தமிழ்நாடு அரசியல்: "இபிஎஸ் ஒரு சர்வாதிகாரி, அதிமுகவை மீட்போம்" - அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பேட்டி

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அ.தி.மு.கவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகக் கூறி அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பெங்களூரு புகழேந்தியை அக்கட்சி மேலிடம் நேற்று நீக்கியது. தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.கவின் முகமாக வலம் வந்தவருக்கு, இந்த நடவடிக்கை மூலம் அ.தி.மு.க தலைமை, `திடீர்' அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
``உங்களை நீக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?" என பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``என்னை நீக்கியதை ஒரு செய்தியாக நான் பார்க்கவில்லை. முன்னாள் முதல்வர் அம்மாவின் வழக்கில் ஒருங்கிணைப்பாளராக இருந்து அதனை 15 ஆண்டுகள் நடத்தியிருக்கிறேன். அம்மாவின் செல்லப்பிள்ளையாக பழனிசாமியை விடவும் நான் இருந்துள்ளேன். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நீக்கியுள்ளனர். இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு பொதுச் செயலாளர் என்ற பதவியை நோக்கி பழனிசாமி நகர்ந்து கொண்டிருக்கிறார். அதன் பிரதிபலிப்பாகத்தான் என்னை நீக்கியுள்ளனர்.
`இந்த கட்சி முழுவதுமாக கைப்பற்றப்பட்டுவிட்டது' என்று நினைக்கிறேன். தொண்டர்களோடு தொடர்பில் இல்லாதவர்களை எதிர்த்துக் கேட்டால் இப்படித்தான் நடக்கும் என்பதைப் போல என்னை நீக்கியுள்ளனர். `எடப்பாடி கையில் இருந்து கட்சியை மீட்டெடுத்தால்தான் இந்தக் கட்சி காப்பாற்றப்படும்' என தொண்டர்களும் மற்ற நிர்வாகிகளும் உணர வேண்டும். நான் ஒரு தவறும் செய்யவில்லை. அம்மா உயிரோடு இருந்தபோது, இந்தக் கட்சியை யாராவது குறை கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.கவை விமர்சித்த பாட்டாளி மக்கள் கட்சியை கேள்வி கேட்டதற்காக நீக்குகிறார்கள் என்றால், இந்தக் கட்சியில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை."
``கட்சியில் இருந்து உங்களை நீக்கிய நேரத்தில் நீங்கள் தலைமைக் கழகத்தில்தானே இருந்தீர்கள்?"
``ஆமாம். அங்கிருந்து வெளியே வந்தபோது பன்னீர்செல்வத்துடன் அவரது வீட்டுக்குச் சென்றேன். என்னுடன் மனோஜ் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் வந்திருந்தனர். இதற்கு முதல் நாளே, `துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம், உங்களை இரண்டாம் கட்ட தலைவராக வைத்திருக்க முடிவு செய்துவிட்டார்கள். அந்த வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்' என நாங்கள் அனைவரும் ஓ.பி.எஸ்ஸிடம் வலியுறுத்தினோம். மறுநாள் தலைமைக் கழகத்தில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு, `நீங்கள் துணைத் தலைவர் பதவியை ஒப்புக் கொண்டதாகத் தகவல் வருகிறது' என ஓ.பி.எஸ்ஸிடம் கேட்டோம்.
`என்னை கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கி விட்டனர். வேறு ஒரு தவறும் நடந்து விட்டது' எனக் கூறிவிட்டு, என்னை நீக்கியது பற்றி தெரிவித்தார். அதுவரையில் எதுவும் தெரியாத அப்பாவியாகத்தான் அவரது வீட்டுக்கு வந்தேன். என்னிடம் ஓ.பி.எஸ் பேசும்போது, `இது தவறான முடிவுதான். நீங்கள் சற்று அமைதியாக இருங்கள், கட்சியை கைப்பற்றி விட்டு மிரட்டும் அளவுக்கு வந்து விட்டார்கள்' என்றார். அருகில் இருந்தவர்களும், `புகழேந்தியை நீக்கும் அளவுக்கு வந்து விட்டார்களா?' என அதிர்ச்சியோடு கேட்டனர்."

பட மூலாதாரம், TWITTER
``கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இருக்கிறார். நீங்கள் அவரது ஆதரவாளராகப் பார்க்கப்பட்டவர். உங்களை நீக்கும் அறிக்கையில் அவர் கையொப்பம் போடாமல் இருந்திருக்கலாமே?"
``நிச்சயமாக அவ்வாறு செய்திருக்கலாம். அம்மா கட்டுக்கோப்பாக வைத்திருந்த இயக்கம் இது. என்னை நீக்கும் முடிவுக்கு ஓ.பி.எஸ் விருப்பம் தெரிவிக்க மாட்டார் என்று தான் நினைத்தேன். ஆனால், அங்கு அவருடைய நிலையே சரியில்லை. ஒருவேளை கையொப்பம் போடாமல் இருந்திருந்தால் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தே அவரை நீக்கி விடவும் தயாராக இருந்ததை உணர்ந்துதான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் துணிந்துவிட்டதாகவே பார்க்கிறேன். ஆனால், இன்றும் அவர் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். இந்தக் கட்சியை சர்வாதிகாரியாக இருக்கும் பழனிசாமியிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அம்மாவை விட நான்தான் பெரிய ஆள் என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு வலம் வருகிறார். பா.ம.கவை எதிர்த்து நான் பேசியதற்காக நீக்கிவிட்டனர். இதனை தொண்டர்கள் விரும்பவில்லை."
``தர்மயுத்தத்தை ஓ.பி.எஸ் தொடங்கிய காலத்தில் அவரோடு சென்ற கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் தற்போது எடப்பாடி பக்கம் வந்துவிட்டனர். அப்படியானால், ஓ.பி.எஸ்ஸை நம்பிச் சென்றவர்களை அவர் காப்பாற்றுவதில்லை என்ற வாதம் உண்மையா?"
``இந்தக் கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். `உங்களுக்கு இப்படிப்பட்ட கதி ஏற்படும்' என இதற்கு முன்னரே பலரும் என்னை எச்சரித்தனர். அதையும் மீறி நம்பிக்கையோடுதான் அவருடன் பயணம் செய்தேன். இப்போது நான் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன். எடப்பாடியின் அடுத்த இலக்கு மனோஜ் பாண்டியன்தான். அவர் கொறடாவாக வருவார் என எதிர்பார்த்தேன். அந்தப் பதவியை அவருக்குக் கொடுக்காமல் டம்மி ஆக வைத்துள்ளனர். மதுரையில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவாக இருக்கும் ஒருவர்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எட்டப்பன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே, வேறு வழியில்லாமல்தான் ஓ.பி.எஸ் கையொப்பம் போட்டதாகவே நினைக்கிறேன்."
``எட்டப்பன் என நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?"
``பெயரைக் கூற முடியாது. நேரம் வரும்போது பேசுகிறேன்."
`உங்களைக் கட்சியில் இருந்து நீக்கியது ஆச்சரியமளிக்கிறது' என்கிறாரே சசிகலா?
``அவர் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. அண்ணா தி.மு.கவை பா.ம.க தவறாகப் பேசியபோது, அதனை எதிர்த்துப் பேசியதற்காக நான் நீக்கப்பட்டதை அவர்ஆச்சரியமாகப் பார்க்கிறார்."
``சசிகலாவை எதிர்த்து கே.பி.முனுசாமியை பேட்டியளித்தார். நீங்கள் கே.பி.முனுசாமிக்கு எதிராகப் பேசியதும் நீக்கத்துக்கான காரணமாக இருக்கலாமா?"
``தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில், `இந்தக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு சசிகலா வந்தால் பரிசீலிக்கலாம்' என்றார். `இந்த விவகாரத்தில் இரண்டு தலைவர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு, நானும் முனுசாமியும் முடிவெடுக்க முடியாது' என்றுதான் கூறினேன். பா.ம.கவை பற்றி நான் பேசியதுதான் பிரதான காரணம்."
``உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?"
``எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.கவில் இருந்தே நீக்குவதுதான்."
``நீங்கள்தான் இப்போது கட்சியிலேயே இல்லையே. பிறகு எப்படி சாத்தியம்?"
``நிச்சயமாக நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்," என்றார் புகழேந்தி.
பிற செய்திகள்:
- கொரோனா மரணம் என குறிப்பிட்டு சான்றிதழ் தர மருத்துவமனைகள் தயங்குவது ஏன்?
- ஓபிஎஸ் சமரசம் ஆனது ஏன்? அதிமுக கூட்டத்தில் கடைசி நேர அதிரடி
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












