சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்?

சிமோன் பைல்ஸ்

பட மூலாதாரம், Laurence Griffiths/gettyimages

படக்குறிப்பு, மனத் தடை நீங்கி, மன நலம் காத்து...

அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்ததற்காக பாராட்டப்படுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் அணி இறுதிப் போட்டியில் இருந்து பைல்ஸ் வெளியேறிவிட்டார்.

அமெரிக்க ஒலிம்பிக் அணித் தலைவர், பல ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களும் பைல்ஸின் இந்த முடிவை மனம்திறந்து ஆதரித்துள்ளனர்.

தனது மன ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாக்கூறி 24 வயதான பைல்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகினார்.

குவியும் பாராட்டுக்கள்

" நாங்கள் உங்களைப்பார்த்து பெருமிதம் கொள்கிறோம்,"என்று அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி சாரா ஹெர்ஷ்லேண்ட் குறிப்பிட்டார்.

"எல்லாவற்றிற்கும் மேலாக மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் முடிவை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் உங்கள் முன்னோக்கிய பயணத்தில் அமெரிக்க அணியின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கு உறுதியளிக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்க அணி 2011, 2014, 2015, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும், லண்டன் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

13.766 என்ற தனது ஒலிம்பிக் வாழ்க்கையின் மிகக் குறைந்த புள்ளிகள் பெற்ற பிறகு பைல்ஸ் அரங்கிலிருந்து வெளியேறினார். ஆனால் தனது அணியின் மற்றொரு வீரர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றபோது , அவருக்கு பாராட்டு தெரிவிக்க பைல்ஸ் திரும்பி வந்தார். இந்த நிகழ்வில், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் அணி தங்கத்தையும், பிரிட்டன் வெண்கலத்தையும் வென்றது.

சீமோன் பைல்ஸ்

பட மூலாதாரம், Laurence Griffiths/gettyimages

படக்குறிப்பு, வெற்றிப் புன்னகை

அமெரிக்க அணி தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வலுவான போட்டியாளராக கருதப்பட்டது.

ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் பைல்ஸ் 30 முறை சாம்பியனாக இருந்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற விளையாட்டு வீரராக (ஆண் அல்லது பெண்) ஆவதற்கு அவர் டோக்கியோவில் நான்கு பதக்கங்களை வெல்ல வேண்டியிருந்தது.

'இப்போது வரையிலான தலைசிறந்த விளையாட்டுவீரர்' (Greatest of all times) என்று பைல்ஸ் அறியப்படுகிறார்.

"உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மன ஆரோக்கியத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்க அனைவரையும் பைல்ஸ் ஊக்கப்படுத்தியுள்ளார். அவர் ஒரு உண்மையான ராணி மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்," என்று ஜமைக்காவின் ஜிம்னாஸ்ட் டானுசியா பிரான்சிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்

தலைசிறந்த விளையாட்டுவீரர்

"2013 முதல் அவர் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளார். அவர் ஒரு போட்டிக்குச் சென்றால் அவர்தான் வெற்றி பெறுவார் என்று அனைவருமே நினைத்தார்கள்.," என்று 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும், பிரிட்டனின் முன்னாள் ஜிம்னாஸ்ட்டுமான பெத் ட்வீடல், பிபிசி ஒன்னிடம் கூறினார்:

"நான் இன்று உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். என் அணியின் மற்றவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சொல்லும் அளவுக்கு அவர் வலிமையாக இருக்கிறார். அவர் நிச்சயமாக தனது விளையாட்டு நிகழ்வை முடிப்பார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஆரோக்கியமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களது நலன் முக்கியத்துவம் வாய்ந்தது ," என்று அவர் மேலும் கூறினார்.

சிமோன் பைல்ஸ்

பட மூலாதாரம், Alex Livesey/gettyimages

படக்குறிப்பு, தலைகீழாக

பிரெஞ்சு ஜிம்னாஸ்ட் மெலனி டி ஜீசஸ் டோஸ் சாண்டோஸ், "நாங்கள் பைல்ஸை இதுபோல முன்பு எப்போதும் பார்த்ததில்லை. அவர் பைல்ஸ் என்பதால் எல்லோருடைய கண்களும் அவர் மீது இருப்பதால் இது எளிதல்ல என்று நான் கூறுவேன். அவர் மீது நிறைய அழுத்தம் இருக்கிறது," என்றார்.

"இது அவருக்கு மிகவும் அசாதாரணமானது. நீங்கள் அதிக அழுத்தத்தில் இருந்தால், அது உங்கள் உடலை பாதிக்கிறது,"என்று ஜப்பானிய ஜிம்னாஸ்ட் மை முராகாமி கூறினார்.

சிமோன் பைல்ஸ் இரண்டாவது இடத்தில் இருந்தார். இது அவரது ஆறாவது ஒலிம்பிக் பதக்கமாகும். இது தவிர 2013 மற்றும் 2019 க்கு இடையில் 19 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஐந்து இறுதிப் போட்டிகளிலும் அவர் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து இவற்றில் பங்கேற்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சிமோன் பைல்ஸ்

பட மூலாதாரம், Laurence Griffiths/gettyimages

படக்குறிப்பு, தங்கப் பதக்க நாயகி.

"என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன். மெதுவாக நிலைமையை சமாளிக்க முயற்சி செய்வேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று பைல்ஸ் கூறினார்.

20 வயதான ஜோர்டன் சைல்ஸ், மகளிர் இறுதி அணியில் பைல்ஸுக்கு பதிலாக களமிறங்குவார்.

"இது ஒரு பெரிய முடிவு. நான் ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரரின் இடத்தில், போட்டிக்குள் நுழையப்போகிறேன். இதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பைல்ஸ் கூறுகிறார்.

" அவர் இப்போது வரையிலான தலைசிறந்த வீரர் (GOAT). இதுபோன்ற நிகரில்லாத ஒருவரின் இடத்தில் களம் இறங்கமுடியும் என்பதையும் அவைவரும் ஒன்றிணைந்து இதை சாதிக்கமுடியும் என்றும் நான் உலகிற்குக் காட்ட விரும்புகிறேன். ," என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் அனைவரும் மிகவும் பதற்றமாக இருந்தோம். உண்மையைச் சொல்வதானால், அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் சிமோன் பைல்ஸ். உண்மையில் அவர் தான் அணியை வழிநடத்துகிறார், "என்று அணியின் மற்றொரு உறுப்பினரான 18 வயதான சுனிசா லீ தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் மனிதர்கள்தான்

முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், ஓய்வுபெற்ற அமெரிக்க ஜிம்னாஸ்ட்டுமான எல்லி ரைஸ்மேன் ," என் இதயம் படபடப்பாக இருக்கிறது. இது மிகவும் கவலையளிக்கிறது. எல்லா விளையாட்டு வீரர்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த தருணம் பற்றியே கனவு காண்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். பைல்ஸ் சரியாகவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்,"என்றார்.

"இதில் நிறைய அழுத்தம் உள்ளது. ஒலிம்பிக் நெருங்கி வரவர அவர்கள் மீது அழுத்தம் அதிகரித்து வருவதை என்னால் காண முடிந்தது. அது மிகவும் கவலை அளிக்கிறது."என்று அவர் குறிப்பிட்டார்.

"ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் மனிதர்கள்தான் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மிகச் சிறந்ததை நிச்சயமாக கொடுக்கிறார்கள். உங்கள் வாழ்க்கை இவ்வளவு அழுத்தங்களின் கீழ் இருக்கும்போது, உங்கள் தலைசிறந்த செயல்திறனை நீங்கள் வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது." என்றார் எல்லி ரைஸ்மேன்.

மற்ற விளையாட்டு வீரர்களிடமிருந்தும், விளையாட்டு உலகிற்கு வெளியிலிருந்தும் பைல்ஸுக்கு ஆதரவாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆதரவு செய்திகள்

உலகின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மேன்னி பேச்மேன், "ஒரு காலத்தில் சாம்பியனாக இருப்பவர் எப்போதுமே சாம்பியன்தான்," என்று கூறினார்.

இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்காவின் ஆல்பைன் ஸ்கைர் மைக்கேலா ஷிஃப்ரின், "உங்கள் புன்னகை அழகானது என்பதால் எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்" என்றார்.

சிமோன் பைல்ஸ்

பட மூலாதாரம், Alex Livesey/gettyimages

படக்குறிப்பு, உறுதியான முடிவு எடுத்த வலிமை.

"உங்களுக்கு என் அன்பும், நேர்மறையான சிந்தனைகளும் மட்டுமே" என்றார் ஏபிஏ வீரர் கார்ல் ஆண்டனி டவுன்ஸ்.

"சிமோன் எத்தனை அழுத்தத்தின் கீழ் இருந்தார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவருக்கு என் அன்பை அனுப்புகிறேன். அவரும் ஒரு மனிதர்தான் என்பதை நாம் எளிதில் மறந்துவிடுகிறோம்," என்று அமெரிக்காவின் ஓய்வுபெற்ற ஃபிகர் ஸ்கேட்டர் ஆடம் ரிப்பன், குறிப்பிட்டார்.

"அவரது விளையாட்டை பார்த்த நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். அவர் இப்போதும் தலைசிறந்த வீரர்தான். அவர் நமது அன்பிற்கும் ஆதரவிற்கும் தகுதியானவர்," என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

"ஒரு உண்மையான முன்மாதிரியாக இருப்பதற்கும், மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது தவறல்ல என்பதை உலகுக்குக் காட்டியதற்கும் உங்களுக்கு நன்றி," என்று யுனிஃசெப் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

Please wait..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :