கொரோனா தடுப்பூசி: கோவோவேக்ஸ், பயாலஜிகல் இ உட்பட இந்தியாவின் தடுப்பூசிகள் பற்றி நமக்கு என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில், இந்தியா தன் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவிருக்கும் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் பயன்படுத்த தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டது என நிரூபணமாகியுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.
அதே போல, இந்தியாவைச் சேர்ந்த பயாலஜிகல் இ என்கிற நிறுவனத்திடம், இந்திய அரசு 300 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை ஆர்டர் செய்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
உலகிலேயே அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 3.3 கோடி பேரோடு அமெரிக்க முதலிடத்திலும், 2.9 கோடி பேருடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 1.75 கோடி பேருடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
அதே போல மூன்று லட்சம் கொரோனா மரணங்களைக் கடந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு மூன்றாவது நாடாக இருக்கிறது இந்தியா.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறது இந்தியா. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியோ அத்தனை வேகமாக செயல்படவில்லை. தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் மக்களுக்கு இருக்கும் தயக்கம் போன்ற மற்ற சில பிரச்சனைகளும் இருக்கின்றன.
கோடிக்கணக்கான பேர் வாழும் இந்தியாவில் வெறும் 3.5 சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் 15 சதவீத மக்கள் மட்டுமே தங்களின் முதல் டோஸை இதுவரைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது கோவோவேக்ஸ் தடுப்பூசி கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Images
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா உடன் 200 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
அடுத்த செப்டம்பருக்குள் இந்தியாவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி சந்தைக்கு கொண்டு வரப்படலாம் என நம்பிக்கை தெரிவித்தார் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறினார்.
மேலும் கோவோவேக்ஸ் தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் நவம்பர் மாதத்துக்குள் நிறைவடையலாம் எனவும் கூறினார்.
நோவாவேக்ஸ் நிறுவன தடுப்பூசி மீதான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே, இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் உலக தரவுகளின் அடிப்படையில், சீரம் நிறுவனம் உற்பத்திக்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.
நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இரண்டு டோஸ்களைக் கொண்டது.
இது கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளர்கள் மத்தியில் 91 சதவீதம் செயல் திறனும், மிதமான மற்றும் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதில் 100 சதவீதம் செயல் திறனும் கொண்டிருப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.
'பயாலஜிகல் இ' தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவைச் சேர்ந்த பயாலஜிகல் இ என்கிற நிறுவனத்திடம், அரசு 300 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது.
அவசர பயன்பாட்டுக்கு அனுமதி பெறாமல் இருக்கும் ஒரு தடுப்பூசிக்கு இந்திய அரசு ஆர்டர் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த ஆர்டரின் மதிப்பு 206 மில்லியன் அமெரிக்க டாலர். இந்த தடுப்பூசி அமெரிக்காவின் டைனாவேக்ஸ் மற்றும் பெய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து மேம்படுத்தப்பட்டது.
பெயரிடப்படாத இந்த நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இந்த கொரோனா தடுப்பூசி கிடைக்கத் தொடங்கும் என கூறியுள்ளது இந்திய அரசு.
இந்தியாவில் நிறைய கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வர வேண்டும், தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மற்ற நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கு, இந்திய அரசு அவசர பயன்பாட்டுக்கு அனுமதியளித்தது.
அதாவது ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கத் தொடங்கும். இந்தியாவில் கிடைக்கும் அல்லது கிடைக்கவிருக்கும் மற்ற கொரோனா தடுப்பூசிகளின் நிலை என்ன? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஸ்புட்னிக் V தடுப்பூசி குறித்து நமக்கு என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images
ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் இருக்கும் கமலேயா இன்ஸ்டிட்யூட்டால் தயாரிக்கப்பட்டது. இறுதி பரிசோதனை குறித்த தரவுகள் வெளியாவதற்கு முன்னரே இத்தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதால் தொடக்கத்தில் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது.
தற்போது ஸ்புட்னிக் V-யின் நன்மைகள் விளக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
கொரோனா வைரஸின் ஒரு சிறு பகுதியை நம் உடலில் எடுத்துச் செல்ல, ஒரு சளி வைரஸைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் மரபணுக்கள் பாதுகாப்பாக நம் உடலுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே நாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவுக்கு ஆளாகாமல், நம் உடல், கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து, அதனோடு சண்டையிட கற்றுக் கொள்கிறது.
இத்தடுப்பூசி மருந்தை 2 - 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம். எனவே இந்த கொரோனா தடுப்பூசியை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான சரக்கு போக்குவரத்து எளிதாகிறது.
வேறுபட்ட இரண்டாவது டோஸ்

பட மூலாதாரம், Getty Images
மற்ற கொரோனா தடுப்பூசிகளைப் போல இல்லாமல், ஸ்புட்னிக் V தடுப்பூசிகளில், மெல்லிய வேறுபாடு கொண்ட இரண்டு வகை தடுப்பூசி மருந்துகள் இரண்டு டோஸ்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் 21 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது.
இந்த இரண்டு டோஸ் மருந்துகளும் கொரோனா வைரஸின் ஸ்பைக்குகளை இலக்கு வைத்து தாக்குகின்றன. ஆனால் வேறுபட்ட வெக்டார்களைப் பயன்படுத்துகின்றன.
ஒரே மருந்தை இரண்டு முறை செலுத்துவதற்கு பதிலாக, இரண்டு வேறுபட்ட மருந்து கொண்ட டோஸ்களைச் செலுத்துவதால், நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முடியும் என்பது தான் இதன் நோக்கம். இதனால் தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கலாம்.
கடந்த மே மாதம் இந்தியாவுக்கு முதல் தவணையாக 125 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தான் ஸ்புட்னிக் V தடுப்பூசியை சந்தைப்படுத்துகிறது. இவ்வமைப்பு 750 மில்லியன் டோஸ்களைத் தயாரிக்க ஆறு உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களோடு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறத என அறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன.
ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு அர்ஜென்டினா, பாலத்தீனம், வெனிஸ்வேலா, ஹங்கேரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான் உட்பட இதுவரை 60 உலக நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கோவேக்சின் குறித்து நமக்கு என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images
கோவேக்சின், செயலற்ற கொரோனா வைரஸைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசி இது. இதை ஆங்கிலத்தில் Inactivated Vaccine என்கிறார்கள். எனவே இதை உடலில் செலுத்துவது பாதுகாப்பானது.
இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் என்கிற, 24 ஆண்டுகளாகச் செயல்படும் இந்திய நிறுவனம் உருவாக்கியது. இதுவரை இந்த நிறுவனம் 16 தடுப்பூசிகளை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி தனிமைப்படுத்தி வைத்த கொரோனா வைரஸ் மாதிரியைக் கொண்டு, கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது பாரத் பயோடெக்.
இந்த தடுப்பூசியை நம் உடலில் செலுத்தும் போது, நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம், இறந்த கொரோனா வைரஸைக் கூட அடையாளம் கண்டு, அதை எதிர்க்க ஆன்டிபாடிக்களை உருவாக்கும்.
இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்துகள் நான்கு வார இடைவெளியோடு வழங்கப்படுகிறது. இத்தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம்.
இந்த தடுப்பூசியின் செயல் திறன் 81 சதவீதமாக இருப்பதாக, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் முதல் நிலைத் தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு நெறியாளர்கள், இத்தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்த போதே கடந்த ஜனவரியில் 2021-ல் அவரசர அவசரமாக அனுமதி கொடுக்கப்பட்டதற்காக பொதுவெளியில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நிபுணர்கள் இத்தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பினர் என்பது நினைவுகூரத்தக்கது.
கோவேக்சின் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு, கடந்த ஜனவரி 2021-ல் கோவேக்சின் தடுப்பூசியை 'கட்டுப்படுத்தப்பட்ட அவசர பயன்பாட்டுக்கு' அனுமதி வழங்கியதில் தொடங்கியது சர்ச்சை.
சோதனையில் இருக்கும் தடுப்பூசிக்கு எப்படி அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது என நிபுணர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
முழுமையாக ஆராயப்படாத தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதன் பின்னணியில் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள முடியவில்லை என 'ஆல் இந்தியா டிரக் ஆக்ஷன் நெட்வொர்க்' என்கிற அமைப்பு கூறியது. அதோடு, கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகள் இல்லாதது மிகவும் கவலையளிக்கிறது எனவும் குறிப்பிட்டது.
இத்தனை பிரச்னைகள் எழுந்த போதும், கோவேக்சின் மருந்தை உற்பத்தி செய்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பும் கோவேக்சின் மருந்து பாதுகாப்பானது, கொரோனா வைரஸுக்கு எதிராக அருமையாக எதிரிவினையாற்றுகிறது என தங்கள் தரப்பை நியாயப்படுத்தினார்கள்.
நாட்டில் மிக மோசமான, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்க்கு போதுமான மருந்துகள் இல்லாத காலகட்டத்தில், இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஒரு மருந்தை அவசர தேவைக்குப் பயன்படுத்த உடனடியாக அனுமதி கொடுக்க இந்தியாவின் மருத்துவ பரிசோதனை விதிகளில் இடமிருப்பதாகக் கூறியது பாரத் பயோடெக் நிறுவனம்.
வரும் ஜூலை மாதத்துக்குள், மூன்றா கட்ட மருத்துவ பரிசோதனை குறித்த தரவுகள் வெளியிடுவோம் என கூறியுள்ளது.
கோவிஷீல்டு குறித்து நமக்கு என்ன தெரியும்?

பட மூலாதாரம், Getty Images
ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனீகா கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
'அடினோவைரஸ்' எனப்படும் சிம்பன்சி விலங்குகளில் காணப்படும் பொதுவான சளி வைரஸில் இந்த கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வைரஸை, கொரோனா வைரஸ் போல உருமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் அவ்வைரஸ் உடலுக்கு எந்த வித உபாதையையும் ஏற்படுத்தாது.
இந்த தடுப்பூசியை நம் உடலில் செலுத்திய பின், அது நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆன்டிபாடிக்களை உருவாக்கச் செய்து, கொரோனா வைரஸ் வந்தால் தாக்கி அழிக்கத் தயார்படுத்தும்.
இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக நான்கு முதல் 12 வார கால இடைவெளியில் செலுத்தப்படுகிறது. 2 - 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்து மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல் திறன் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இத்தடுப்பூசியின் சர்வதேச பரிசோதனையில் முதலில் பாதி டோஸையும் பிறகு முழு டோஸையும் செலுத்தினால் 90 சதவீதம் செயல் திறனோடு இருப்பதாகக் காட்டுகிறது.
ஆனால் பாதி டோஸ் அல்லது முழு டோஸ் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக போதுமான தரவுகள் இல்லை.
முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையில் நீண்ட கால இடைவெளி இருக்கும்பட்சத்தில், அது தடுப்பபூசியின் செயல் திறனை அதிகரிக்கும் என, இதுவரை பிரசுரிக்கப்படாத தரவுகள் குறிப்பிடுகின்றன. இப்படி ஒரு சிறு குழுவினருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட போது, முதல் டோஸ் செலுத்தப்பட்ட பிறகு அதன் செயல் திறன் 70 சதவீதமாக இருந்தது.
பிரேசில், பிரிட்டன் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருட்துவ பரிசோதனையின் அடிப்படையில்
கோவிஷீல்ட் தடுப்பூசி அதிக செயல்திறன் கொண்டது என சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கூறுகிறது.
மருத்துவ பரிசோதனைகள் மூன்று கட்டங்களைக் கொண்டது. இத்தடுப்பூசி நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வைரஸுக்கு எதிராக சிறப்பாக எதிர்வினையாற்ற வைக்கிறதா அல்லது ஏதாவது ஏற்றுக் கொள்ள முடியாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டறிய இந்த பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
வேறு ஏதாவது தடுப்பூசிகள் இருக்கின்றனவா?

பட மூலாதாரம், Getty Images
மற்ற தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள், பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்த பல்வேறு கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன.
சைகோவ் டி - சைடஸ் கெடிலா என்கிற அஹமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
பயாலஜிக்கல் இ என்கிற நிறுவனம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை தயாரிக்க உள்ளது.
HGCO19 என்கிற இந்தியாவின் முதல் எம் ஆர் என் ஏ கொரோனா தடுப்பு மருந்தை புனேவைச் சேர்ந்த ஜினோவா என்கிற நிறுவனம், அமெரிக்காவின் சியாட்டலைச் சேர்ந்த ஹெச் டி டி பயோடெக் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்தோடு இனைந்து உருவாக்கிக் இருக்கிறது.
பாரத் பயோடெக் நிறுவனம் நாசி வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை மேம்படுத்தி இருக்கிறது.
இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்த நாடுகள் எவை?

பட மூலாதாரம், Getty Images
லத்தீன் அமெரிக்கா, கரீபியா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள 95 நாடுகளுக்கு 6.6 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா தடுப்பூசி ஏற்றுமதி செய்த நாடுகளில் பிரிட்டன், கனடா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளும் அடங்கும்.
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பொசிகளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன அல்லது நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் அந்தந்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களின் கீழும் இந்தியாவில் இருந்து சில நாடுகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் 'கோவேக்ஸ்' திட்டத்தின் கீழும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கோவேக்ஸ் திட்டம் உலகின் 190 நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்க உலக சுகாதார அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஒரு வருடத்திற்குள் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை உலக நாடுகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த மார்ச் மாதத்தில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனீகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியின் அனைத்து வகையான ஏற்றுமதிக்கும் இந்தியா தற்காலிக தடை விதித்தது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால், இந்தத் தடுப்பூசிக்கான உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்திய அரசு கூறியது.
பிற செய்திகள்:
- பேய் பிடித்தல் என்பது உண்மையா? - மருத்துவ உலகம் சொல்வது என்ன?
- கமலின் எதிர்கால அரசியல்: தனி அறை விசாரணைகளின் பின்னணி தகவல்கள்
- ஆப்பிரிக்க வைரத்தை தேடி அலைந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்
- சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி அடித்து கொன்ற தாய் உட்பட 3 பெண்கள்
- கொரோனா தடுப்பூசியால் வயிற்றில் ரத்தம் உறையுமா? இரு சம்பவங்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்
- தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
- நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












