மோதி, அமித் ஷா சந்திப்புக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் காட்டிய அவசரம் - டெல்லியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், MHA
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் டெல்லியில் சந்தித்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 'இந்த சந்திப்புகளின் போது தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்களை இலக்கு வைத்து ஆளும் தி.மு.க அரசு நடத்தி வரும் ரெய்டு உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். டெல்லியில் என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.கவில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. `நான்தான் பொதுச் செயலாளர், விரைவில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்' எனத் தொண்டர்களுடன் பேசி வந்த சசிகலா, அண்மையில் ஜெயலலிதாவுடனான நட்பு, அரசியல் சூழல்கள் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். இந்தப் பேட்டியில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அணிகள் இணைப்பில் தான் பெரும் பங்கு வகித்ததாகவும் தெரிவித்தார். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய நிர்வாகிகளும் அ.தி.மு.கவைவிட்டே நீக்கப்பட்டனர்.
`எத்தனை ஆயிரம் பேருடன் சசிகலா பேசினாலும் எங்களுக்குக் கவலையில்லை' என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, சசிகலாவுக்கு எதிராக மாவட்டங்களில் தீர்மானம் இயற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது. கொங்கு மாவட்டங்களிலும் வடமாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தென் மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் எந்தவிதத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. இது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
40 நிமிடங்கள் நீடித்த சந்திப்பு!
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோதியை திங்கள்கிழமையன்று அ.தி.மு.க நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்புக்காக ஒருநாள் முன்னதாகவே அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ஓ.பி.எஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானதால், அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவரைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் சென்றனர்.

பட மூலாதாரம், PMO
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் 26 ஆம் தேதி காலை 11.10 மணியளவில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் பிரதமரை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரையில் நீடித்ததாகக் கூறப்பட்டது. தமிழ்நாடு அரசியல் நிலவரம், உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை போன்றவை குறித்துப் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
சசிகலா கேள்வி - தவிர்த்த இ.பி.எஸ்!
அதேநேரம், இந்தச் சந்திப்பு தொடர்பாக பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ``சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டோம். மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கொடுத்தால், டெல்டா பகுதிகள் பாலைவனமாகி விடும் என்பதையும் பிரதமரிடம் கூறியுள்ளோம்.
ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக பாடுபடும் கட்சியாக அ.தி.மு.க உள்ளது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, தமிழ்நாடு அரசு மீண்டும் லாட்டரி விற்பனை கொண்டு வருகிறது என்ற தகவல் கிடைத்ததால்தான் அறிக்கை வெளியிட்டோம். ஆனால், அவர்கள் கொண்டு வரவில்லை எனக் கூறிவிட்டார்கள். தி.மு.க தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் இப்போதைக்கு கருத்துகூற விரும்பவில்லை" என்றார். இந்தச் சந்திப்பில் சசிகலா தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, `நன்றி' எனக் கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.
முதல் நாள் பிரதமர் மோதியை சந்தித்த இபிஎஸ், ஓபிஎஸ் குழுவினர், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால், திங்கட்கிழமை நேரம் கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் அமித் ஷா அலுவலகம் அழைப்பு விடுத்தது. அதன் பேரில் நாடாளுமன்ற அலுவலகம் சென்ற இருவரும் சுமார் அரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகே அமித் ஷாவை சந்தித்தனர். ஆனால், இந்த சந்திப்பு 15 நிமிடங்களுக்குக் கூட நீடிக்கவில்லை.
பா.ஜ.கவின் நோக்கம் என்ன?
டெல்லி சந்திப்பு தொடர்பாக அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. மேக்கேதாட்டு விவகாரம் உள்பட தமிழ்நாடு பிரச்னைகள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினாலும் ரெய்டு, உள்ளாட்சித் தேர்தல், அரசியல் சூழல், சசிகலா விவகாரம் ஆகியவை குறித்துப் பேசப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசினார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் அண்மையில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்ஸை சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமரிடம் பேச வேண்டிய விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், PMO
வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 25 சதவிகித இடங்களில் போட்டியிட்டு அதிக வார்டுகளில் வெற்றி பெறும் முனைப்பில் பா.ஜ.க உள்ளது. காரணம், அடிமட்ட அளவில் அதிகப்படியான மக்கள் பிரதிநிதிகளை பெற்றால்தான், மக்களிடம் இன்னும் நெருக்கமாகச் செல்ல முடியும் என பா.ஜ.க திட்டமிடுகிறது. ஆளும்கட்சியாக தி.மு.க உள்ளதால், அதனை எதிர்கொள்ளும் வகையில் வலுவான அணியை அமைக்கவும் பா.ஜ.க முயற்சிக்கிறது. அதற்காக, `அ.தி.மு.கவில் அணிகள் இணைய வேண்டும்' என்ற கோரிக்கை பா.ஜ.க தரப்பில் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஓ.பி.எஸ் தரப்பில் சம்மதம் தெரிவித்தாலும் எடப்பாடி பழனிசாமி சற்று பின்வாங்குவதாகவும் கூறப்படுகிறது. `அவர்கள் இல்லாமலேயே தேர்தலில் 75 இடங்களைப் பெற்றுள்ளோம்' என்பதையும் இ.பி.எஸ் தரப்பினர் சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்கு டெல்லி மேலிடம் என்ன தெரிவித்தது எனத் தெரியவில்லை. அதனால்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகலா தொடர்பான கேள்வியை இ.பி.எஸ் தவிர்த்தார்" என்கிறார்.
ஜி.கே.வாசன், அன்புமணி எங்கே?
``சசிகலா விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசி, இவர்கள் வம்பில் மாட்டிக் கொள்வார்கள் என நான் நம்பவில்லை. ஊழல் விவகாரத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குத்தான் இவர்கள் டெல்லி சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் வருமான வரித்துறை விசாரணையும் நடந்தால் இவர்கள் பெரிதும் சிக்கிக் கொள்வார்கள். காரணம், கடந்த ஆட்சியில் நடந்த பல விவகாரங்களை பா.ஜ.க அரசு கையில் வைத்துள்ளது. அதன் காரணமாகத்தான் இவர்கள் டெல்லி சென்றனர்" என்கிறார், அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி.
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசியவர், ``தமிழ்நாட்டின் நலன் கருதி இவர்கள் டெல்லிக்கு சென்றது உண்மையாக இருந்தால், அ.தி.மு.கவின் தயவால் ராஜ்யசபா எம்.பியான ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஏன் உடன் செல்லவில்லை? தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன் ஆகியோரை வைத்துக் கொண்டு பிரதமரிடம் ஏன் பேசவில்லை? சாதாரண சிறிய கட்சிகள்கூட என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி வெளியில் சொல்வார்கள். மேக்கேதாட்டு, காவிரி விவகாரம் போன்ற பிரச்னைகளில் இவர்கள் நான்கு வருடங்களாக நிறைவேற்ற முடியாத ஒன்றை, இப்போது கேட்பதாகச் சொல்வதை நம்ப முடியவில்லை. தவிர, பிரதமரிடம் இவர்கள் அளித்த மனுவின் நகலை ஏன் ஊடகங்களுக்குத் தரவில்லை? இதில் இருந்தே இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பில் பொதுநலன் இருப்பதாகச் சொல்வதை நாடகமாகப் பார்க்கிறேன்.
தி.மு.க கேட்குமா?
தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கிவிட்டது. அதைப் பற்றி எடுத்துக் கூறுவதற்காகத்தான் சென்றுள்ளனர். இங்கு நடக்கும் ரெய்டுகளை நிறுத்துமாறு பா.ஜ.கவிடம் கூறினாலும் அதனை தி.மு.க அரசு கேட்குமா எனத் தெரியவில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது மட்டுமல்ல, முன்னாள் அமைச்சர்களில் 12 பேர் மீதான நடவடிக்கையை தாமதப்படுத்தக் கூடாது என்பதுதான் மக்களின் விருப்பம். பிரதமரை நேரடியாகப் பார்ப்பதற்காக எப்போதோ கேட்ட நேரம் கேட்டிருந்தபோதும் இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கிறது. தற்போதைய சந்திப்புக்குப் பிறகும் கூட சசிகலா தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்து விட்டார். தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் இவர்கள் டெல்லி சென்றனர்" என்கிறார்.
மேலும், `` சட்டசபையில் கருணாநிதியின் படத் திறப்பு விழாவுக்காக குடியரசு தலைவர் வருவது என்பது தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதனை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிரதமரிடம் என்ன அறிக்கையை கொடுத்தார்கள் என்பதை பா.ஜ.க தரப்பில் இருந்து தெரிவித்தால்கூட, உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்" என்கிறார்.

பட மூலாதாரம், PMO
அ.தி.மு.க சொல்வது என்ன?
``பிரதமருடனான அ.தி.மு.க தலைவர்களின் சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகிறதே?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தோம். தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதன் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. அவர்களுடன் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியாகும் தகவலை முழுவதுமாக மறுக்கிறோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












