தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி; மண்ணின் மைந்தர்களுக்கே வேலை - முதல்வரிடம் வலியுறுத்தும் வி.சி.க

தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், @CMOTamilnadu

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்' என்ற கோரிக்கைகள் வேர்விடத் தொடங்கியுள்ளன. `ஒன்றியம் என்ற வார்த்தையின் நீட்சியாக தனிக்கொடி முழக்கத்தைப் பார்க்கிறோம். கர்நாடகாவை போல நமக்கும் தனிக்கொடி அவசியம்' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள். தனிக்கொடி சாத்தியமா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பான்மை எண்ணிக்கை பலத்தோடு தி.மு.க ஆட்சியமைத்தது. இதன்பிறகு `மத்திய அரசு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் `ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி வந்தார். இதுதொடர்பாக கடந்த 23ஆம் தேதி சட்டசபையில் கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், `ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து முதலமைச்சர் விளக்க வேண்டும்' என்றார்.

நயினாரின் கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், `ஒன்றிய அரசு என கூறுவதை குற்றமாகக் கருத வேண்டாம். நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதைத்தான் நாங்கள் கூறுகிறோம். சட்டத்தில் இல்லாத ஒன்றை நாங்கள் பயன்படுத்தவில்லை. அண்ணா, கலைஞர் கூறாததை நாங்கள் சொல்வதாகவும் விமர்சிக்கின்றனர். 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அண்ணா பேசியிருக்கிறார். எனவே ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. இதை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். இது கூட்டாட்சித் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வார்த்தை' என்றார்.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், `உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்' என்றார்.

தனிக்கொடி முழக்கம் ஏன்?

விசிக தமிழர் கொடி

பட மூலாதாரம், VCK, Facebook

படக்குறிப்பு, விசிகவின் தமிழர் இறையாண்மை மாநாட்டில் வெளியிடப்பட்ட கொடி.

இதன் தொடர்ச்சியாக, `தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி' என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. ``அரசியலமைப்புச் சட்டத்தில், அந்தந்த மாநிலங்கள் தனிக்கொடி அமைத்துக் கொள்ளவதற்கு எந்தத் தடையும் சொல்லப்படவில்லை. தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தைப் பல்வேறு வடிவங்களில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. கடந்த 2010 ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் `தமிழர் இறையாண்மை மாநாடு' ஒன்றை நடத்தினோம். அதில், தமிழருக்கான கொடியை அறிமுகப்படுத்தினோம். தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனும் தனிக்கொடி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, தனிக்கொடி தொடர்பாக சட்டசபையில் சி.பா.ஆதித்தனார் பேசியிருக்கிறார். இவற்றையெல்லாம்விட முன்னாள் முதல்வர் கருணாநிதி டெல்லியில் தனிக்கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். தேசியக் கொடியோடு தமிழ்நாடு அரசின் கோபுர இலச்சினையோடு அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு.

கருணாநிதி வடிவமைத்த தனிக்கொடி

கருணாநிதி

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து சில தகவல்களைப் பட்டியலிட்டவர், "இந்திரா காந்தியை 1970ஆம் ஆண்டில் சந்திக்கும்போது தனிக்கொடி கோரிக்கையை கருணாநிதி முன்வைத்தார். `இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கான கருத்து வேறுபாடு என்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது,' எனவும் அவர் விளக்கமளித்தார். `அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்கள் தனிக்கொடி வைத்திருப்பதை யாரும் தடுக்க முடியாது, இது தமிழருக்கான கொடி' என கருணாநிதி பேசினார்."

"இதற்கு அப்போது எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால், எங்களுடைய கோரிக்கையெல்லாம், `தற்போதுள்ள தேசியக் கொடி என்பது இந்திய ஒன்றியத்துக்கான கொடியாக உள்ளது. ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் ஒரு கொடி வேண்டும்' என்பது தான் என கூறினார்."

"ஒவ்வோர் ஆண்டும் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியன்று கர்நாடகாவில் தனிக் கொடியை ஏற்றி வருகின்றனர். அதை எதிர்த்து ஒருவர் வழக்கு போட்டாலும் அது அப்படியே நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. "

"2000ஆம் ஆண்டில் எடியூரப்பாவே இந்தக் கொடியை பா.ஜ.க சார்பில் ஏற்றியுள்ளார். ஜம்மு காஷ்மீரீல் தனிக்கொடி உள்ளது. வி.சி.க வடிவமைத்த தமிழருக்கான கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறம், நட்சத்திர சின்னம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்கு மாற்றாக தனிக்கொடியை பார்க்கிறோம். "

தற்போது தமிழ்நாட்டில் தமிழருக்கான அரசு அமைந்துள்ளது. ஸ்டாலினும், `ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொண்டே இருப்போம்' எனக் கூறியுள்ளார். அதன் ஓர் அங்கமாகத்தான் தனிக்கொடி கோரிக்கையை பார்க்கிறோம். ஒன்றிய அரசு என்ற வார்த்தையின் அடுத்தகட்ட நகர்வு என்பது தனிக்கொடிதான். இதன்மூலம் தமிழ்நாடு கூடுதல் கவனம் பெறும் என நினைக்கிறோம்" என்கிறார்.

நாட்டுக்கு எதிரியா?

விசிக கொடி

பட மூலாதாரம், VCK, Facebook

இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்துப் பேசும் திட்டம் உள்ளதா? எனக் கேட்டோம். "எங்கள் தலைவர் திருமாவளவன் மூலமாக முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம். இது ஒன்றும் தவறான காரியம் அல்ல. ஏற்கெனவே கொடி உள்ள மாநிலங்களைப் பார்த்துத்தான் இதனை முன்வைக்கிறோம்.

இதனை ஒரு கோரிக்கையாக முன்னெடுப்பது தொடர்பாக வி.சி.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எங்கள் தலைவர் வழிகாட்டுவார். தமிழ்நாடு முதல்வரும் இதனை சட்டசபையில் தீர்மானமாகக் கொண்டு வந்து அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்படுத்த வேண்டும்," என்கிறார்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு தினம் (நவம்பர் 1) கொண்டாடப்பட்டபோது, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் தனிக்கொடியை பெரியாரியவாதிகள் சிலர் அறிமுகம் செய்தனர். இதற்காக சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, "தமிழ்நாட்டின் அடையாளமாக தனிக்கொடி பறக்கவிட்டதற்காக, பொழிலன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்து, `நாட்டுக்கு எதிரி' என்ற பிரிவுகளின்கீழ் வழக்குகள் புனைந்து, சிறையில் அடைத்திருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். எனவேதான், அரசு அமைப்புச் சட்டம் யூனியன் ஆஃப் இந்தியா என்று குறிப்பிடுகின்றது. இந்தக் கருத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நான் பலமுறை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன். புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ளேன்" என கூறினார்.

வைகோ கொதிப்பு

வைகோ

பட மூலாதாரம், வைகோ

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல. அது 50 மாநிலங்கள் சேர்ந்த ஓர் ஒன்றியம். அங்கே ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி, தனி அரசு முத்திரை இருக்கின்றது. தனித்தனிச் சட்டங்களும் உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கியிருந்த, தனிக் கொடி ஏற்றும் உரிமையை பா.ஜ.க அரசு பறித்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தனக்கென ஒரு தனிக் கொடியை உருவாக்கியது. அதற்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்து இருக்கின்றது. அங்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கன்னட கொடி ஏற்றப்படுகின்றது. அதுபோல, தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை; அதைத் தடுக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தார் வைகோ.

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை

இதே கருத்தைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக, `மண்ணின் மைந்தர்களுக்கே வேலை' என்ற முழக்கத்தையும் வி.சி.க முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் வன்னியரசு, "தனிக்கொடி கோரிக்கையைப் போலவே இதுவும் மிக முக்கியமானது. `மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வேலை' என கர்நாடகம், பிகார், பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, `வெளிமாநிலத்தில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களைக் கணக்கெடுத்து உள்ளூர் ஆள்களுக்கு வேலை கொடுக்க முயற்சி செய்வோம்' எனக் கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும், `மாநில குடிமக்களில் 90 சதவிகிதம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும்' என்கிறது. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள், `75 சதவிகிதம் பேருக்கு வேலையை கொடுப்போம்' எனக் கூறியுள்ளன. நாங்கள், `90 சதவிகிதம் கொடுக்க வேண்டும்' என்கிறோம்.

காரணம், நெய்வேலியில் பொறியாளர்களுக்கான 1,558 பணியிடங்களில் தேர்வான 1,550 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதில் எட்டு பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மத்திய அரசின் தொல்லியல் துறையில் திட்டமிட்டே வட இந்தியர்களை வேலையில் அமர்த்துகின்றனர்.

இதைக் கண்டறிந்து தீர்வு கொடுக்க வேண்டும் என்றால் இதற்கான செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். `மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு' என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சிகளைக் கூட்டியும் தீர்மானத்தை நிறைவேற்றலாம். இது தமிழர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கும். இதனையும் ஒரு கோரிக்கையாக முன்னெடுக்க உள்ளோம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :