கொரோனா தடுப்பூசி அதிகம் போட்ட தெற்கு டெல்லி, மாஹே, குறைவாகப் போட்ட திருவண்ணாமலை - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்திகள், டெல்லி
சுமார் 140 கோடி மக்கள் வாழும் நாடான இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை என்பது எப்போதும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
இந்த தடுப்பூசி இயக்கம் தொடக்கத்தில் ஓரளவுக்கு சுமுகமாகவே இருந்தது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பிறகு மே மாதம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு அனுமதி வழங்கியது. அப்போது நாட்டின் தடுப்பூசி கையிருப்பு மிகவும் குறைந்தது. கொரோனா இரண்டாவது அலையால் கொரோனா தடுப்பூசியின் தேவை மேலும் அதிகரித்தது.
இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தில் பற்றாக்குறை மட்டுமே சவாலாக இருக்கவில்லை. தனது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இந்தியாவின் முயற்சி, திட்டமிடல், உள்கட்டமைப்பு, தவறான பிரசாரத்தை எதிர்கொள்வது போன்ற பல காரணங்களால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், தடுப்பூசி போடும் பணியில் ஒரே சீரான வெற்றி கிடைக்கவில்லை.
தரவுகள் கிடைத்த 729 மாவட்டங்களில், தனி நபர் தடுப்பூசி விகிதங்களில் பரவலான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை, பிபிசி பகுப்பாய்வு காட்டுகிறது.
சில மாவட்டங்களில் அவற்றில் உள்ள மக்கள் தொகையில் பாதி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் மற்ற சில மாவட்டங்களில் 3 சதவீதம் அளவுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சில நகர்ப்புறம் மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள், மற்ற பெரிய அல்லது கிராமப்புற மாவட்டங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.

நான்கு மாவட்டங்களில் என்ன சரியாக நடந்தது, எங்கு தவறு நிகழ்ந்தது என்பதன் சுருக்கமான விவரங்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.
மாஹே மற்றும் தெற்கு டெல்லி ஆகிய மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. தெற்கு சல்மாரா மங்காச்சார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் கணிசமான எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பூசி போட போராடி வருகின்றன.
திட்டமிடல் முக்கியமானது

பட மூலாதாரம், COURTESY: SHIVRAJ MEENA
இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவின் தென் மேற்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஒரு சிறிய மாவட்டமான மாஹேவில் சிவ்ராஜ் மீனா பொறுப்பேற்றபோது அவர் தனது பணியை சிறப்பாக திட்டமிட்டு வைத்திருந்தார்.
கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படலாம் என்பதால் மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 31,000 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர் இருந்தார். ஆனால் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து சந்தேகப்படுவதையும், தொற்றுபயம் காரணமாக தடுப்பூசி மையங்களுக்கு வர தயக்கம் காட்டுவதையும் மீனா கண்டறிந்தார்.
வெறும் ஒன்பது சதுர கி.மீ (3.5 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இந்தியாவின் மிகச்சிறிய மாவட்டமான மாஹேவில், குறைந்த அளவிலான சுகாதார உள்கட்டமைப்பை வசதிகள் மட்டுமே இருந்தன. எனவே மீனா ஒரு திட்டத்தை வகுத்தார்.
"நான் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பெரியவர்களை கூட்டங்களுக்கு அழைத்தேன். அங்கு தடுப்பூசிகளின் செயல்திறனை விளக்கினேன். முன்னணி களப்பணியாளர்கள் ஊசி செலுத்திக் கொண்டபின் மிகக் குறைவான எதிர்வினைகளையே சந்தித்தனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன்," என அவர் கூறினார்.
பின்னர் அவர் சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்ட 30 குழுக்களை உருவாக்கினார். அவர்கள் வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு ஆலோசனை வழங்கல், பதிவுசெய்தல் மற்றும் தடுப்பூசிக்கு டோக்கன்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
அவர்களின் செயல்திட்டம் வெற்றி பெற்றது. மாஹேயின் மக்கள்தொகையில் 53% க்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தடுப்பூசி இயக்கத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டமாக திகழ்கிறது.
"நீங்கள் முதலில் சிக்கலை அடையாளம் காண வேண்டும்., அதன் பிறகு அதற்கேற்ப தீர்வை எட்ட முடியும்," என மீனா கூறினார்.
'நாங்கள் அச்சப்படுகிறோம், சந்தேகப்படுகிறோம்'

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின் தொலைதூர மாவட்டமான தெற்கு சல்மாரா மங்காச்சார், இதுவரை தடுப்பூசி வழங்கலில் மோசமாக செயல்பட்டுள்ள மாவட்டமாகும்.
வங்கதேசத்துடனான எல்லையில், விவசாயத்தை நம்பியுள்ள, பெரும்பாலும் இஸ்லாமிய சமூக மக்கள் வாழும் கிராமங்களை கொண்ட இந்த மாவட்டத்தின் 5 லட்சம் மக்கள் தொகையில் 3% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்துள்ளது.
"தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் இறந்துவிடுவார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்," என இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மோனோவர் இஸ்லாம் மொண்டல் என்ற விவசாயி கூறினார். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சதித்திட்டம் இது என அவர் குற்றம் சாட்டினார்.
பாஜகவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் தேவையில்லை என முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா கூறியது ஊடகங்களில் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.
"பாஜக முஸ்லிம் சிறுபான்மையினரை விரும்பவில்லை. அது எங்களை அசாமிலிருந்து வெளியேற்றும் என கூறுகிறது. அப்படியிருக்கும்போது எங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி கொடுக்கும், இந்த தாராள மனப்போக்கிற்கு காரணம் என்ன? இப்போது எங்களுக்கு இலவச தடுப்பூசிகளை ஏன் வழங்குகிறார்கள்? நாங்கள் பயப்படுகிறோம், சந்தேகப்படுகிறோம், எனவே இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை," என மொண்டல் கூறினார்.
இது மாவட்டத்தில் பலராலும் எதிரொலிக்கப்படும் ஓர் உணர்வாக இருக்கிறது. ஆனால் தடுப்பூசி விகிதங்கள் குறைவாக இருப்பதற்கு இது காரணமல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மாவட்டத்தின் மலைப்பாங்கான நிலப்பரப்பு தான் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் . மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தடுப்பூசி மையங்களுக்கு நீண்ட தூரம் நடந்து செல்ல விரும்பவில்லை என துணை ஆணையர் ஹிவ்ரே நிசர்க் கெளதம் கூறுகிறார்.
தவறான தகவல்களால் தடம் புரளும் தடுப்பூசி இயக்கம்

சமீபத்தில் தேர்தல் நடந்த மற்றும் குறைந்த அளவிலான தடுப்பூசிகளையே செலுத்தியுள்ள மற்றொரு மாநிலம் தெற்கில் உள்ள தமிழ்நாடு ஆகும்.
இங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் தங்கள் மக்கள்தொகையில் 4 - 6% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலை, ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்று.
"தேர்தலின் போது, கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படவில்லை" என தொலைக்காட்சி கேபிள்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் பணியைச்செய்யும் சரவணன் கூறினார்.
அவரது வேலை நிமித்தமாக அவர் மக்களின் வீடுகளுக்குள் செல்கிறார். ஆனால் அவர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. ஊசி போட்டுக்கொள்ள அவசரம் ஏதுமில்லை என்று அவர் தெரிவித்தார்.
"அவர்கள் இப்போது அதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் தேர்தலின் போது கொரோனா இல்லவே இல்லை என்பது போல மெளனமாக இருந்தனர்," என்கிறார் அவர்.
மற்றவர்கள் தடுப்பூசி மேலுள்ள பயத்தை குறிப்பிடுகிறார்கள். ஒரு பிரபல நடிகர் தடுப்பூசி போட்டுக்கொண்டு சில நாட்களில் இறந்துவிட்டார்.
"கிராமத்தில் தடுப்பூசி முகாம் இருந்தது. ஆனால் நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டு சில நாட்களிலேயே உயிரிழந்ததால் மக்கள் பயப்படுகிறார்கள். நான் எப்படியும் தடுப்பூசி போட்டுக்கொள்வேன். ஆனால் நான் எங்கும் போகாமல் வீட்டிலேயே தங்கியிருப்பதால், பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என நினைத்தேன்,"என்று ஒரு விவசாயி கூறினார்.
மாவட்டத்தில் தடுப்பூசி விகிதம் குறைந்ததற்கு, அதன் பெரிய அளவு மற்றும் மக்கள் தொகையே காரணம் என மாவட்டத்தின் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா சுட்டிக்காட்டினார்.
"தேர்தலுக்கு முன்பே கூட மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக தயக்கம் இருந்தது. இதை உடைப்பதற்குப் போராடிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் கிராமப்புற மக்களிடையே நிலவும் தடுப்பூசி தயக்கம் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகிறது," என அவர் குறிப்பிட்டார்.
உள்கட்டமைப்பு

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் தலைநகரில் குறிப்பாக தெற்கு டெல்லியில் சூழ்நிலை நேரெதிராக உள்ளது. தெற்கு டெல்லி, நகரத்தின் 11 மாவட்டங்களில் அதிக செல்வந்தர்கள் வாழும் மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.
தெற்கு டெல்லி தனது 11 லட்சம் மக்கள்தொகையில் 43% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளது.
தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால், ஆன்லைனில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வது என்பது 'முதலில் அழுத்துபவர்களுக்கே வெற்றி' என்கிற வேக விளையாட்டைப் போலிருக்கிறது" என பல நகர்ப்புற இந்தியர்கள் புகார் கூறுகின்றனர். ஆனால் தெற்கு டெல்லியில் வசிக்கும் 27 வயதான மஹிமா குலாட்டி அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர்.
"இதற்கு ஒரு சில நிமிடங்களே ஆனது. நான், என் சகோதரர் மற்றும் ஒரு சில நண்பர்களுக்காக முன்பதிவு செய்தேன். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட தொலைவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் எங்களுக்கு தடுப்பூசி கிடைத்தது," என அவர் கூறினார்.
"அங்கு கூட்டம் இல்லை. மிகவும் ஒழுங்காக, முறையாக தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது," என்றார் மஹிமா.
அதிக மக்கள் தொகை கொண்ட மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது தெற்கு டெல்லியில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி மையங்கள் இருப்பதும் இங்கு அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஒரு முக்கிய காரணம்.
"தடுப்பூசி மையங்களை விரைவாக அமைக்கக்கூடிய பெரிய தனியார், அரசு மருத்துவமனைகள் இங்கு இருப்பதும், தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் அதை செலுத்திக்கொள்ள முன்வரும் அதிக கல்வியறிவுள்ள மக்கள் இருப்பதும் எங்கள் அதிர்ஷ்டம்," என மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கிதா சக்ரவர்த்தி கூறினார்.
தெற்கு டெல்லியின் மிகப்பெரிய பலமே அதன் சுகாதார உள்கட்டமைப்பு தான். தடுப்பூசி உள்கட்டமைப்புக்கு இது சிறப்பாக உதவியது என அவர் குறிப்பிட்டார்.
"இது ஒரு நாளில் நீங்கள் உருவாக்கக்கூடிய விஷயமல்ல. தொற்றுநோய் நம் அனைவருக்கும் கற்பிக்கும் பாடம் இது," என அங்கிதா சக்ரவர்த்தி தெரிவித்தார்.
கூடுதல் செய்தி சேகரிப்பு:திருவண்ணாமலை: அ.தா. பாலசுப்ரமணியன்அசாமின் தெற்கு சல்மாரா மங்காச்சார்: திலீப் ஷர்மா
பிற செய்திகள்:
- "இபிஎஸ் ஒரு சர்வாதிகாரி, அதிமுகவை மீட்போம்" - கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பேட்டி
- கொரோனா மரணம் என குறிப்பிட்டு சான்றிதழ் தர மருத்துவமனைகள் தயங்குவது ஏன்?
- ஓபிஎஸ் சமரசம் ஆனது ஏன்? அதிமுக கூட்டத்தில் கடைசி நேர அதிரடி
- ஐந்து முறை இஸ்ரேல் பிரதமர், டிரம்புடன் நட்பு – நெதன்யாகுவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- ராமர் கோயில் நிலம்: வாங்கியவுடன் ரூ. 16 கோடி உயர்வு - புதிய சர்ச்சை
- விஷால், ஆர்.பி. செளத்ரி: வீதிக்கு வந்த பணப்பிரச்னை - என்ன நடந்தது?
- பாதி நேரம் ஐடி வேலை, மீதி நேரம் சமூக சேவை: வேலூர் இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை
- யார் இந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இணையத்தில் தேடப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












