கமலின் எதிர்கால அரசியல்: தனி அறை விசாரணைகளின் பின்னணி தகவல்கள்

தனி அறையில் நடக்கும் தொடர் விசாரணைகள் - கமலின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

பட மூலாதாரம், MNM

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தை மறுசீரமைக்கும் பணிகளில் கமல் ஈடுபட்டு வருகிறார். `தனி அறையில் நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் அவர் விவாதித்து வருகிறார். விரைவில் மக்கள் நீதி மய்யம் 2.0 என்ற வடிவத்தைப் பார்க்கலாம்' என்கின்றனர் ம.நீ.ம நிர்வாகிகள். என்ன நடக்கிறது?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை தேர்தலை சந்தித்தன. ஆனால், இக்கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இப்படியொரு தோல்வியை கமல்ஹாசன் எதிர்பார்க்கவில்லை. அக்கட்சியின் வாக்கு சதவிகிதமும் 3.7 என்ற அளவில் இருந்து 2.5 ஆக குறைந்தது.

தினசரி 10 பேர்

தனி அறையில் நடக்கும் தொடர் விசாரணைகள் - கமலின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

பட மூலாதாரம், MNM

இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சென்னை மண்டல பொறுப்பாளராக இருந்த கமீலா நாசர் வெளியேறினார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகனுக்கு சீட் கொடுக்கப்பட்டதால், கமீலா கோபப்பட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, டாக்டர் மகேந்திரன், சி.கே.குமரவேல், முருகானந்தம் எனப் பலரும் விலகினர். ஒருகட்டத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவும் விலகினார். மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளாகப் பார்க்கப்பட்ட பலரும் விலகியது, அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் தொடர் சந்திப்பை கமல் நடத்தி வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என அனைவருடன் தனித்தனியாக கமல் விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

``கட்சி அலுவலகத்தில் தினசரி 10 பேரை கமல் சந்தித்து வருகிறார். கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை முற்றிலும் மாற்றியமைப்பதுதான் அவரது முதல் பணியாக உள்ளது. இந்தச் சந்திப்பில் கட்சி சார்பாக போட்டியிட்டவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல், வெளியில் இருந்து வந்து ம.நீ.ம சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களிடம் பேசி வருகிறார். இதன்மூலம், கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையளிப்பது ஒருபுறம் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட திறமைகளை அவர் கேட்டறிகிறார். இந்தச் சந்திப்பில், `கட்சியை எந்த வகையில் மாற்றியமைக்கலாம்? அடுத்த கட்டமாக எப்படிக் கொண்டு செல்வது, இதுவரையில் கட்சிக்காக நீங்கள் செய்த விஷயங்கள் என்ன? வேறு எந்த வழிகளில் எல்லாம் உங்களால் பங்களிப்பை அளிக்க முடியும்?' என பல கேள்விகளை முன்வைக்கிறார்" என்கிறார் ம.நீ.மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

கமலின் மனநிலை என்ன?

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``தினசரி நடக்கும் இந்தச் சந்திப்பின் மூலம், கட்சியின் நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் இடையே புரிதலை ஏற்படுத்துவதுதான் அவரின் நோக்கமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பல்வேறு கசப்பான சம்பவங்களைப் பேசவும் இந்தச் சந்திப்பு பயன்பட்டு வருகிறது. `கட்சி நிர்வாகிகளின் இன்றைய மனநிலை என்ன? ஆர்வத்தோடு கட்சிக்குள் வந்தவர்கள், தற்போது ம.நீ.மவை எப்படிப் பார்க்கிறார்கள்?' எனவும் கேட்கிறார். அவரது அறைக்குள் நுழைந்தவுடன், `மனம் திறந்து பேசுங்கள்' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக உள்ளது.

மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், வேட்பாளர்களின் நடவடிக்கைகள், கட்சித் தொண்டர்களின் மனநிலை ஆகியவை குறித்து கேட்டறிகிறார். கட்சியின் நடவடிக்கைகளையும் நிர்வாகக் கட்டமைப்பையும் முற்றாக மாற்றியமைக்கும் முடிவில் உள்ளார். தற்போதுள்ள நிர்வாகிகளை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறார்" என்கிறார்.

எங்கே 7 லட்சம் வாக்குகள்?

தனி அறையில் நடக்கும் தொடர் விசாரணைகள் - கமலின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

பட மூலாதாரம், Getty Images

``மக்கள் நீதி மய்யத்தை பழையபடி கொண்டு செல்ல முயற்சிக்கும் கமலின் திட்டம் ஈடேறுமா?" என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``நாடாளுமன்றத் தேர்தலில் 17 லட்சம் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. அப்போது, `கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார்' என்பதைத் தவிர எங்களிடம் வேறு ஆயுதங்கள் எதுவும் இல்லை. அந்த ஒரு தகவலுக்காகத்தான் 17 லட்சம் வாக்குகள் கிடைத்தன. அந்தத் தேர்தலில் நாங்கள் பெரிதாக எதையும் பேசவில்லை. மோடியை மையப்படுத்தி தேர்தல் நடந்தாலும் எங்களுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தன.

ஆனால், இந்த வாக்குகளில் 7 லட்சம் வாக்குகள் சட்டமன்றத் தேர்தலில் குறைந்துவிட்டன. `இதற்குக் காரணம் கூட்டணியா..வேட்பாளர்கள் தேர்வா.. நிர்வாகிகளின் மெத்தனப்போக்கா.. கட்சித் தலைமையிடம் மக்கள் எதிர்பார்த்த விஷயங்கள் கொண்டு சேர்க்கப்படவில்லையா?' எனப் பல கேள்விகள் எழுகின்றன. அப்படியானால், இதை சரிசெய்ய வேண்டும் என்றால் நிர்வாகத்திலும் செயலாக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``தற்போதுள்ள பொதுச் செயலாளர்கள் மற்றும் அணிகள் சரியாக உள்ளதா என்ற பரிசீலனை நடந்து வருகிறது. `நிர்வாகிகள் என்னதான் நினைக்கிறார்கள்? கட்சி சார்பாக செயற்குழு, பொதுக்குழு நடத்தினாலும் களத்தில் உள்ளவர்களிடம் என்ன கருத்து இருக்கிறது?' என்பதை அறியும் வகையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர்கள் என ஒவ்வொருவரிடமும் பேசி வருகிறார். அவரது அறைக்குள் சென்றவுடன் கதவு பூட்டப்பட்டுவிடும். யாரைப் பற்றி வேண்டுமானாலும் எந்தவிதத் தயக்கங்களும் இல்லாமல் குறைகளைக் கூறலாம். நிர்வாகத்தை மாற்றியமைத்து விட்டு கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் அவரது எண்ணமாக உள்ளது.

கோவை தெற்குத் தொகுதி ஆதங்கம்

தனி அறையில் நடக்கும் தொடர் விசாரணைகள் - கமலின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

பட மூலாதாரம், Twitter

இந்தச் சந்திப்பில், `கிராமங்கள் வரையில் ஏன் மக்கள் நீதி மய்யத்தால் சென்று சேர முடியவில்லை. அதற்கான மாற்று என்ன?' என கேட்கிறார். அவரைப் பொருத்தவரையில், `வாழ்க்கையின் எஞ்சிய பகுதி அரசியல்தான்' என்பதில் தெளிவாக இருக்கிறார். சினிமா என்பதை வருமானத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறார். 2018 ஆம் ஆண்டே, `நான் வந்துவிட்டேன். என்னை மக்கள் எங்கே வைக்கிறார்களோ, அங்கிருந்து செயல்படுவேன்,' என்றார். அதற்கேற்ப, தன்னுடைய தோல்வி, கட்சித் தோல்வி ஆகியவற்றையெல்லாம் அவர் மறந்து விட்டார்.

இதில் இருந்து மீள்வதற்கும் மாற்றத்துக்கான வழிகளைப் பற்றி மட்டுமே அவர் யோசித்து வருகிறார். கோவை தெற்குத் தொகுதியில் அவர் தோற்றபோது, தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே, `அவர் வெற்றி பெற்றிருக்கலாம்' என ஆதங்கப்பட்டனர். அந்த அன்பை தன்னுடைய பலமாக பார்க்கிறார். மக்கள் நம்பிக்கைக்கேற்ப செயல்பட்டால் முன்பைவிட சிறப்பான இடத்தை மக்கள் கொடுப்பார்கள் எனவும் நினைக்கிறார்," என்கிறார்.

``முக்கிய நிர்வாகிகளின் விலகல்கள் கட்சித் தொண்டர்களுக்கு சோர்வை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறதே?" என்றோம். `` இது உண்மைதானே.. நான் ஒருவரை அறைந்துவிட்டால் அவரை அடித்தது மட்டும்தான் தெரியும். அவர் என்னுடைய காதுக்குள் என்ன சொன்னார் என்பது தெரியப் போவதில்லை. அவர்களின் விலகல்கள் என்பது கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. அது அந்த நேரத்துக்கு மட்டும்தான். அதேநேரம், கமல் என்ன செய்யப் போகிறார் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்," என்கிறார் விரிவாக.

இன்னும் ஒரு வாரத்தில் புதிய நிர்வாகிகளின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட இருக்கிறார். `அது எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது?' என்ற ஆவலும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :