விஸ்மயா மரணம்: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை கொடுமை வழக்கு - ஆயுர்வேத மருத்துவ மாணவிக்கு என்ன நடந்தது?

விஸ்மயா

பட மூலாதாரம், Facebook

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் உயிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வன்முறை தொடர்பான புகார்களையும் வெளியே கொண்டுவந்துள்ளது.

மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவரின் பதவி விலகலும் இந்த ஓரிரு தினங்களில் நடைபெற்றுள்ளது.

திங்களன்று விஸ்மயா என்னும் ஆயுர்வேத மருத்துவத்தின் இறுதி ஆண்டு மாணவி குளியல் அறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரின் கணவர் எஸ். கிரண் குமார் கண்டதாகவும் கூறப்படுகிறது. கிரண் குமார் போக்குவரத்து துறையில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ளார்.

விஸ்மயாவின் கணவர் வீட்டினர் இது தற்கொலை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் தற்கொலை என்ற கோணத்தை தாண்டி பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

"இது கொலையா அல்லது தற்கொலையா என்ற விவாதம் தவறாகவுள்ளது. நாங்கள் இந்த வழக்கை 304(B) (திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் நிகழும் பெண்ணின் மரணம்) என்ற பிரிவிலும் பதிவு செய்துள்ளோம். இதற்கு ஏழு ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டை விதிக்கப்படும். கொலைக் குற்றத்திற்கு ஈடான தண்டனை. இது மிக கொடூரமான ஒரு தவறு," என கேரளாவில் தென் மண்டல ஐஜிபி ஹர்ஷிதா அட்டாலுரி பிபிசியிடம் தெரிவித்தார்.

கேரளாவில் விஸ்மயாவின் இறப்பு பல எச்சரிக்கை மணிகளை எழுப்பியுள்ளது. விஸ்மயா இறப்பை தொடர்ந்து ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அரசாங்கம் தெரிவித்த முதல் நாளில் 117 புகார்கள் பதிவாகின. இரண்டாம் நாளில் 154 புகார்கள் பதிவாகியுள்ளன.

"நாங்கள் குடும்ப வன்முறை தொடர்பாக பல புகார்களை பெறுகிறோம். இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் அனைத்து குடும்ப வன்முறை புகார்களும் வரதட்சணை சார்ந்தது இல்லை. இருப்பினும் அனைத்து வரதட்சணை கொடுமைகளும் குடும்ப வன்முறையின் கீழ் வரும்" என பிபிசியிடம் தெரிவித்தார் பத்தனம்திட்டா மாவட்ட முதன்மை காவல்துறை அதிகாரி நிஷாந்த்தினி. ஆர்.

நிஷாந்தினி மற்றும் அவரது குழுவினர் இந்த புகார்களை ஆராய்ந்து குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள், குடித்துவிட்டு தவறாக நடந்து கொள்வது, வரதட்சணை கொடுமை போன்ற புகார்களை காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த புகார்கள் ஒவ்வொன்றிலும் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற தெளிவான நடவடிக்கையும் காவல் நிலையங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

மாநில அளவில் இதை ஒருங்கிணைக்கும் அதிகாரி `புகார்கள் தொடர்ந்து குவிந்து வருவதாக` தெரிவிக்கிறார்.

விஸ்மயா வழக்கால் கேரளாவில் ஏற்பட்ட சீற்றத்தை புரிந்து கொண்ட ஆளும் சிபிஎம் கட்சியின் தலைமை தனது மத்திய கமிட்டி உறுப்பினரான எம்.சி. ஜோசஃபின், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்திற்கு பதவி விலக கோரியது.

பெண் ஒருவர் குடும்ப வன்முறை குறித்து புகார் ஒன்றை தெரிவிக்கும்போது, அவரிடம் ஜோசஃபின் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தீர்களா என்று கேட்டார் அதற்கு அந்த பெண் இல்லை என்றதும், `நீங்கள் தொடர்ந்து துன்புறுவதே நல்லது` என்று தெரிவித்தார் ஜோசஃபின். அவரின் இந்த கருத்துக்கு ஜோசஃபின் மன்னிப்பு கோரினாலும், கட்சி தலைமையின் கடினமான முடிவால் பதவி விலகுவதாக அறிவித்தார்.

விஸ்மயா வழக்கில் சீற்றமடைந்திருக்கும் பெண்களை கருத்தில் கொண்டே கட்சி தலைமை இந்த முடிவை எடுத்திருப்பது தெரிகிறது.

விஸ்மயா வழக்கு

"கடந்த வருடம் கிரணுடன் விஸ்மயாவிற்கு திருமணமானபோது எனது பெற்றோர் 1.25 ஏக்கர் நிலம், ரப்பர் தோட்டம், மற்றும் 100 சவரன் தங்க நகைகளை கிரணுக்கு வழங்கினர். அதன்பின்னும் அவர் தனக்கு கார் வேண்டும் என்று கேட்டார்" என பிபிசியிடம் தெரிவித்தார் விஸ்மயாவின் சகோதரர் விஜித் வி.நாயர்.

"ஜனவரி மாதம் எனது தந்தை லோன் எடுத்து அவருக்கு 12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி கொடுத்தார். ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை. எனது சகோதரி எனது வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் இரவில் குடித்துவிட்டு வந்து வேறு ஒரு நல்ல கார் வேண்டும் என்று எனது பெற்றோரின் கண்முன்னே விஸ்மயாவை அடித்தார்," என்றார் விஜித்.

விஸ்மயா தனது தாயின் வீட்டில் சிறிது காலம் தங்கியுள்ளார். ஆனால் கிரண் அவரை கல்லூரியிலிருந்து அழைத்து கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். தனது கணவரைவிட்டு பிரிந்து `தாய்வீட்டில் வந்து வசித்தால் நன்றாக இருக்காது` எனவும் எனவே தனது கணவருடன் தான் வாழ வேண்டும் என்றும் தனது தாயிடம் விஸ்மயா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

"கடந்த மூன்று மாதங்களாக அவள் எங்களிடமிருந்து மறைந்து வாழ்ந்தாள். இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அவர் தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கிரண் தன்னை படிக்க அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். நாங்கள் ஐஜிபி ஹர்ஷிதா அட்டலூரியிடம் இது கொலை என்று தெரிவித்துள்ளோம். இது இயற்கை மரணம் என்பதை நாங்கள் நம்பவில்லை" என்கிறார் விஜித்.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கிரண் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், "விஸ்மயா பாத்ரூமிலிருந்து நீண்ட நேரம் வராததால், பாத்ரூமிற்குள் சென்று பார்த்தபோது விஸ்மயா தனது உயிரை தானே மாய்த்துக் கொள்ள முயன்றதாக கிரண் தெரிவித்தார். அவர் அவரை படுக்கையறைக்கு கொண்டு சென்று விஸ்மயாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்" என ஐஜிபி ஹர்ஷிதா பிபிசியிடம் தெரிவித்தார்.

காணாமல்போன கிரன் மீது 498(A) மற்றும் 304(B) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரிவு 498 (A) என்பது கணவரோ அல்லது கணவரின் உறவினரோ பெண்ணுக்கு கொடுமை விளைவித்தால் பதியப்படும் பிரிவாகும்.

இதில் கொடுமை என்பது உடல்ரீதியாக வன்முறையை பிரயோகிப்பது அதன்மூலம் காயங்கள் ஏற்படுவது. அல்லது தற்கொலைக்கு தூண்டுவது அல்லது சொத்துகளுடன் பிரிந்து செல்ல வற்புறுத்துவது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராத்ததுடனோ அல்லது அபராதம் இல்லமலோ மூன்று ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்படும்.

பிரிவு 304 (B) என்பது, திருமணம் ஆன ஏழு வருடங்களுக்குள்ளாக பெண்ணில் உடம்பில் ஏதேனும் தீக்காயங்கள் அல்லது காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தாலோ, கணவராலோ அல்லது கணவரின் உறவினராலோ காயப்படுத்தப்பட்டுள்ளார் என்பது பெண்ணின் இறப்பிற்கு முன் தெரியவந்தாலோ அல்லது வரதட்சணையுடன் தொடர்புடைய இறப்பு. இதை "வரதட்சணை இறப்பு" என்பார்கள். அப்போது கணவரோ அல்லது அவரின் உறவினரோ பெண்ணின் இறப்புக்கு காரணமாக கருதப்படுவர் ஆகிய சூழல்களில் இந்த பிரிவு பதியப்படும்.

"கொலை என்ற கோணம் உட்பட அனைத்து கோணத்திலும் நாங்கள் விசாரத்து வருகிறோம்," என ஹர்ஷிதா தெரிவித்தார்.

`முகத்தில் காயங்களுடன்` தனது துயரம் குறித்து விஸ்மயா தனது நண்பர்களுக்கு அனுப்பிய புகைப்படம் "டிஜிட்டல் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு எங்களது குழுவினரால் ஆராயப்படுகிறது" என தெரிவித்தார் ஐஜிபி ஹர்ஷிதா.

இந்த புகைப்படங்கள் மற்றும் செய்திகள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக பெண்கள் மத்தியில்.

பிற வழக்குகள்

விஸ்மயா வழக்கு பொதுவெளிக்கு வந்த அடுத்த நாளில் பல குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை தொடர்பான புகார்கள் பதியப்பட்டன.

ஆலப்புழாவில் வள்ளிகுன்னம் என்னும் இடத்தில் 19 வயது சுசித்ரா உயிரிழந்துள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேங்கனூரில் 24 வயது அர்ச்சனா உயிரிழந்துள்ளார். இதில் அர்ச்சனாவின் கணவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சுசித்ராவின் கணவர் ராணுவத்தில் இருப்பதாகவும், தற்போது பணியில் இருப்பதால் ஊரில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் செய்தித்தாள் ஒன்று, ஐஜிபி ஹர்ஷிதா விஸ்மயாவின் பெற்றோர், அவரது கணவரின் வீடு ஆகியவற்றை ஒரே நாளில் பார்வையிட்டதுடன், குடும்ப வன்முறை குறித்து புகார் தெரிவித்த தனது மனைவியை கோடரியால் தாக்கிய கணவர் முகமது சலீமின் வீட்டிற்கு சென்றும் பார்வையிட்டார் என செய்தி வெளியானது. மலப்புரத்தில் வழிக்கடவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

இடுக்கி மாவட்டத்தில் தான்யா ஜெயபிரகாஷ் உயிரிழந்த வழக்கில் காணாமல் போன அவரின் கணவர் அமல் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் இது இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதியப்பட்டது. ஆனால் பின் தான்யா கொடுமை படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திருமணம்

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் திடீரென வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளது சற்று வியப்பாகவுள்ளது. ஏனென்றால் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை குடும்ப வன்முறை தொடர்பாக 1080 வழக்குகள் பதியப்பட்டிருந்தாலும் ஒரு வரதட்சணை இறப்பும் பதியப்படவில்லை. மாநிலத்தில் 2016 - 2020ஆம் ஆண்டு வரை 56 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவின் சமூக முரண்

"இங்கு புறக்கல்வி உள்ளது. ஆனால் மனதளவில் படிக்காதவர்களாக உள்ளோம். இது ஒரு சமூக முரண். எமோஷ்னல் இண்டலிஜென்ஸை காட்டிலும் சோஷியல் இண்ட்லிஜென்ஸ் குறைவாக உள்ளது," என்கிறார் கோழிக்கோடு பல்கலைக்க்ழகத்தின் சமூகவியல் துறை தலைவர் பேராசிரியர் முகமது ஹஃபிஸ்.

"கேரளாவில் நுகர்வு கலாசாரமும் பகட்டுத்தன்மையும் அதிகம். இங்கு நீங்கள் எவ்வளவு நகை வைத்துள்ளீர்கள் என்பது முக்கியம். இது திருமணத்தை மையமாக கொண்ட ஒரு சமூதாயமாக உள்ளது. திருமணச் சந்தையில் விலைப்போகும் ஒரு பொருளாக பெண்களை தயார்ப்படுத்துகின்றனர். பெண்ணின் துயரத்தை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை," என்கிறார்.

"ஒரு பெண் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகிறார் என்றால், அவளிடம் அதை சகித்து கொண்டு செல்லக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினர் எனது மகளுக்கு 100 சவரன் நகை வழங்கினோம் என்று தெளிவாக கூறிவிடுவார்கள். இதன் பொருள் அந்த பெண் வீட்டார் 125-150 சவரன் நகை வரை கொடுக்க வேண்டும். இது ஒரே ஒரு மதம் சார்ந்த விஷயம் என்று இல்லை." என்கிறா ஹஃபீஸ்.

அன்வேஷி பெண்கள் ஆலோசனை மையத்தை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்குரைஞர் ப்ரீதா, சமூகத்தில் பெரும் பாகுபாடு உள்ளதாக கூறுகிறார்.

"முன்னேறிய சமூகம் என்று சொல்லும் அதே நேரத்தில் ஒரு முறைமுகமான பாகுபாகு இங்கு நிலைவுகிறது. பெற்றொரால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் சாதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. குடும்பத்தின் சமூக அந்தஸ்து , பணம், சாதி இவைதான் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இங்கு பிற வரதட்சணை மரணங்களும் நடைபெறுகின்றன ஆனால் அவை விஸ்மயா வழக்கை போன்று பெரிதாக பேசப்படுவதில்லை. ஏனென்றால் விஸ்மயா உயர்சாதியை சேர்ந்தவர்." என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஹஃபீஸ் மற்றும் ப்ரீதா இருவருமே சமூக கண்ணோட்டங்கள் உறுதியாக மாற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

திருமணங்களின்போது 20 சவரன் நகைக்கு கூடுதலாக வழங்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் அதை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிறார் ஹஃபீஸ்.

மதம் சார்ந்த குழுக்களும் மாற்றத்தை கொண்டுவர பணியாற்ற வேண்டும் என்று ஹஃபீஸ் தெரிவிக்கின்றார்.

திருமணம் முறிந்து ஒரு பெண் தாய் வீட்டுக்கு திரும்பினால் இந்த சமூகம் எவ்வாறு அதனை ஏற்றுக் கொள்கிறது? எத்தனை குடியிருப்பு நல கூட்டமைப்புகள் தனியாக இருக்கும் பெண்களுக்கு வீடு கொடுக்கின்றது? என்ற கேள்விகளை முன் வைக்கிறார் ப்ரீதா

கடினமான ஒரு பிரச்னை குறித்து கேட்கப்படும் ஒரு கடினமான கேள்வி இது. இதற்கு விடை சொல்வதும் கடினம்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :