'இந்திய ஒன்றியம்' என்ற வார்த்தையால் எழுந்த சர்ச்சை: தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

தமிழிசை சௌந்தரராஜன்
படக்குறிப்பு, தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி அமைச்சரவையில் பதவியேற்பின்போது "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு" என்று ரகசிய காப்பு பிரமாணத்தில் இடம்பெற்ற வார்த்தை பேசுபொருளாக மாறியுள்ளது.

சமீப காலமாக மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் பேச்சிலும், எழுத்திலும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு தமிழக பாஜக தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஒன்றிய அரசு என்று சொல்வது தவறானது என்றும், மத்திய அரசு என்று சொல்வதே சரியானது என்றும் கருத்து தெரிவித்தனர்.

இந்த சூழலில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதில் பதவியேற்ற என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்களாக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அப்போது அமைச்சர்கள் ஒவ்வொருவரும், "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில் என்னுடைய கடைமைகளை உண்மையாகவும், மனச்சான்றின் படியும் ஆற்றுவேன்" என்ற உறுதிமொழியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூற, அதை பதவியேற்ற அமைச்சர்களும் அப்படியே கூறினர்.

இதையடுத்து 'இந்திய ஒன்றியம்' என்று குறிப்பிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டாக கூறி, சமீபத்தில் கூறுபட்டு வந்த 'ஒன்றிய அரசு' என்பதற்கு ஆதரவாக கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கு மற்றொரு‌ சாரார் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

'இந்திய ஒன்றியம்' என்ற வார்த்தையால் எழுந்த சர்ச்சை: தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

"கடந்த 27ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. அதில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அத்தகைய நிகழ்வில், அரசியலமைப்பு சட்டத்தின்படி, பல ஆண்டுகளாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல், தமிழில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த பெருமையை மறைக்கும் அளவில் 'இந்திய ஒன்றியம்' என்ற வார்த்தையை வேண்டுமென்றே திரித்துக் கூறப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் எங்கும் பயன்படுத்தவில்லை. ஆனால் ஒன்றிய அரசு என்று துணை நிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எவ்வாறு தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம் என்று கூறினார்களோ அதேபோல் "Indian Union Territory of Puducherry" என்ற வாசகம் "இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு" என அழகாக, வெகுகாலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழ் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த படிவம்தான் வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."

வரலாற்று பின்னணி

"பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து, அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை 'Indian Union Territory' என்கிறார்கள். அதாவது 'இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு'. இங்கு ஒன்றியம் எனக் குறிப்பிடுவது Union Territory என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கையுமே மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக்கூறுவது கண்டிக்கத்தக்கது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, புதுச்சேரி இந்திய அரசின் ஆளுமைக்குட்பட்டு இருக்கும் நிலப்பரப்பு என்பதாலேயே இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு என்று சொல்கிறோமே தவிர இந்திய தேசத்திற்கான மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழா அங்கே நடைபெறவில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

"மாநில அரசின் பதவி ஏற்பு விழாவில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம்பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்பது உள்நோக்கம் கொண்டது."

'இந்திய ஒன்றியம்' என்ற வார்த்தையால் எழுந்த சர்ச்சை: தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

மேலும், "தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால் அதன் மாண்பை மறைக்கும் அளவிற்கு தவறாக இந்த ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சில தேவையற்ற சலசலப்புகளால் பலர் தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குலைக்க முயல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது," என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் மே மாதம் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றபோதும், கடந்த 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி முதல்வராக பதவியேற்றபோதும், ரகசிய காப்பு பிரமாணத்தில் இருந்த இதே உறுதிமொழியைத் தான் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :