பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், BASAVARAJ BOMMAI
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி செய்தியாளர்
பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் புதிய முதல்வராகியுள்ளார். 61 வயதாகும் அவர், மாநிலத்தின் 23ஆவது முதல்வராக பதவியேற்றிருக்கிறார்.
கர்நாடகாவில், லிங்காயத் சாதியை சேர்ந்த தலைவர் பி.எஸ். எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கி பசவராஜை முதல்வராக தேர்ந்தெடுத்ததில் பாஜக தவறு செய்துவிடவில்லை. 2014-க்குப் பிறகு, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் பெற்ற அனுபவங்களிலிருந்து அக்கட்சி பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
கட்சியின் மத்திய தலைமை இழப்பை ஈடுசெய்ய முயற்சிக்கிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோதியின் கீழ் வரலாற்று வெற்றியைப் பெற்ற பின்னர் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து அக்கட்சி பின்வாங்கியுள்ளது. காரணம், இந்த இரு மாநிலங்களிலும் அடுத்த தேர்தல்களில் இக்கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்தது.
அந்த இரண்டு மாநிலங்களைப் போலல்லாமல், கர்நாடகாவில், பி.எஸ். எடியூரப்பாவின் அன்புக்குப் பாத்திரமான பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியுள்ளது கட்சித் தலைமை. பி.எஸ். பொம்மையும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரே. மேல் சாதி லிங்காயத்துகள், இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் 17 சதவீதம். பொம்மையை முதல்வராக்கியதன் மூலம், அந்தச் சாதியின் ஆதரவைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
மற்ற மாநிலங்களிலிருந்து பெற்ற அனுபவம்

பட மூலாதாரம், BJP
மகாராஷ்டிராவில், பாஜகவின் மத்திய தலைமை பிராமண சாதியை சேர்ந்த தேவேந்திர ஃபட்னவிசை முதலமைச்சராக்கியது. அப்போது மராட்டிய மக்கள் தேர்தலில் அக்கட்சிக்குத் தாராளமாக வாக்களித்தனர். பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் ஜார்க்கண்டில், பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸை அக்கட்சி முதலமைச்சராக்கியது. ஜாட் சமூகத்தினர் ஆதிக்கம் உள்ள ஹரியாணாவில், பஞ்சாபியான முதல்வர் மனோகர் லால் கட்டார் மீண்டும் ஆட்சி அமைத்தார்.
மைசூர் பல்கலைக்கழக கலை பீடத்தின் டீன் பேராசிரியர் முசாஃபிர் அசாதி, "லிங்காயத் சமூகத்தினரிடையே தனது செல்வாக்கை இழக்க பாஜக விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. லிங்காயத் மடம் சில காலமாகவே எடியூரப்பாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவந்தது. அவர்களின் அழுத்தம் பலனளித்ததாகத் தெரிகிறது. 1990 களில் காங்கிரசின் நிலை என்ன என்பதும் பாஜகவுக்கு நினைவுக்கு வந்திருக்கும்." என்கிறார்.
ஜக்ரான் லேக்சிட்டி பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பிரபல அரசியல் விமர்சகருமான பேராசிரியர் சந்தீப் சாஸ்திரி, "பொம்மை, கட்சித் தலைமையின் தேர்வு. எடியூரப்பா வேறு வழியின்றி அவரை அங்கீகரித்திருக்கிறார். அவ்வளவே. எடியூரப்பா குடும்பத்தின் செல்வாக்கைக் குறைக்கவே இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்," என்று கூறுகிறார்.
மலரும் 1990களின் நினைவுகள்

பட மூலாதாரம், BJP
இந்த மாநிலத்தில் சைக்கிளில் சென்று கட்சியை பலப்படுத்திய காலங்களை எடியூரப்பா கண்ணீருடன் நினைவு கூர்ந்த வீடியோ வைரலாகியுள்ளது. அவரிடம் அப்போது கார் வாங்க வசதி இல்லை என்று கூறியிருந்தார். இந்த வீடியோவுக்குச் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகள் லிங்காயத் சமூகம் கோபமாக இருப்பதையும், 1990ல் காங்கிரசுக்கு அவர்கள் செய்ததை பாஜகவுக்கும் செய்ய முடியும் என்ற செய்தியை பாஜகவுக்குச் சொல்வது போலவும் கொள்ளலாம்.
சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, உறுதியான லிங்காயத் தலைவர் வீரேந்திர பாட்டீல் அழவில்லை, ஆனால் அவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பேசும் போது அவருக்கும் தொண்டை அடைத்துத்தான் போனது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பாட்டீல் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்திருந்தார். பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்திருப்பதாக பாட்டீல் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்.
அது மட்டுமல்ல. 2013 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியான கர்நாடக ஜனதா பக்ஷ மூலம் 10 சதவீத வாக்குகளைப் பெற்று எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுக்கு எடியூரப்பா ஒரு பாடம் கற்பித்திருந்தார். 2008 ல் முழுமையான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக 40 இடங்களில் மட்டுமே மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
இந்தப் பழைய நினைவுகள் காரணமாகத்தான் பாஜக தலைவர்கள் கர்நாடகாவில் புதிதாக எதையும் பரிசோதிப்பதைத் தவிர்த்திருக்கலாம். பிராமணர்கள், ஒக்கலிகர்கள் (தெற்கு கர்நாடகாவில் அதிகம் இருக்கும் சாதி) மற்றும் லிங்காயத்துகள் ஆகியோருள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து, வெறும் லிங்காயத்துகள் என்ற அளவில் மட்டுமே வரையறுத்திருக்கலாம்.
பொம்மை அங்கீகரிக்கப்படக் காரணம் என்ன?
கட்சியின் மத்திய பார்வையாளர்களான தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி (இருவரும் மத்திய அமைச்சர்கள்) கர்நாடகாவில் கட்சி பொறுப்பாளர் அருண் சிங்கை சந்திக்க பெங்களூருக்கு வந்தபோது, புதிய முதலமைச்சருக்கான போட்டியில் பொம்மை மற்றும் அரவிந்த் பெல்லாட் ஆகிய இருவர்தான் இருந்தனர். பெல்லாட் லிங்காயத்துகளின் மிகப்பெரிய சமூகமான பஞ்சமஷாலியைச் சேர்ந்தவர்.
மத்திய பார்வையாளர்கள் எடியூரப்பாவைச் சந்தித்த பிறகு, கட்சித் தலைவர்களைச் சந்திக்க ஹோட்டலுக்குச் சென்ற போதே பொம்மைதான் மாநில முதல்வராவார் என்று முடிவு செய்யப்பட்டது. பெல்லாட் ஓரங்கட்டப்பட்டார்.
இதன் முதல் அறிகுறி ஹோட்டலை அடைந்தபோது எடியூரப்பாவின் புன்னகையிலும் சர்ச்சைக்குள்ளான அவரது வெற்றிக் குறியீட்டிலும் காணப்பட்டது. அவர் கையால் 'வி' என்ற அடையாளத்தைக் காட்டிய போதே, பொம்மை தான் அடுத்த முதல்வர் என்று மக்கள் புரிந்துகொண்டனர். எடியூரப்பாவின் செயல்பாடுகள் குறித்தும் அவரது மகன் பி.ஒய் விஜேந்திரா நிர்வாகத்தில் தலையிடுவது குறித்தும் மத்திய தலைமைக்கு முதலில் புகார் அளித்தவர் பெல்லாட்.
பேராசிரியர் அசாதி, 'இது கர்நாடகாவில் லிங்காயத்துகள் மட்டுமே ஒரே அரசியல் சக்தி என்ற வாதத்தை பலப்படுத்தியுள்ளது. இது எடியூரப்பாவின் வாரிசுகளைத்தான் ஆட்சியில் அமர்த்தும். என்ன, அந்த அளவுக்கு ஊழல் இருக்காது" என்று கூறுகிறார்.
பொம்மை முன் இருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, "நான் இதை ஒரு பெரிய பொறுப்பாக எடுத்துக்கொள்கிறேன். அனைவரின் நம்பிக்கையையும் பெற்று அனைவருடனும் இணைந்து செயல்படுவேன். எங்கள் அரசு ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும், நலிந்தவர்களுக்காகவும் எடியூரப்பாவின் வழிகாட்டுதலில் செயல்படும்," என்று உரையாற்றினார்.
வடக்கு கர்நாடகா முழுவதும் பரவியிருக்கும் லிங்காயத் சமூகத்தினரிடையே தனது செல்வாக்கை உருவாக்கிக்கொள்ள, 2023 ஆம் ஆண்டில் கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான எடியூரப்பாவின் முயற்சிகளுக்கு ஆதரவாக பொம்மை ஹாவேரி மாவட்டத்தில் உள்ள தனது ஷிகான் தொகுதியிலிருந்து வெளியேறி தனது செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும்.
ஹூப்ளியைச் சேர்ந்த மூத்த அரசியல் விமர்சகர் மதன் மோகன், "அவர் எப்போதும் எடியூரப்பாவுடன் நெருக்கமாகவே இருந்தார். இப்போது அவர் நிர்வாகத்தில் தனது திறனை நிரூபிக்க வேண்டும். சுருக்கமாக, அவர் தனது தந்தையைப் போலவே திறமையானவராக இருக்க வேண்டும், அதே நேரத்தில் எடியூரப்பா போன்ற மென்மையான மனநிலையையும் கொண்டிருக்க வேண்டும்," என்கிறார்.
ஆனால் மிக முக்கியமாக, மங்களூரு, உடுப்பி, வட கன்னடம், சிக்மங்களூர் மற்றும் குடகு ஆகிய கடலோர மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய இந்துத்துவக் கொள்கையையும் அவர் கை கொள்ள வேண்டும். இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர் அல்லர் என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஜனதா தளத்தில் இருந்த பொம்மை, 2008ல் பாஜகவில் சேர்ந்தார்.
பசவராஜ் என்ன செய்ய வேண்டும்?
எடியூரப்பாவின் உள்ளடக்கிய அரசியல் மரபுகளையும் அவர் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது என்று பேராசிரியர் ஆசாதி கூறுகிறார்.
தப்லிகி ஜமாஅத் குறித்து எடியூரப்பா கூறியதன் பின்னணியில் இதைக் கூறுகிறார். கோவிட் தொற்றுநோயின் முதல் அலையின் போது பல பாஜக தலைவர்கள் தப்லிகி ஜமாத்தைக் குற்றம் சொல்லி வந்த நிலையில், எடியூரப்பா, வைரஸ் பாகுபாடின்றி அனைவரையும் பாதித்துவரும் நிலையில், இவ்வாறு ஒரு பிரிவினரை வைரஸ் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறுவது சரியல்ல என்று கருத்து தெரிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தக் கருத்து பெருமளவில் விமர்சிக்கவும் பட்டது.
பொம்மை உள்துறை அமைச்சராக இருந்தபோது, லவ் ஜிஹாத் விஷயத்தில், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களின் விமர்சனத்துக்கு அவரும் ஆளாகியிருந்தார்.
பிபிசியுடன் பேசிய ஒரு பாஜக தலைவர், 'அவர் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளவில்லை' என்றார். பொம்மை என்ன செய்தாலும், கட்சியின் ஒரு பகுதியினர் அவரை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.
எடியூரப்பாவே ஒரு பெரும் சவால்

பட மூலாதாரம், BASAVARAJ BOMMAI
கட்சியின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துச் செல்வது பொம்மைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும். எடியூரப்பாவின் நிர்வாக முறையை விமர்சிப்பவர்களையும் அவர் அரவணைத்துச் செல்ல வேண்டியிருக்கும். தவிர, எடியூரப்பாவின் ஊழல் அரசாங்கத்தின் பிம்பத்தை மாற்றக்கூடிய ஒரு தூய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும். முன்னாள் காங்கிரஸ் முதல்வரும் சட்டசபையில் எதிர்கட்சித் தலைவருமான சித்தராமையா, எடியூரப்பா அரசாங்கத்தை 'முப்பது சதவீத அரசு' என்று குற்றம்சாட்டி வருகிறார்.
பொம்மை தனது வழிகாட்டியான எடியூரப்பாவின் தரப்பிலிருந்து வரக்கூடிய அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எடியூரப்பாவுடன் இருந்த அமைச்சர்கள், அடிக்கடி மாறும் அவருடைய மனநிலையின் பின்னணியில் அவருடன் பணியாற்றுவது எளிதானது அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 2011 ஆம் ஆண்டில், எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டால் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார், ஆனால் அப்போதும் கூட அவர் மத்திய தலைமையைப் புறந்தள்ளி, தனக்கு ஆதரவான சதானந்த கௌவுடாவை முதல்வராக்கினார். பின்னர் கௌடா மத்திய அமைச்சராகவும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்குப் பிறகு, தான் அனுப்பிய கோப்பைக் கிடப்பில் போட்டதால் சதானந்த கௌடா மீது கோபம் கொண்ட எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கினார்.
மதன் மோகன் கூறுகிறார், "இது மிகவும் சிக்கலான சூழ்நிலையாக இருக்கும், ஏனெனில் பொம்மை எம்.எல்.ஏக்களை மட்டுமல்ல, எடியூரப்பாவையும் கையாள வேண்டும். எடியூரப்பா அடிக்கடி மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடிய மனிதர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது."
கட்டுக்கோப்பான ஆளுமை
ஆனால் பொம்மை, அவரது தந்தை சோமப்பா ராயப்பா பொம்மையைப் போலவே, ஒரு கட்டுக்கோப்பான நபர்.
பாஜகவை விட்டு வெளியேறி கர்நாடக ஜனதா பக்ஷ கட்சியை உருவாக்க வேண்டாம் என்று பொம்மை எடியூரப்பாவிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினார். அவர் கேஜிபி-யில் சேரவில்லை, ஆனால் நரேந்திர மோடி 2013 ல் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, மீண்டும் பாஜகவில் சேரவும், கட்சியில் சேர மோதியின் அழைப்பை ஏற்கவும் எடியூரப்பாவை வற்புறுத்தினார்.
எடியூரப்பா மீது கர்நாடக லோக் ஆயுக்தா ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னர் ராஜினாமா செய்ய எடியூரப்பா மீது அழுத்தம் அதிகரித்தபோது, 2011 ஜூலை மாதம் ஒரு நாள் காலை பொம்மை, கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி அவரை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது எடியூரப்பா அவரை அறைந்தார் என்று கூறப்படுகிறது.
சிறு வயதில் அவரது தந்தை எப்போதாவது அறைந்திருக்கிறாரா என்று நான் அவரிடம் கேட்டபோது, 'என் தந்தை ஒருபோதும் அறைந்ததில்லை, ஆனால் அவர் (எடியூரப்பா) செய்தார்' என்று பொம்மை பொலிவிழந்த கண்களுடன் கூறினார்.
இப்போது பொம்மைக்கு பொறுமையின் பலன் கிடைத்துள்ளது.
ஆனால், முதலமைச்சர் பொம்மை இப்போது எடியூரப்பாவுடன் பொறுமையாக இருக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிற செய்திகள்:
- ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை?
- பெகாசஸ் உளவு செயலி: இலக்கான தமிழ்நாட்டுத் தலைவர்கள் - புதிய தகவல்கள்
- மோதி, அமித் ஷா சந்திப்புக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் காட்டிய அவசரம் - டெல்லியில் நடந்தது என்ன?
- தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?
- தாராளமயமாக்கல்: பழைய இந்தியா Vs புதிய இந்தியா - 4 வேறுபாடுகள்
- டோக்யோ ஒலிம்பிக்: தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை
- சைபர் தாக்குதல்: ஹேக்கிங் தரவுகளை மீட்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












