அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? உள்ளாட்சி தேர்தலில் தனித்துக் களமிறங்கும் பா.ஜ.க - தமிழ்நாடு அரசியல்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு பா.ஜ.க தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் செயற்குழுவில் நிர்வாகிகள் விவாதித்துள்ளனர். `தேர்தலில் அதிகப்படியானோருக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவு' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில்?
தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், `வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதையடுத்து, தி.மு.க, பா.ஜ.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பலவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இதுதொடர்பாக, கடந்த 25ஆம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதேநாளில், தமிழ்நாடு பா.ஜ.கவின் செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூடிய இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், கோட்டங்களின் செயலாளர்கள் என 150 பேர் பங்கேற்றுள்ளனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.கவின் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், ` உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள். யாரெல்லாம் போட்டியிட வேண்டும் என்ற பட்டியலையும் தயார் செய்யுங்கள். நாம் தனித்துப் போட்டியிட உள்ளோம்' எனப் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ` உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நேரத்தில் அப்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பா.ஜ.கவை பொறுத்தவரையில் கூட்டணி உள்ளிட்ட கொள்கை முடிவுகளை தேசிய அளவிலேயே எடுப்பது வழக்கம். உள்ளாட்சியில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அப்போதுள்ள சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்' என்றார்.
என்ன நடந்தது பா.ஜ.க செயற்குழுவில்?

பட மூலாதாரம், @Murugan_TNBJP
`` காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 30 கோட்டங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர். கோட்டம் என்றால், கோவை, நீலகிரி, கோவை வடக்கு, கோவை நகரம், கோவை தெற்கு ஆகியவை கோவை கோட்டமாக பார்க்கப்படும். அந்த வகையில் 150 பேர் வரையில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகள் பேசியுள்ளனர். கூடவே, 6 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன" என்கிறார் தமிழ்நாடு பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர்.
தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசியவர், `` தி.மு.க அரசைக் கண்டித்தே பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானமாக, கோவிட் தொற்றை மிகச் சிறப்பாகக் கையாண்டு வரும் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்து நிறைவேற்றப்பட்டன. அடுத்து, தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த கூட்டணிக் கட்சிகள், தமிழ்நாடு பா.ஜ.க, தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மூன்றாவதாக, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பிரிவினைவாத எண்ணங்கள் தலைதூக்கும். அதன் ஒருபகுதியாக `ஒன்றியம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விளையாடி வருகிறார்கள். இது தேசவிரோத வார்த்தையாக இருப்பதால் கண்டனம் தெரிவிப்பதாக மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
150 வாக்குறுதிகள்
நீட் தேர்வை வரவேற்பது நான்காவது தீர்மானமாக இடம்பெற்றுள்ளது. ஐந்தாவதாக, தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் 150 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அதில், `ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவோம்' எனக் கூறிய பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நகைக்கடன் ரத்து, நீட் தேர்வு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆறாவதாக, கோயில்களின் சொத்துகளை பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் உள்ளது. அந்தச் சொத்துகள் தொடர்பாக எந்த முடிவை எடுப்பதற்கும் அரசாங்கத்துக்கும் உரிமையில்லை. `சந்திரர், சூரியர் உள்ளவரையில் கோயில் சொத்துகளை தொடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை' என செப்பேடுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. அர்ச்சகர் நியமனத்தில் தலையிடக் கூடாது, கோயில் நிலங்களை குத்தகைக்குக் கொடுப்பதையும் ஏற்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை எந்தவகையில் எதிர்கொள்வது என விவாதிக்கப்பட்டது" என்கிறார்.

பட மூலாதாரம், @Murugan_TNBJP
தனித்துப் போட்டி முடிவு ஏன்?
`` உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்குக் காரணம், எங்கள் கட்சியில் பல மாவட்டங்களில் செல்வாக்குள்ள நபர்கள் உள்ளனர். அவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் எனத் தலைமை விரும்புகிறது. அதுவே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அவர்களுக்கெல்லாம் சீட் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எங்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட செல்வாக்குள்ள நபர்கள் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்களுக்கும் சீட் கிடைத்திருந்தால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். அதற்கான வாய்ப்பாக உள்ளாட்சித் தேர்தலை பார்க்கிறோம். அதிகப்படியானோர் போட்டியிடும்போதுதான் கட்சி வளரும் என அகில இந்திய தலைமை நம்புகிறது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடக்கப் போகும் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது என செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அதிகப்படியான இடங்களில் வெல்ல முடியும் என நினைக்கிறோம்.
அடுத்ததாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளை இலக்காக வைத்து தேர்தல் வேலை பார்க்க இருக்கிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பிரதான கட்சியாக உருவெடுப்பது என முக்கியப் பணிகளை தலைமை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் வளர்வதை அகில இந்திய தலைமையும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறது. இதையொட்டி வரும் நாள்களில் அ.தி.மு.க கூட்டணியைத் தவிர்த்துவிட்டுப் பயணிக்கும் நோக்கில் தமிழ்நாடு பா.ஜ.க திட்டங்களை வகுத்து வருகிறது" என்றார் விரிவாக.
கூட்டணியால் பாதகமா?

பட மூலாதாரம், Sr sekar facebook page
``உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது ஏன்?" என தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` எந்தவொரு கட்சிக்கும் பலம் அதிகமாகும்போது அதன் பலனைப் பெறுவதற்கு விரும்பும். அந்தவகையில் கூட்டணியாக நின்றால் சாதகங்களும் உள்ளன, சில பாதகங்களும் உள்ளன. இதில் சாதகம் என்றால், கூட்டணியின் பலமும் சேர்ந்து எங்களுக்குக் கிடைக்கும். அதுவே, பாதகம் என்னவென்றால் போட்டியிடுவதில் எங்களுக்கான இடங்கள் குறையும். இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் போட்டியிட வேண்டும் என பா.ஜ.க தலைமை நினைக்கிறது. பா.ஜ.கவின் வளர்ச்சியையும் பலத்தையும் குறைவாக மதிப்பிட்டு கூட்டணியில் இடங்களை ஒதுக்கினால், தனித்துப் போட்டியிடுவோம்" என்கிறார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












