அணி, பிரெஞ்சு அணியிலும் பாரீஸில் வசிக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இருந்தனர். கிரேட் பிரிட்டன் வெற்றி பெற்றது.

ஆனால் அந்த விளையாட்டில் தங்கப்பதக்கம் அறிவிக்கப்படவில்லை. கிரேட் பிரிட்டனுக்கு வெள்ளிப்பதக்கமும் பிரான்சுக்கு வெண்கலப் பதக்கமும் தரப்பட்டது. இரண்டு அணிகளுமே ஈபில் கோபுரத்தின் ஒரு சின்னத்தையும் பரிசாகப் பெற்றுக்கொண்டன.

சுவாரஸ்யம் என்னவென்றால், விளையாடிய இரு அணிகளுக்குமே தாங்கள் ஒலிம்பிக்கில்தான் விளையாடுகிறோம் என்பது தெரியாது. அதே ஆண்டு, அதாவது 1900ல் உலகக் கண்காட்சி ஒன்று பிரான்ஸில் நடந்துகொண்டிருந்தது. அதற்காக விளையாடுகிறோம் என்றே இரு அணிகளும் நினைத்தன!

ஒலிம்பிக் அதிகாரிகளே இதை அங்கீகரிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். அப்போது இவை தங்கப் பதக்கமாகவும் வெள்ளிப்பதக்கமாகவும் மாற்றப்பட்டன.

செயின்ட் லூயிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்கும் திட்டம் இருந்தது. ஆனால் போதுமான அணிகள் இல்லாததால் அது ரத்து செய்யப்பட்டது. அதிலிருந்து கிரிக்கெட் ஒலிம்பிக்கில் விளையாடப்படுவதில்லை.

இது ஏன் நிகழ்ந்தது?

மூத்த விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர் ஷரத் காட்ரேக்கர் பேசும்போது, "ஒலிம்பிக் தொடங்கப்பட்டபோது கிரிக்கெட் என்றால் டெஸ்ட் போட்டி என்ற நிலை இருந்தது. ஐந்து நாட்கள் ஒரு விளையாட்டுக்காக நேரம் ஒதுக்குவது சிரமமாக இருந்தது. இதை விளையாட பலரும் ஆர்வத்துடன் வருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது. அதனால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

ஒரு புதிய விளையாட்டை எப்படி ஒலிம்பிக்கில் சேர்க்கிறார்கள்?

100 கோடி ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு இது என்றாலும், இது வெகு சில நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில்தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் அது ஒரு மதமாகவே இருக்கிறது. ஆனால் உலகில் 10 - 11 நாடுகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அணிகள் இருக்கின்றன. சுருக்கமாக சொல்லப்போனால் இந்த நாடுகள் மட்டுமே வழக்கமாக கிரிக்கெட் விளையாடுகின்றன எனலாம்.

கிரிக்கெட் சேர்க்கப்படுமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், ஒரு புதிய விளையாட்டு எப்படி ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சமீபத்தில் பல புதிய விளையாட்டுகள் சேர்க்கபப்ட்டிருக்கின்றன. முன்பு இதுபோன்ற முடிவுகள் ஒலிம்பிக் கமிட்டியால் எடுக்கப்படுகின்றன. ஆனால் இப்போது போட்டியை நடத்தும் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் நிர்வாகக் குழுவுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.

இன்னும் பரவலான பார்வையாளர்களை, குறிப்பாக இளைஞர்களை ஒலிம்பிக் சென்று அடைவதற்காக உருவாக்கப்பட்ட "ஒலிம்பிக் 2020 அஜெண்டா" செயல்படுத்தப்பட்டபின்பு இந்த மாற்றம் வந்திருக்கிறது. 2015ல் நடந்த ஒலிம்பிக் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது இந்த யோசனை சொல்லப்பட்டது.

ஒலிம்பிக் சின்னம்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒலிம்பிக் சின்னம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதை 2016ல் ஏற்றுக்கொண்டது. அப்போதைய கமிட்டி தலைவர் தாமஸ் பாக் பேசும்போது, "இளைஞர்களிடம் விளையாட்டுகளை எடுத்துச்செல்ல விரும்புகிறோம். அவர்கள் தானாகவே நம்மிடம் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஜப்பானில் இந்த விளையாட்டுகள் இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கின்றன. அது டோக்யோ விளையாட்டுகளுக்கு ஒரு பெரிய மரபை சேர்க்கும்" என்று தெரிவித்தார்.

ஒரு நாட்டின் நிர்வாகக் குழு எந்த மாதிரியான விளையாட்டுகளை சேர்க்கவேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் உண்டு. அந்த விளையாட்டை நடத்த குறிப்பிட்ட நாட்டிடம் வசதிகளும் இடமும் இருக்கவேண்டும். அந்த நாட்டின் மரபில் அந்த விளையாட்டு இருக்கவேண்டும். ஆகவே, ஒரு முறை சேர்க்கப்படும் விளையாட்டு அடுத்த ஒலிம்பிக்கில் இல்லாமலும் போகலாம்.

சிமோன் பைல்ஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிமோன் பைல்ஸ்.

"ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வசதிகள் இருக்குமா என்று பிசிசிஐக்கு சந்தேகம் இருந்தது, அதுதான் காரணம்" என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் மகராந்த் வைக்ஞாகன்கர்.

மேலும் அவர் பேசுகையில், "ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவேண்டுமானால் சரியாகத் திட்டமிட வேண்டும். கிரிக்கெட் விளையாடும் நாடுகள் மிகவும் வேலைப்பளுவில் இருக்கின்றன. ஒலிம்பிக்குக்குத் தயாராவதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கவேண்டும். கிரிக்கெட் ஆட வேண்டுமென்றால் பெரிய மைதானம் வேண்டும், ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முன்பாக புதிய பிட்ச் ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். கிரிக்கெட் விளையாடாத ஒரு நாட்டில் ஒலிம்பிக் நடக்கும்போது, இந்த ஏற்பாடுகளை செய்வது சிரமம்" என்றார்.

கிரிக்கெட்டுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

2024 ஒலிம்பிக் போட்டி பாரீஸில் நடக்க இருக்கின்றன. 2028 ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடக்கப்போகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ் இரண்டுமே கிரிக்கெட்டோடு பரிச்சயம் இல்லாத நாடுகள், இங்கு கிரிக்கெட் ஒரு பிரபல விளையாட்டும் அல்ல. ஆகவே இங்கு வசதிகள் செய்வதில் சிரமம் இருக்கலாம். இந்த நாடுகள் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்குமாறு கேட்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

வேறு வழிகள் உண்டா?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி இதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும். கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் வாரியங்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். நிதி சேகரித்து ஒலிம்பிக் நடத்தும் நாடுகளுக்குத் தரவேண்டியிருக்கும். அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அரசுகள் இதற்கான நிதியைத் தரவேண்டும். இது ஒரு சிக்கலான வழிமுறை.

ஐசிசி முயற்சிகள்

2028ல் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி முயற்சி செய்துவருகிறது. அதற்காக ஐ.சி.சி ஒரு ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கியுள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக எவ்வளவு நிதி தரமுடியும் என்று உறுப்பினர்களிடம் ஐசிசி விவாதித்தது. இதுகுறித்த ஒரு கேள்விப்படிவமும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

முன்பே ஐ.சி.சி இதுபோன்ற முயற்சிகளை செய்திருந்தாலும் அவை வெற்றிபெறவில்லை. ஆனால் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு இந்தமுறை ஐசிசி தீவிரமாக உழைத்துவருகிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் கிரிக்கெட் உலகம் முழுக்க பிரபலமாகும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்களும் அதிகரிப்பார்கள் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பதால், "ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் ரசிகர்களைக் கவர்ந்திழுக்க அது ஒலிம்பிக்குக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்" என்று ஐசிசி தெரிவித்திருக்கிறது.

உலகில் உள்ள 100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 92 சதவீதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கையை உள்ளடக்கிய இந்தியத் துணைக்கண்டத்தில்தான் இருக்கிறார்கள் என்றும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும்போது, கிரிக்கெட்டின் புகழ் ஒலிம்பிக்குக்கு உதவும் என்றும் ஐசிசி தெரிவித்திருக்கிறது.

நாம் அடுத்த ஒலிம்பிக்கில் விராட் கோலியையோ ரோஹித் ஷர்மாவையோ பார்ப்போமா?

பிசிசிஐக்கு ஒலிம்பிக்கில் ஆர்வமில்லையா?

"அப்படி இல்லை. கிரிக்கெட் என்பது பதக்கங்களுக்கு அப்பாற்பட்டது. இதில் பொருளாதார அம்சங்களும் உண்டு. கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்த்துவிட்டால் கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும். ஒலிம்பிக் ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்காது, அவர்களது வருமானம் குறையும். கிரிக்கெட்டில் முதலீடு செய்யப்படும் பணத்தையும் தியாகம் செய்யவேண்டியிருக்கும். கிரிக்கெட் தொடர் ஆட்டங்களின் கால அட்டவணையோடு ஒலிம்பிக்குக்கும் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்.

ஆகவே ஒருவேளை ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டாலும் பிசிசிஐ சுமாரான அணிகளையே விளையாட அனுப்பும்" என்கிறார் ஷரத் காட்ரேக்கர். "கிரிக்கெட்டுக்கு ஒரு தனி கால அட்டவணை, ஸ்பான்சர்கள், ஒளிபரப்பு உரிமைகள், நிர்வாகிகளின் பணம் என்றெல்லாம் இருக்கிறது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவேண்டும் என்பதாலேயே பிசிசிஐ இவற்றை எல்லாம் விட்டுக்கொடுத்துவிடாது" என்கிறார்.

ஆனால் சில விமர்சகர்கள் இதில் முரண்படுகிறார்கள்.

"ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வசதி இருக்குமா என்ற சந்தேகம் கிரிக்கெட் வாரியத்துக்கு இருந்தது, அதுதான் காரணம்" என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் மகராந்த் வைக்ஞாகன்கர்.

பிட்ச் வேண்டும்

மேலும் அவர் பேசுகையில், "ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவேண்டுமானால் சரியாகத் திட்டமிட வேண்டும். கிரிக்கெட் விளையாடும் நாடுகள் மிகவும் வேலைப்பளுவில் இருக்கின்றன. ஒலிம்பிக்குக்கு தயாராவதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கவேண்டும். கிரிக்கெட் ஆட வேண்டுமென்றால் பெரிய மைதானம் வேண்டும், ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முன்பாக புதிய பிட்ச் ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். கிரிக்கெட் விளையாடாத ஒரு நாட்டில் ஒலிம்பிக் நடக்கும்போது, இந்த ஏற்பாடுகளை செய்வது சிரமம்" என்றார்.

பிசிசிஐ மட்டுமல்லாமல், இங்கிலாந்து-வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இரண்டுமே இதுவரை கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிசிசிஐயைப் போலவே இவையும் பொருளாதார விஷயங்களில்தான் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால் இது மாறலாம் என்கிறார் காட்ரேக்கர். "இந்த நாடுகள் பதக்கங்களில் குறியாக இருக்கின்றன. ஆகவே ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் இந்த நாடுகளில் பரவலாக எழுந்திருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதுகுறித்து ஆர்வம் காட்டினால், ஐசிசிக்கும் ஆதரவு கிடைக்கும். பிசிசிஐ வேறு வழியை நாடவேண்டியிருக்கும்" என்கிறார்.

பிசிசிஐ ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை ஜாக்கிரதையான முடிவையே வைத்திருக்கிறது. ஆமாம் என்றோ, இல்லை என்றோ அவர்கள் தெளிவாகச் சொல்லவில்லை. லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் நாங்கள் எங்கள் ஆண்கள் அணியையும் பெண்கள் அணியையும் அனுப்புவோம்" என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய வீரர்களுக்காக பிசிசிஐ 10 கோடி நிதி அளித்திருக்கிறது.

பிசிசிஐயின் சேர்மன் ஜே ஷா பேசும்போது, "ஒலிம்பிக்கில் பங்குபெறும் எல்லா வீரர்களுக்கு உதவுவதற்கு எங்களால் ஆன முயற்சிகளை செய்வோம். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பும் மத்திய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்நலன் அமைச்சகமும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த 10 கோடி நிதியை வழங்கியுள்ளோம்" என்கிறார்.

இதுவரை பெரிய விளையாட்டுகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறதா?

இங்கிலாந்தில் நடக்கவிருக்கிற 2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பெண்கள் அணியை அனுப்ப பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் பல போட்டிகள் நடக்கும். ஒரே விளையாட்டுக்கான தொடர் போட்டிகள் நடக்கும் உலகக்கோப்பையுடன் ஒப்பிடும்போது இவை வித்தியாசமானவை.

இதுபோன்ற போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறதா? 1998ல் மலேசியா கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இருந்தது. அஜய் ஜடேஜா, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்‌ஷ்மண் உள்ளிட்டோர் விளையாடினர். அதே நேரம் வேறு ஒரு இந்திய அணி பாகிஸ்தானுடன் போட்டியிட்டுக்கொண்டிருந்தது. இரு அணிகளுமே சரியாக விளையாடவில்லை. கோலாலம்பூரில் நட்சத்த்திர வீரர்கள் விளையாடினாலும் காலிறுதியில் இந்திய அணி தோல்வியுற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் பெரிய வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

தங்கப் பதக்கம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒலிம்பிக் தங்கப்பதக்கம்.

இந்த விளையாட்டுகளில் தென்னாப்பிரிக்கா தங்கப் பதக்கத்தை வென்றது. அதன்பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பவில்லை. 2022 காமல்வெல்த் போட்டியில் இந்தியாவின் டி-20 மகளிர் அணி சேர்க்கப்பட்டிருக்கிறது. 2010, 2014 ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தாலும் இந்தியா தனது அணியை அனுப்பவில்லை. 2010 ஆசிய விளையாட்டில் பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கான தங்கப்பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்த முறை சரியாக இருக்கும்?

இப்போதைக்கு டி-20, டெஸ்ட், ஒருநாள் ஆட்டம் என்ற மூன்று முறைகள் இருக்கின்றன. இவற்றில் எது சரியாக இருக்கும்?

"டெஸ்ட் மேட்ச்களை நடத்துவது சிரமம், பெரிய விளையாட்டுகளில் ஒருநாள் ஆட்டம்கூட கடினமானதுதான். அதற்கான நேரமும் வசதிகளும் கூடுதலாகத் தேவைப்படும்" என்கிறார் காட்ரேக்கர்.

ஒலிம்பிக்கில் டி-20 விளையாடப்படலாம். ஹண்ட்ரட் என்று ஒரு முறையும் விவாதிக்கப்படுகிறது. இது இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இப்போதுதான் இதற்கான முதல் ஆட்டம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. இதில் 100 பந்துகள் வீசப்படும். டி-20யுடன் ஒப்பிடும்போது இதில் 20 பந்துகள் குறைவு. இளையவர்களையும் புதியவர்களையும் கிரிக்கெட்டை நோக்கி ஈர்ப்பதற்காக இந்த முறை உருவாக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

ஹண்ட்ரட் தொடர் ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த எட்டு ஆடவர் அணிகளும் எட்டு மகளிர் அணிகளும் பங்கேற்றன. இதற்கான விதிமுறைகள் சற்றே வித்தியாசமானவை. இந்தியாவைச் சேர்ந்த செஃபாலி வர்மாவும் இதில் பங்கேற்றார்.

இது பாலின ஒற்றுமையை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தொடர் ஆட்டத்தில் பெண்களின் போட்டிகளுக்கும் அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பெண்களுக்கும் அதே வசதிகள் தரப்பட்டன. பரிசுத்தொகையும் ஒன்றாகவே இருந்தது.

ஆனால் இதை ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாது என்றும் சிலர் சொல்கிறார்கள். ஏற்கனவே மூன்று முறைகள் இருக்கும்போது நான்காவது முறை எதற்கு என்று மூத்த வீரர்கள் கேட்கிறார்கள்.

பிசிசிஐயும் மற்ற வாரியங்களூம் டி-20ஐ ஆதரிக்கின்றன.

வீரர்கள் என்ன நினைக்கிறார்கள்?

கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டுமா என்பது பற்றி இப்போதைய வீரர்கள் ஒன்றும் தெரிவிக்கவில்லை என்றாலும், மூன்னாள் வீரர்கள் பலதரப்பட்ட பதில்களைத் தருகிறார்கள்.

பிபிசியின் ஸ்டம்ப்ட் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒலிம்பிக்கில் சேர்த்தால் கிரிக்கெட்டின் புகழ் அதிகரிக்கும் என்றார்.

"டி-20 ஒரு பிரபலமான முறை. கிரிக்கெட் பார்க்காதவர்களுக்கும் இந்த முறை புரியும்"

கிரிக்கெட்டை ஏன் ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டும் என்று கேட்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட். தன் யூட்யூப் சேனலில் பேசும்போது, "கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டும் என்று சொல்வது குழப்பமாக இருக்கிறது. ஏன் இத்தனை நெருக்கடி? உலகத்துக்குக் கிரிக்கெட்டைப் பற்றித் தெரியாதா? சிலர் 10 ஓவர் ஆட்டம் வேண்டும் என்கிறார்கள், சிலர் ஹண்ட்ரட் வேண்டும் என்கிறார்கள். மற்ற விளையாட்டுகளுக்கு முயற்சி எடுங்களேன்" என்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இதுபற்றிய விவாதங்கள் முழுவீச்சில் நடக்கவில்லை. ஆனால் சில நாட்களில் அவை வீரியத்தை இழக்கும். ரோஹித் சர்மாவும் விராத் கோலியும், பிரபலமான வீரர்களும் இந்தியக் கொடியைத் தாங்கியபடி ஒலிம்பிக் துவக்க விழாவில் நடக்கும் நாளை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :