கொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; அ.தி.மு.கவை பலவீனப்படுத்த தி.மு.கவின் வியூகம் என்ன? - தமிழ்நாடு அரசியல்

Edappadi k palaniswami

பட மூலாதாரம், Edappadi k palaniswami official facebook page

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.கவை பலவீனப்படுத்தும் பணிகளில் தி.மு.க ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில் முக்கிய அதிமுக பிரமுகராக வலம் வந்த சிந்து ரவிச்சந்திரன், தி.மு.கவில் ஐக்கியமாகிவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக வேறு சிலரை வளைக்கும் வேலைகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது கொங்கு மண்டல அ.தி.மு.கவில்?

கொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதில் கொங்கு மண்டலத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.கவே வெற்றி பெற்றது. அதேநேரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தி.மு.க களமிறங்கியது.

இதில், ஈரோடு மேற்கில் முத்துச்சாமியும் அந்தியூரில் வெங்கடாச்சலமும் வெற்றி பெற்றனர். பவானி, கோபி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தி.மு.க தோல்வியடைந்தது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், 2011, 2016 ஆகிய தேர்தல்களில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதிகளில்கூட தி.மு.க வெற்றி பெறவில்லை என்பதுதான்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `எங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேவை செய்வோம்' என மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, கொங்கு மண்டலத்தில் தி.மு.கவை வளர்த்தெடுக்கும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கொரோனா தடுப்புப் பணிகள், கோயம்புத்தூருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவதற்கு பிரதமரிடம் பரிந்துரை ஆகியவை அதன் ஓர் அங்கமாக உள்ளன. இரு ஒருபுறம் இருந்தாலும் அ.தி.மு.கவின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் சில வியூகங்களை தி.மு.க வகுத்துள்ளது. அதன் ஒருகட்டமாக, ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.கவில் முக்கியமானவராகப் பார்க்கப்படும் சிந்து ரவிச்சந்திரனை தி.மு.க தன்பக்கம் இழுத்துள்ளது. இவர் அ.தி.மு.க வர்த்தக அணியின் மாநில செயலாளராக இருந்தார்.

துரோகம் செய்தாரா செங்கோட்டையன்?

அ.தி.மு.கவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும், தமிழ்நாடு சிமெண்ட் வாரியத் தலைவராகவும் எடப்பாடி பழனிசாமி இருந்த காலகட்டத்தில், ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் தமிழ்நாடு சிறுதொழில் வாரியத் தலைவராகவும் சிந்து ரவிச்சந்திரன் இருந்துள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வலதுகரமாகவும் அறியப்பட்டவர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

பட மூலாதாரம், Sindhu ravichandran facebook

``இப்படியொரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது?" என சிந்து ரவிச்சந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மாவட்ட செயலாளராக இருந்த காலட்டத்தில் நான் பரிந்துரை செய்த பலரும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் எனப் பல பதவிகளை அடைந்தனர். ஆனால், எனக்கு மட்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தத் தேர்தலில் கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் போட்டியிடுவதால் எனக்கு அந்தியூர் தொகுதியைக் கேட்டேன். `அங்கு வேளாளர் சமூகத்துக்கு கொடுக்காமல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவருக்குத்தான் வாய்ப்பு' எனத் தகவல் கிடைத்ததால், `எனக்கு உறுதியாக சீட் கிடைக்கும்' என நம்பினேன். ஆனால், சீட் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக, செங்கோட்டையனிடம் பேசும்போது, ``உனக்கு கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக ராஜ்ய சபா சீட் தரலாம் என எடப்பாடி கூறிவிட்டார்'' என்றார். இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துக் கேட்டேன். அவர் என்னிடம், ''உனக்கு சீட் கொடுப்பதை நான் எப்படி மறுப்பேன்? நீயும் நானும் ஒரேநேரத்தில் மாவட்ட செயலாளராகவும் வாரியத் தலைவராகவும் இருந்துள்ளோம். தலைமைக் கழக நிர்வாகியாக உள்ள 80 பேரில் நீயும் ஒருவன். உன்னை எப்படி வேண்டாம் எனக் கூறுவேன்,'' என்றார். எனக்குப் பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது. `இத்தனை நாள் நம்பி ஏமாந்து போய்விட்டோமே' என வருத்தப்பட்டேன்" என்றார்.

'உண்மையைச் சொன்ன எடப்பாடி பழனிசாமி'

`` கே.ஏ.செங்கோட்டையனின் வலதுகரமாக இருந்தீர்கள், உங்களுக்கு எதிராக அவர் செயல்பட வேண்டிய அவசியம் என்ன?" என்றோம். `` எனக்கும் அவருக்கும் தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்தது. நான் சிறு வயதிலேயே மாவட்ட செயலாளர் ஆகிவிட்டேன். வாரியத் தலைவராக இருந்ததால் சைரன் வைத்த கார் எல்லாம் கொடுத்திருந்தார்கள். அப்போது அவர் பதவியில்லாமல் இருந்தார். மாவட்ட செயலாளர் அலுவலகம் திறப்பு, பொதுக்கூட்டம் என அவர் இல்லாமலேயே பல நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்.

Sindhu ravichandran

பட மூலாதாரம், Sindhu ravichandran facebook

படக்குறிப்பு, ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் தமிழ்நாடு சிறுதொழில் வாரியத் தலைவராகவும் சிந்து ரவிச்சந்திரன் இருந்துள்ளார்

``சீட் மறுக்கப்பட்டபோதே கட்சியில் இருந்து வெளியேறியிருக்கலாமே?" என்றோம். `` அப்போது வேட்பாளரை அறிவித்துவிட்டதால் கட்சிக்காக தேர்தல் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடியை சந்தித்தபோதுதான், இந்தத் தகவல்கள் எனக்குத் தெரிய வந்தன. இதன்பிறகு, `மறுபடியும் 5 வருடங்கள் செங்கோட்டையனோடு நிற்க வேண்டுமா?' என்பதால்தான் வெளியேறினேன். அவரோடு நான் பல வருடங்கள் பயணித்துவிட்டேன். இந்த மாவட்டத்தில் உள்ள அத்தனை கிளைகளுக்கும் கொடிக் கம்பம் வைத்துள்ளேன். நகர செயலாளர் முதல் மாவட்ட செயலாளர், மாநில செயலாளர் எனப் பல்வேறு பதவிகளைக் கடந்து வந்துள்ளேன். இதன்பின்னால் எத்தனையோ வலிகள் உள்ளன" என்றார்.

``உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?" என்றோம். `தி.மு.க தலைவரை நேரில் சந்தித்தபோது, ` உரிய அங்கீகாரம் கிடைக்கும், சிறப்பாக வேலை பாருங்கள்' என்றார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கொரோனா தொற்று முடிந்ததும் இருபதாயிரம் பேரைத் திரட்டி பெரிய அளவில் இணைப்பு விழாவை நடத்த உள்ளேன்" என்றார்.

`போனால் போகட்டும்`

சிந்து ரவிச்சந்திரனின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். அவர் சார்பாக, நம்மிடம் பேசிய அவரது உதவியாளர் கதிர் முருகன், `` சிந்து ரவிச்சந்திரன் போனால் போகட்டும். அவர் தி.மு.கவில் விருப்பப்பட்டு சேர்ந்துள்ளார். தற்போதுள்ள மனநிலையில் சிந்து ரவிச்சந்திரன் பற்றிப் பேசுவதற்கு அவர் (செங்கோட்டையன்) தயாராக இல்லை" என்றார்.

இதையடுத்து, ``தி.மு.கவின் அடுத்தகட்ட வியூகங்கள் என்ன?" என கொங்கு மண்டல தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு மண்டலத்தில் கூடுதல் கவனத்தை தி.மு.க தலைமை செலுத்தத் தொடங்கியுள்ளது. இதற்காக அ.தி.மு.கவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலரை வளைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. அதன் முதல் விக்கெட்டாக சிந்து ரவிச்சந்திரன் இருக்கிறார். அடுத்தகட்டமாக, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீது அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர்கள் பலரும் தி.மு.கவில் ஐக்கியமாக உள்ளனர்," என்றார்.

செந்தில் பாலாஜியின் வியூகமா?

செந்தில் பாலாஜி

"இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் எனப் பலரிடம் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் எஸ்.பி.வேலுமணியால் பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். தி.மு.கவில் சிந்து ரவிச்சந்திரன் இணைவதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய காரணமாக இருந்தார். மற்ற மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க சீனியர்களைக் கொண்டு வரும் பொறுப்பும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுதவிர, அதிருப்தியாளர்களின் பட்டியலை சேகரிக்கும் பொறுப்பை உளவுத்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இனி வரும் நாள்களில் அடிக்கடி இணைப்பு விழாக்களை பார்க்கலாம்" என்றார் அந்தத் திமுக நிர்வாகி.

தி.மு.கவின் புதிய முயற்சிகள் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இது ஒன்றும் புதிதல்ல. இது எப்போதும் தி.மு.க செய்கின்ற அரசியல் தந்திரம்தான். கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக உள்ளது. அதற்குப் பலம் சேர்க்க வேண்டும் என்றால், பலமுள்ள இடத்தில் இருந்து ஆள்களை எடுக்கத் திட்டமிடுவார்கள். எங்களிடம் இருந்து சென்ற செந்தில் பாலாஜி உள்பட 8 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளனர். அந்தளவுக்கு தி.மு.க பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்" என்கிறார்.

`அ.தி.மு.க என்கின்ற கடல் வற்றாது`

தொடர்ந்து பேசியவர், `` அ.தி.மு.கவில் இருந்து சிலர் பிரிந்து செல்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. சிந்து ரவிச்சந்திரனுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர் வர்த்தக அணியின் மாநில செயலாளராக இருந்தவர். அதுமட்டுமல்லாமல், எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளை கொடுத்துவிட முடியாது. அதற்குரிய நேரம் வரும்போது பதவிகள் தானாக தேடி வரும். அது கிடைக்காத சூழலில் திசைமாறி செல்வது வழக்கமானதுதான். இந்தக் கட்சியில் 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர். இந்தக் கடல் நீரில் கையளவு நீரை எடுத்தாலும் வாளியை வைத்து அள்ளினாலும் அ.தி.முக என்கின்ற கடல் வற்றாது" என்கிறார்.

``ஒருபக்கம் அ.தி.மு.கவில் உள்ள அதிருப்தியாளர்களிடம் சசிகலா பேசி வருகிறார். மறுபுறம் முக்கிய நிர்வாகிகளை தி.மு.க இழுக்கிறது. இது அ.தி.மு.கவை பலவீனப்படுத்தாதா?" என்றோம். `` சசிகலாவையும் தி.மு.கவையும் பிரித்துப் பார்க்க வேண்டாம். எங்களிடம் இருந்து தே.மு.தி.க பிரிந்து சென்றதற்கும் தி.மு.கதான் காரணம். மற்றவர்களை பலவீனப்படுத்தினால் நாம் பலம் பெறுவோம் என தி.மு.க நம்புகிறது. இதனை அவர்கள் ஒரு யுக்தியாகவே கையாள்கின்றனர்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :