டெல்டா பிளஸ் திரிபு: கொரோனா தொடர்பு ஆபத்தை இப்போதே ஊகிப்பது கடினம்: ஆராய்ச்சியாளர்கள்

கொரோனா

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஐரோப்பாவில் முதல் முறையாக கண்டறி்யப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு, கவலைப்படக்கூடிய திரிபு என்றாலும் அதன் ஆபத்தை இப்போதே ஊகிப்பது கடினம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எளிதாக பரவுதல், கடுமையான சுகவீனத்தை ஏற்படுத்துதல், எதிர்ப்பணுக்களுக்கு எதிர்வினையாற்றும் திறன் அல்லது சிகிச்சை மற்றும் தடுப்பூசியின் திறனை குறைப்பது - இதில் ஏதேனும் ஒரு கடுமையான அறிகுறி இருப்பதாக தென்பட்டாலும், அந்த மரபணு பிறழ்வை, 'கவனிக்கக் கூடிய திரிபு' என்ற நிலையில் இருந்து 'கவலை தரக்கூடிய திரிபு' ஆக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.

டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த திரிபு, எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக கலப்பது, எதிர்ப்பணு ஆற்றல் சிகிச்சைக்கு எதிர்வினையாற்றுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயலாற்றுவது போன்ற தன்மைகளை கொண்டிருப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது.

இந்த டெல்டா பிளஸ் திரிபு, கவலை தரக்கூடிய பிறழ்வாக வகைப்படுத்தப்பட்டுள்ள டெல்டா திரிபுடன் தொடர்புடையது. இந்த டெல்டா திரிபு கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அப்போதே இது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை கோடை காலத்தில் தீவிரமாக்கும் என கணிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள ஆறு மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட 22 மாதிரிகளில் இந்த டெல்டா பிளஸ் திரிபு கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 22 மாதிரிகளில் 16 மாதிரிகள், கொரோனா பெருந்தொற்றின் கடுமையான தாக்கத்தை அனுபவித்து வரும் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டன.

எய்ம்ஸ் இயக்குநரின் எச்சரிக்கை

"கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால், அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கூடுதல் பாதிப்புகளை விட மிகவும் கடுமையான பாதிப்பை தரக்கூடிய டெல்டா பிளஸ் திரிபின் தாக்கத்தை நாம் மீண்டும் சந்திக்க நேரிடும்,"" என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

கொரோனா

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், போலாந்து, நேபாளம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலும் டெல்டா பிளஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மிகவும் கவலை தரக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ள டெல்டா திரிபு உலகின் 80 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த நிலையில், டெல்டா பிளஸ் தாக்கம் மருத்துவ உலகை மேலும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

வைரஸ்கள் எல்லா நேரத்திலும் உருமாறும் தன்மை கொண்டவை. அதில் பெரும்பாலான மாற்றங்கள் பொருத்தமற்றதாக இருக்கும். ஆனால் மற்ற மாற்றங்கள், நோய்வாய்ப்பட்ட நபரின் தொற்றை மேலும் கடுமையாக்கும் அல்லது, இருக்கும் வைரஸ் திரிபு மீது ஆளுமை செலுத்தி பாதிப்பை அதிகப்படுத்தக்கூடியவையாக இருக்கும்.

ஆனால் நோய்த்தொற்றியல் நிபுணர்கள், டெல்டா பிளஸ் திரிபை கவலைக்குரிய ஒரு திரிபு என அடையாளப்படுத்தியது பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த திரிபு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது பிற திரிபுடன் ஒப்பிடுகையில், நோயாளியின் பாதிப்பை கடுமையாக்கும் என்பதற்கு எந்த தரவுகளும் இதுவரை இல்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

"22 பேரிடம் இருந்து சேகரித்த மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு, புதிய திரிபு ஆபத்தானதுதான் என கூறுவதற்கு எந்த தரவும் இல்லை," என்கிறார் ஆராய்ச்சியாளரான ககன்தீப் கங். இவர் லண்டன் ராயல் சொசைட்டியின் ஆராய்ச்சியாளராக தேர்வான முதல் இந்திய பெண் ஆராய்ச்சியாளராவார்.

"இது உண்மையிலேயே கவலை தரக்கூடிய திரிபுதானா என்பதை கவனத்தில் கொள்ள உங்களுக்கு உயிரியல் மற்றும் மருத்துவ ரீதியிலான தகவல்கள் தேவை," என்கிறார் ககன்தீப் கங்.

இதன்பொருள், இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் திரிபு ஏற்கெனவே அமலில் உள்ள தடுப்பூசிகள் அல்லது வேறு வகை கொரோனா திரிபால் உருவான எதிர்ப்பணுக்களை எதிர்த்து செயல்படக்கூடியதா என்பதை தீர்மானிக்க ஆய்வாளர்களுக்கு மேலதிக ஆராய்ச்சி தேவைப்படும்.

மேலும், பரவும் தன்மை, பரிசோதனை முறையில் ஏற்படும் தோல்வி, வழக்கமான பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாத திரிபுகள், இந்த திரிபு தான் மேலதிக கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதிப்படுத்த விரிவான தரவுகள் ஆய்வாளர்களுக்கு தேவை.

"சில வகை நோய் பாதிப்புடன் உள்ள சில நூறு நோயாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும். பிறகுதான் அவர்கள் மிகவும் ஆபத்தான அல்லது பழைய திரிபு பாதிப்பை விட அதிக பாதிப்பை தரக்கூடிய சமீபத்திய திரிபின் பாதிப்பை அதிகமாக எதிர்கொண்டுள்ளார்களா என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் ககன்தீப் கங்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா ஸ்பைக் புரதத்தில் K417N என்றழைக்கப்படும் கூடுதல் பிறழ்வை டெல்டா பிளஸ் திரிபு கொண்டிருக்கிறது. இந்த வகை பிறழ்வு, தென்னாப்பிரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட பீட்டா, காமா திரிபுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பீட்டா வகை திரிபு, தென்னாப்பிரிக்காவில் கொரோனா முதல் அலையின்போது மருத்துவமனையில் நோயாளிகள் சேரவும் உயிரிழப்பு ஏற்படவும் காரணமாக இருந்த நிலையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. காமா வகை திரிபு, வேகமாக பரவக்கூடிய நிலையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.)

இதுபோன்ற திரிபுகளின் தாக்கம் மற்றும் பரிசோதனை தரவுகளை GISAID என்ற தளம் ஒருங்கிணைக்கிறது. இதில்தான் உலக அளவில் கண்டறியப்படும் தங்களுடைய ஆராய்ச்சி முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.

"இதுவரை 166 மாதிரிகள் டெல்டா பிளஸ் என்றழைக்கப்படும் திரிபுடன் தொடர்புடையவை என இந்த தளத்தில் பகிரப்பட்டுள்ளன. ஆனால், டெல்டா வகை திரிபுடன் ஒப்பிடும்போது டெல்டா பிளஸ் திரிபு மிகவும் ஆபத்தானது என்ற முடிவுக்கு வர இந்த தரவுகள் போதுமானதாக இல்லை," என்று லூயிஸியானா மாகாண பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் மைய நோய்த்தொற்றுயியல் நிபுணரான டாக்டர் ஜெரமி கமில் கூறுகிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலோ அல்லது பலவீனமான உடல்நிலை மற்றும் முழுமை பெறாத தடுப்பூசி டோஸ் பெற்றுக் கொண்டவர்கள் இடையிலோ பரவக்கூடிய தன்மையை டெல்டா பிளஸ் திரிபு கொண்டிருக்கலாம் என்று டாக்டர் கமில் என்னிடம் கூறினார்.

"நான் அமைதியைத்தான் காப்பேன். டெல்டா திரிபின் பாதிப்பில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய வகையில், டெல்டா பிளஸ் என அழைக்கப்படும் திரிபால் அதிக ஆபத்து ஏற்படும் என்பதை தீர்மானிக்கும் தரவுகளை இந்தியாவோ உலகின் வேறெந்த நாடுகளோ இதுவரை வழங்கியதாக நான் கருதவில்லை," என்கிறார் கமில்.

இந்தியாவில் மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மரபணு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள 28 பரிசோதனை கூடங்கள், டெல்டா வகை திரிபுடன் தொடர்புடைய எல்லா பிறழ்வுகளையும் ஆய்வு செய்து வருகின்றன. அந்த ஆய்வுக்கூடங்களில் ஒன்றான சிஎஸ்ஐஆர், மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால், "டெல்டா திரிபுடன் தொடர்புடைய அனைத்தும் கவலை தரக்கூடிய திரிபுகள்தான். எனவே, டெல்டா பிளஸ் திரிபை அந்த வரிசையில் அடையாளப்படுத்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல," என்று கூறுகிறார்.

டெல்டா பிளஸ் திரிபு, பொது சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என பீதியடைய தேவையில்லை. அதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மோசமான கட்டத்தை நாம் இன்னும் அடையவில்லை. எனினும், அதன் தாக்கத்தை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். பொது சுகாதாரத்தை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன என்கிறார் டாக்டர் அனுராக்.

ஆனால், டெல்டா திரிபு விவகாரத்துக்கு இந்திய அரசு, அதீத பார்வையுடன் எதிர்வினையாற்றுவதாகக் கூறும் டாக்டர் கமில், பின்னாளில் அரசு தனது நிலையை அடக்கி வாசிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :